முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள் 
தொடர்புக்கு
Advertisements:

i
புதியதோர் உலகம்!

    -  ரஞ்ஜனி 

    செப்டம்பர் 05, 2012 20:23

நாம் வாழும் பூமி மிகுந்த வெப்பத்திற்கு ஆளாகிக்கொண்டு இருக்கிறது. மனிதனின் பேராசையால் நீர் வளம், நிலவளங்கள் அருகி விட்டன. வளங்கள் குறைந்தாலும், குறையாத மக்கட்தொகை நிமிடத்திற்கு நிமிடம் பெருகி வருகிறது. இவற்றையெல்லாம் மாற்ற முடியுமா? பேசாமல் வேறு உலகத்திற்கு போய் விட்டால். நல்ல கற்பனைதான்!

நமக்கு மட்டுமல்ல இத்தகைய கற்பனைகள். வானவியலாளர்களுக்கும் உண்டு. நம்முடைய கற்பனைகள் கற்பனையாகவே முடிந்து விடும். ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தக் கற்பனைகளை உண்மையாக்கி பார்ப்பது ஒரு போட்டியாக இருக்கும்.

அண்மை ஆய்வு ஒன்று மனிதர்கள் வாழக்கூடிய கோள் இருப்பது உண்மை என்கிறது.

க்லீஸ்163 (Gliese 163) என்ற 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீனின் சுற்றுப் பாதையில் ஒரு புதிய, உயிரினங்கள் வாழக்கூடிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கோள் பூமியைவிட சுமார் 7 மடங்கு பெரியது என்றும், க்லீஸ்163 விண்மீனின் உள் விளிம்பில் இருப்பதாகவும், பிரான்சு நாட்டு ஆப்செர்வடீர் டி கிரேனோபால (Observatoire de Grenoble) – வைச் சேர்ந்த தியேரி ஃபர்வயேல (Thierry Forveille) ஆகத்து 30 ஆம் தேதி நடந்த சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பொதுச் சபை கூட்டத்தில் அறிவித்தார்.

இந்தக் கோளினுடைய வளிமண்டல அமைப்பு, அதனுடைய சுற்றுச்சூழல் எத்தனை பாதுகாப்பானது என்பவற்றைப் பொறுத்து உயிரினங்கள் இங்கு வாழ முடியுமா என்று தெரிய வரும்.

“உயிரினங்கள் வாழக் கூடிய இடம் இது” என்கிறார் சிகாகோ பல்கலைக்கழக திரு ரேமண்ட் பியர்காம்பர்ட். ஏனெனில் இந்தக் கோளில் தாங்க முடியாத பைங்குடில் விளைவுகள் (Greenhouse Effects) நிகழ்ந்து உயிரினங்கள் வாழ முடியாத சூழல் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்கிறார் இவர்.

ஃபர்வயேல-வும் அவரது உடன்பணியாளர்களும் இந்தக் கோளின் புரவலன் நட்சத்திரத்தின் திசை பிறழ்வை தொலைநோக்கியின் மூலம் ஆராய்ந்து கொண்டிருந்த போது இந்தக் கோளைக் கண்டனர்.

வானியலாளர்கள் GI 163c என்று பெயரிட்டுள்ள இந்தக் கோள், நம் பூமியானது சூரியனிலிருந்து பெறும் சக்தியை விட 30% இலிருந்து 40% அதிக சக்தியைப் பெறுவதாக தெரிகிறது.

இன்னும் இந்தக் கோளின் சுற்றளவு சரிவரத் தெரிய வராததால் இந்தக் கோள் எதனால் ஆனது என்று தெரியவில்லை; பாறைகளும் நீரும் கலந்த ஒரு அமைப்பாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

க்லீஸ் 163 ஒரு M ட்வார்ப் (dwarf) நட்சத்திரம். இது சூரியனை விடவும் சிறியதாகவும் ஒளி குறைந்தும் இருக்கும். குறைந்த பட்சம் இரண்டு கோள்களுக்கு புரவலனாக இருக்கிறது. இதன் உட்புறத்தில் அமைந்திருக்கும் GI 163b, 11 புவி நிறையைக் (earth masses) கொண்டது. ஒரு சுழற்சியை 8.6 நாட்களில் முடிக்கிறது.

அடுத்த படியாக இருக்கும் GI 163c, 7 புவி நிறை கொண்டது. ஒரு சுழற்சியை 25.6 நாட்களில் முடிக்கிறது. மூன்றாவதாக பலத்த நம்பிக்கையை கொடுக்கும் ஒரு கோள் 20 புவி நிறையைக் கொண்டது. மிகவும் தூரத்தில் இருக்கும் இது 669 நாட்கள் சுழற்சியை உடையதாக இருக்கிறது.

M குள்ள நட்சத்திரங்களின் நடுவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள்களைக் கண்டுபிடிப்பது விரைவாகச் செய்யக் கூடிய செயல். புவியின் அளவுள்ள கோள்களை M குள்ள நட்சத்திரங்களின் உயிரினங்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் கண்டுபிடிப்பது எளிது என்கிறார் ஹார்வேர்ட்-ஸ்மித்சோனியன் அஸ்ட்ரோஃபிசிக்ஸ் மையத்தைச் சேர்ந்த கோர்ட்னி ட்ரெஸ்ஸிங்.

M குள்ள நட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இந்த நட்சத்திரங்கள் சிறியவை; அதனால் இவற்றைச் சுற்றி இருக்கும் பூமியின் அளவுள்ள கோள்களை கண்டறிவது எளிது.

மேலும் இவை விண்மீன்களின் மேல் வலிந்து இருப்பதால் ஒளி மிகவும் குறைகிறது. நமக்கு அண்டை அயலில் இருக்கும் சூரிய மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் சுமார் 80% M குள்ள விண்மீன்கள் தான். இதன் காரணமாக இந்த M குள்ள விண்மீனைச் சுற்றிலும் இருக்கும் புவியின் ஒப்புமை கொண்ட, பூமியிலிருந்து 75 ஒளி ஆண்டுகள் தூரத்திற்குள் இருக்கும் வேறொரு பூமியை கண்டறிவதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்று திருமதி ட்ரெச்சிங் ஆகத்து 30 ஆம் தேதி கூறினார்.

இந்த ஆராய்ச்சியின் காரணமாக சின்னச்சின்ன விண்மீன்களைச் சுற்றி பூமியின் அளவுள்ள கோள்களைக் தேட ஒரு புதிய ஊக்கம் பிறந்திருக்கிறது என்றார் அவர்.

 

மேற்கோள்கள் :

T. Forveille. The HARPS search for low-mass, habitable, transiting planets around M dwarfs. International Astronomical Union General Assembly, August 29, 2012, Beijing. 

C. Dressing. Occurrence rate of habitable planets around M dwarfs: Estimates from Kepler. International Astronomical Union General Assembly, August 29, 2012, Beijing.  


- முற்றிற்று -