குளவியும் சிலந்தியும்!

- இரஞ்சனி

சனிக்கிழமை, புரட்டாசி 14, 2043 23:40 இதிநே
Sunday, September 30, 2012 23:40 IST


சின்னஞ்சிறு புழுவிலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரை தங்கள் வாழ்க்கையை இடையூறுகளை வென்று, 

நல்லவிதமாக வாழ மிகக் கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கிறது.


இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் இடையே ‘உணவு சங்கிலி’ என்பது எல்லா உயிரினங்களையும் இணைக்கும், 

பிணைக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத தொடர்பு.


சிலந்தி இனங்களைப் பற்றியும், குளவி இனங்கள் பற்றியும் தனித் தனியே நிறைய படித்து இருக்கிறோம்; கேள்விப் பட்டிருக்கிறோம். இவைகளுக்கு இடையே இருக்கும் தொடர்பு நம்மை வியக்க வைக்கிறது.


தனது வலையில் விழும் பூச்சிகள் நகர முடியாதபடி  சிக்க வைக்கும் சிலந்திஒரு குளவியிடம் தோற்று அதன் நுண் புழுக்களுக்கு உணவாகிறது என்பது எத்தனை அதிசயமானஆனால் உண்மையான ஒரு செய்தி!


வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு இல்லையா? தனக்கு வரும் இடையூறுகளையே வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றும் வல்லமை மனிதனுக்கு மட்டுமல்ல, சின்னஞ்சிறு குளவிக்கும் உண்டு என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.


ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு வகைக் குளவிகள் மனித சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றன. 

இவை விடமுள்ள சிவப்பு சிலந்தியைக் கொட்டி செயலிழக்கச் செய்கின்றன.


‘பெண் குளவிகள் சிலந்திகளைக் கொட்டி செயலிழக்கச் செய்கின்றனவே தவிர, அவைகளைக் கொல்லுவதில்லை.’ என்கிறார் ஆஸ்திரேலியா, அடிலெய்ட் பல்கலைக்கழக பரிணாம உயிரியலாளர் திரு ஆண்ட்ரு ஆஸ்டின். இவர் ‘தி ஆஸ்ட்ரேலியன் ஜர்னல் ஆப் என்டோமாலஜி’ என்கிற இதழில் வெளியான குளவிகளைப் பற்றிய புதிய ஆராய்ச்சி ஒன்றின் ஆசிரியர்.


பெண் குளவி சிலந்தியைக் கொட்டிய பின் அதனை ஒரு பிளவுக்குள் அல்லது குழிக்குள் இழுத்துச் செல்லுகிறது. அதன் மேல் முட்டையிடுகிறது. முட்டை பொரிந்தவுடன் வெளிவரும் நுண் புழுக்களுக்கு சிலந்தி சுடச்சுட உணவாகிறது!


குளவிகளைப் பற்றி குறிப்பு முதன்முதலில் டேனிஷ் நாட்டு பூச்சியியலர் திரு ஜோஹன் கிறிஸ்டியன் ஃபெப்ரீஷியஸ் என்பவரால் 1775 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்ட ஜேம்ஸ் குக் அவர்களால் கொண்டுவரப்பட்ட சிலந்திகளை ஆராயத் தொடங்கி விட்டார் இந்த பூச்சியியலர். ஆஸ்திரேலியா முழுவதும் குளவிகள் பரந்து காணப்பட்டாலும், பல காலம் ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் மேல் அதிக கவனம் செலுத்தவில்லை.


இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்டினும் அவரது சகாவான, ஜெர்மனி நாட்டில் உள்ள ஸ்டேட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி (State Museum of Natural History in Stuttgart) மையத்தை சேர்ந்த லார்ஸ் க்ராக்மனும் ((Lars Krogmann) இந்த சிலந்தி-வேட்டையாடும் குளவிகள் பற்றி ஆராயத் தொடங்கினர். பல குளவிகள் சிலந்திகளை வேட்டையாடினாலும் ஆஸ்திரேலியாவில் உள்ள, சிவப்பு-முதுகு சிலந்திகளை வேட்டையாடி, தன் நுண் புழுக்களுக்கு உணவாக்கும் குளவிகளைப் பற்றி வெளியில் அதிகம் தெரியவில்லை.  


இரண்டு வருடங்களுக்கு முன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு  சிறுவன் (இவனுக்கு அப்போது ஒன்பது வயது) ப்ளோரின் இர்வின்  தனது தோட்டத்தில் குளவி ஒன்று சிலந்தியைக் கொட்டி அதனால் செயலிழந்த சிலந்தியை தன் கூட்டிற்கு இழுத்துச் செல்வதைக் கவனித்தான். இதை தந்தையிடம் சொல்ல, அவர் குளவியையும், சிலந்தியையும் புகைப்படம் பிடித்து கூடவே அங்கிருந்த பல்வேறு குளவிகளின் மாதிரிகளையும் சேகரித்து, பெர்த்தில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியன் மியூசியத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இந்த செய்தியை, குளவிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு இருந்த  ஆஸ்டினுக்கும், க்ராக்மனுக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்குப்பின் தான் குளவிகளின் இந்த செய்கை உலகத்தின் கவனத்திற்கு வந்தது.


குளவிகள், சிலந்திகள் பற்றி ஒரு சிறப்பான செய்தியை உலகிற்கு வெளிக்கொணர வைத்த சின்னஞ்சிறு மக்கள் விஞ்ஞானிக்கு நம் வாழ்த்துக்கள்!

seperator