வளையப் புழுவிற்கு பொறி  வைக்கும் ஃபில்கோக்சியா இலைகள்

- இரஞ்சனி

சனிக் கிழமைபுரட்டாசி 15, 2043 23:40 இதிநே
Monday, October 01, 2012 23:40 IST


மனிதர்களிலும், விலங்கினங்களிலும் சாக பட்சிணி, மாமிச பட்சிணி இருப்பது போலவே, தாவரங்களிலும் மாமிச உண்ணிகள் இருக்கின்றன. இந்தவகைத் தாவரங்களின் இலைகளின் மேலே இருக்கும் ஒருவித ஒட்டுப்பசை சிறிய பூச்சிகளைக் கவருகின்றன. இத்தாவரங்களின் இலைகளின் மேல் பூச்சிகள் உட்கார்ந்த உடன், இலைகள் அப்படியே மூடிக் கொண்டுவிடும்.


அண்மைக்காலத்தில், இத்தாவரவகையைச் சேர்ந்த சற்று வித்தியாசமான தாவரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த மாமிச உண்ணித் தாவரங்கள் பூமிக்கு அடியில் இருக்கும், உருளை வடிவிலான ஒட்டுண்ணி வகை நூற்புழுக்களை, தங்களது இலைகளையே  கண்ணியாகப் பயன்படுத்தி பிடித்துத் தின்னுகின்றன.


இந்தத் தாவரங்கள் ஃபில்கோக்சியா என்று அழைக்கப் படுகின்றன. இவை பிரேசில் நாட்டின் உயர்நிலங்களில், வெள்ளை மணல் நிரம்பிய திட்டுக்கள் நிறைந்த கேம்போ ரூபெஸ்ட்ரா (Campo Rupestra) என்ற இடத்தில் காணப் படுகின்றன. இந்த விசித்திரமான தாவர வகைகள் ஊட்டசத்து குறைந்த இடங்களில் வளரும். இவை  இயற்கையாகவே முட்கள் நிறைந்து ஊதா நிற மலர்களுடன் காணப்படும். இதன் இலைகள் பூமிக்குள் புதைந்து இருக்கின்றன. இந்த தாவரங்கள் வெள்ளை மணற்பாங்கான இடங்களில் செழித்து வளருகின்றன.


மணல் திட்டுகள் சுமார் 300 நீட்டளளவில், பிரேசில் நாட்டின் பல மலைப் பகுதிகளில் காணப்படுவதாக தாவர சூழலியல் வல்லுனர் திரு ராஃபெல் ஒலிவெரியா கூறுகிறார். இவர் சா பவுலோவில் உள்ள கேம்பையின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர். ஆனால் இவை சுற்றுச்சூழல் மாற்றங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு அழிந்தும் போகக் கூடும் என்று இவர் கூறுகிறார்.


இந்த ஃபில்கோக்சியாவின் இலைகள் ஒரு மில்லிமீட்டர் அகலம் இருப்பதாகவும், மணலால்  மறைக்கப்பட்டு  இருந்த போதிலும், இவை ஒளிச்சேர்க்கை செய்ய முடிவது ஒரு வியக்கத்தக்க செய்தி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்களுக்குப் புதிராக இருந்தது என்னவெனில், இந்தத் தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கை செய்ய எங்கிருந்து மூலப்பொருட்கள் கிடைக்கின்றன என்பதுதான்.


இதற்கு முன்னால் ஃபில்கோக்சியா இலைகளில், பல மாமிச உண்ணித் தாவரங்களில் காணப்படும் சுரப்பிகளை ஒத்த வடிவமைப்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மின்னணு உருபெருக்கியின் மூலம் பார்த்தபோது நுண்ணிய வட்ட வடிவப் புழுக்கள் இலைகளின் மேல் உட்கார்ந்திருப்பது தெரிய வந்தது. இவைகள் இந்த இலைகளின் மேல் என்ன செய்கின்றன என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகச்சிறிய அளவில் ஒரு உணவுச் சங்கிலியை உருவாக்கினர். தம்முள் வேறுபாடுகள் கொண்ட, சற்று கூடுதல் எடையுள்ள தழைச்சத்து நுண்ணுயிரிகளை வளர்த்து, இந்த உணவை உருளைப் புழுக்களுக்குக் ஊட்டினர். இந்த உணவில் இருந்த கனரக தனிமத்தை இந்தப் புழுக்கள் தங்கள் திசுக்களுக்குள் உறிஞ்சிக் கொண்டன.


பின்னர் இப்புழுக்களை ஃபில்கோக்சியா தாவரங்களுக்கு அருகில் வைத்தனர். அடுத்த நாள் இப்புழுக்கள் இத்தாவரத்தின் இலைகளின் மீது ஏறியிருந்தன. 48 மணிநேரத்திற்குள் புழுக்களின் உடலில் இருந்த கனரக தழைச்சத்து 15 சதவிகிதம் இலைகளினால் இழுத்துக் கொள்ளப்பட்டு இருந்தது.


இந்த ஆராய்ச்சியின் மூலம், புழுக்களை இந்த தாவரம் உண்பது மட்டுமல்ல; இவைகளின் ஆகாரம் முக்கால் பகுதி இந்தப்  புழுக்களை உள்ளடக்கியதாகவே இருப்பதும் தெரிய வந்துள்ளது.


‘பூமிக்குள் இருக்கும் இலைகள் இந்தப் புழுக்களைத் தின்று விட்டதை முதன் முதலில் என்னால் நம்பவே முடியவில்லை’ என்கிறார், திரு ஒலிவெரியா. இலைகளின் மேல் பூஞ்சையோ, இலைகள் சம்பந்தப்பட்டவேறு உயிர் பிராணிகளோ இல்லை.


இப்படிப் புழுக்களைத் தின்னும் தாவரம் ஃபில்கோக்சியா ஒன்று மட்டுமல்ல. நீர் தாவரமான ப்ளாடர்வோர்ட் (Bladderwort) 

கூட இந்த மாதிரி புழுக்களைப் பிடிக்கும்.


பிரேசில் நாட்டில் இந்த ஃபில்கோக்சியா தாவரங்களின் அபூர்வமான மூன்று வகைகள் காணக் கிடைக்கின்றன. இவை அந்தப் பிராந்தியதிற்குரிய தாவரங்களான Genus Utriculara வைப் போன்று இருக்கின்றன.


பூமிக்கு அடியிலுள்ள தண்டுகளும், கேடய உருவிலான மணற் பரப்பினை ஒட்டி அல்லது கீழே இருக்கும் இலைகளும் இந்தத் தாவரத்தின் தனித் தன்மைகள் ஆகும். இவற்றின் இலைகள் ஒரு குண்டூசி அளவில் இருக்கின்றன. இவை வெள்ளை மணற் பரப்பில் இருக்கும் சின்னசின்ன துளைகள் மூலம் ஒளியை ஈர்த்துக்கொள்கின்றன.


இந்தத் தாவரம் இரையை செரிமானம் செய்யும் முறையும், அதிலிருந்து தமக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறும் முறையும் பார்க்கையில் இவை மாமிச உண்ணிகளே என்பது புலனாகிறது.

seperator