காதுகேளாமைக்கு தண்டுயிர்மி சிகிச்சை

- இரஞ்சனி

ஞாயிற்றுக் கிழமை, ஆவணி 30, 2043 23:40 இதிநே
Saturday, September 15, 2012 23:40 IST


‘எண் சாண் உடம்பிற்கு தலையே பிரதானம்’ என்றாலும், ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலைசெய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கடினம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடல்ல. காது கேளாமையால் பேச்சுத்திறனும் பாதிக்கப்படும்.

காது கேளாமை என்பது வெளியே தெரியக் கூடிய குறை இல்லை.

வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது; 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காது கேட்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவத் துறை இப்போது பல வகையில் முன்னேறி இருக்கிறது. உலகின் பல நாடுகளில் வெவ்வேறு விதமான ஆராய்ச்சிகள் மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் நடந்து வருகின்றன.

அண்மைய ஆராய்ச்சி ஒன்று முளைக் கருவின் தண்டுயிர்மியைப் (stemcell) பயன்படுத்தி செய்யும் சிகிச்சை முறை காது கேளாமையை குணப்படுத்தப் பயன்படும் என்று கூறுகிறது. இந்த ஆராய்ச்சி முதல்முறையாக எலி இனங்களில் செய்யப்பட்டிருக்கின்றது.

ஆராய்ச்சியாளர்கள் காது கேளாத எலிகளுக்கு இந்தச் சிகிச்சை வழியே கேட்கும் திறனை மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியினால் காது கேளாமை நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும் கேட்கும் திறனை உண்டு பண்ண முடியும் என்று கூறுகிறார்கள்.

காது கேளாமை என்பது முக்கியமாக உட்காதில் உணர்வு உரோம உயிர்மிக்கள் (hair cells) இழப்பாலும் அதற்கு சம்மந்தப்பட்ட செவிப்புல நரம்புகளின் குறைபாடாலும் ஏற்படுகிறது. இந்தக் குறை அடிப்படையில் உட்காதிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு முறிவதால் ஏற்படுகிறது. காதிற்குள் வைக்கப்படும் உள்வைப்புகள் ஒரு அளவுக்கு உரோம உயிர்மிக்களின் இழப்பை சரி செய்யும். ஆனால் இவை செவிப்புல நரம்புகளின் இழப்பை ஈடு செய்ய முடியாது.

அதனால் செஃப்பில்ட் பல்கலைக்கழகத்தைச் (University of Sheffield) சேர்ந்த மார்சேலோ ரிவோல்டா (Marcelo Rivolta) தலைமையில் அமைந்த ஒரு குழு செவிபுலன் நரம்புகளின் குறைபாட்டை தொடக்க நிலையில் உள்ள மனித தண்டு உயிர்மிக்களைக் (human embryonic stem cells) கொண்டு சரி செய்ய முயன்றனர்.

· முதலில் செவி உயிர்மிக்களின் முன்னோடி (Otic progenitor cells) உயிர்மி ஒன்றை மனித மூல உயிர்மிக்களில் வேறுபாடுடைமையை தூண்டக்கூடிய, வேறு வேறு வகைகளான உயிர்மிக்களை உருவாக்கினர்.

· இந்த முன்னோடி உயிர்மிக்கள் உரோம உயிர்மிக்களுக்கும் செவிப்புலன் நரம்புகளுக்கும் உண்டான அதே பண்புகளை உடைய உயிர்மிக்களாக, செவியின் கேட்கும் செயல் திறனுக்குக் காரணமான உயிர்மிக்களாக வேறுபாடு அடையும்.

· இந்த முன்னோடி உயிர்மிக்கள் பின்னர் எலி இனத்தின் - இரசாயனக் கலவைகளால் சிதைக்கப்பட்ட - செவிகளில் பெயர்த்து இடப்பட்டன. 

· 10 வாரங்களுக்குப் பிறகு பெயர்த்து இடப்பட்ட உயிர்மிக்களில் முன்துருத்தங்கள் வளர்ந்து மூளையுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் கேட்கும் திறன் மீட்டெடுக்கப்பட்டது.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் பலவற்றிற்கு மிக நுண்ணிய ஒலிகளையும் கேட்க முடிந்தது அவைகளின் கேட்கும் திறனில் சுமார் 46% முன்னேற்றம் தெரிந்தது.

இந்த ஆய்வின் மூலம் காது கேட்காத மனிதர்களுக்கு பெரும் ஒசைகளைக் கேட்பதிலிருந்து இன்னொருவருடன் மெல்லிய குரலில் உரையாடுவது வரை சாத்தியம் ஆகலாம். ஆனால் மனிதர்கள் மேல் இந்த பரிசோதனை நடக்க பல வருடங்கள் ஆகும்.

இந்த தண்டுயிர்மி சிகிச்சை முறையும் உள்வைப்புகளும் சேர்ந்து இன்னும் பல செவி கேளாதவர்களுக்கு கேட்கும் திறனைக் கொடுக்கலாம்.

எத்தனை பேர்களுக்கு இந்த தண்டுயிர்மி சிகிச்சை பலனளிக்கும் என்பது இன்னும் சரிவரத் தெரியாதபோதிலும், தண்டுயிர்மி சிகிச்சை ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறைகளை இன்னும் விரிவு படுத்தக் உதவும். செவிப்புலன் நரம்புகள் செவி உள்வைப்புகள் வேலை செய்ய மிகவும் அவசியம் ஆதலால் இதுவரை சிகிச்சை பெறமுடியாத பலர் பயன்பெறக் கூடும்.

காது கேட்காதவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய வரம் என்று சொல்லலாம்.

seperator