விசித்திர தோற்றங்களில் பால்வெளிகள்!

இரஞ்சனி

வெள்ளிக்கிழமை, ஆவணி 29, 2043  16:16 இதிநே
Friday, September 14, 2012 16:16 IST

நீல வானத்தில் சிதறிக் கிடக்கும் மேகங்களில் விதவிதமான உருவங்களை கற்பனை செய்து பார்க்க பிடிக்குமா?


உங்கள் கற்பனை முடிவதற்குள் நகரும் மேகங்கள் வேறு உருவத்தில் மாறியிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறீர்களா?


ஆகாய விமானத்தில் மேகங்களுக்கு மேலே பறக்கும் போது கீழே பஞ்சுப்பொதிகளாய் மிதக்கும் மேகக்கூட்டங்கள் உங்களை கவர்ந்தது உண்டா?


அப்படியானால் உங்களுக்கு இந்தச்செய்தி ரொம்பப் படிக்கும்.

 

பால்வெளி மண்டலத்தில் சில விசித்திரமான உருவங்களுடன் கூடிய அண்டங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை ஆங்கில எழுத்துக்கள் (A-Z) ஒவ்வொன்றையும் ஒத்த உருவமுடையவைகளாக இரவு வானத்தில் தோற்றம் அளிக்கின்றன.

 

கேலக்ஸி ஜூ என்ற திட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளுகிறார்கள். அண்டத்தைப் பற்றிய புது நுண்ணறிவு பெறவும், தொலைநோக்கிகள் மூலம் தெரியும்  பல்லாயிரக்கணக்கான உருவங்களை சுருள் வடிவமாகவும், முட்டைவடிவமாக  வகைபடுத்தவும் விஞ்ஞானிகளுக்கு இந்தத் தன்னார்வத் தொண்டர்கள் உதவுகிறார்கள்.

 

கேலக்ஸி ஜூ திட்டத்தின் பின்னணியில் ஒரு சர்வதேசக்குழுவும் அவர்களுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வானவியலாளர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். பொதுமக்கள் இம்மாதிரி கண்டுபிடிப்புகளில் அதிகம் பங்குபெற வேண்டும் என்று இவர்கள் அழைப்பு விடுகிறார்கள்.

 

ஒரு இடத்தில் 250,000 க்கும் மேற்பட்ட, இதுவரை மனிதர்கள் பார்த்திராத  பால்வெளிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தன்னார்வத் தொண்டர்களின்  வகைப்படுத்துதல்  மூலம் நமது அண்டம் உருவாவதற்கான செயற்பாங்கு பற்றிய நம் புரிதல் அதிகரிக்கும்.  தன்னார்வத் தொண்டர்கள் வகைபடுத்தி வைத்திருக்கும் சுருள் மற்றும் முட்டை வடிவ பால்வெளிகளின் நடுவில் அத்தனை ஆங்கில எழுத்துக்கள் வடிவிலும் பால்வெளிகள் அமைந்துள்ளதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

 

இந்த கண்டுப்பிடிப்புகள் வேடிக்கையான இருந்தாலும் இந்த விசித்திரமான, இயல்பிற்கு மாறான உருவ அமைப்புகள் பால்வெளிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது என்ன நடக்கிறது என்பதையும் நமக்குத் தெரிவிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 

இனிமேல் பகலில் மேகங்களைக் கவனிப்பது போல இரவு வானில் ஆங்கில எழுத்துக்கள் தெரிகின்றனவா என்று தேடலாம்! யாருக்குத் தெரியும், நீங்களே ஒரு பால்வெளியை கண்டுபிடிக்கக் கூடும்!

seperator