முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள் 
தொடர்புக்கு
Advertisements:





i
‘ஒரே இணைதுணை’ புரதங்கள்!

-  ரஞ்ஜனி

செப்டம்பர் க0 (10), ௨0௧௨(2012)  க௯:௨௯(19:29)

ஒரு அலுவலகத்தில் விசுவாசத்தோடும், அர்ப்பணிப்போடும் வேலை செய்பவர்களுக்கு, மிக முக்கியமான பணிகள் கொடுக்கப் படுகின்றன. அதேபோல நம் உடலாகிய அமைப்பிலும் உயிரணுக்கள், வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும்போது விசுவாசமிக்க ஒரே வேலையை மட்டும் செய்யும் புரதங்களிடத்தில் மிகப் பெரிய வேலைகளை ஒப்படைத்துவிட்டு, ஒழுங்குமுறையற்ற புரதங்களிடத்தில் அதிமுக்கியமில்லாத வேலைகளை கொடுக்கின்றன!

விஞ்ஞானிகள் உயிரணுக்களின் வளர்சிதை மாற்ற வினைகளை செய்யும் சுருண்ட வலைப்பின்னல்களை பரிசோதிக்கும்போது, விசுவாசமான புரதங்கள் ஒரே ஒரு வேலையை மட்டும் அதாவது மிக முக்கியமான தவிர்க்க முடியாத அவசர நெருக்கடி வேலையைச் செய்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இந்தப் புரதங்களின் ஒத்தமைப்புள்ள சக புரதங்கள் அதி முக்கியமில்லாத பணிகளைச் செய்கின்றன.

ஒரே இணைதுணை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல சில புரதங்களுக்கும் இந்த உயர் பண்பு இருக்கிறது என்று இந்த ஆய்விலிருந்து கண்டு வந்துள்ளது.

சயின்ஸ் இதழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் புதிய ஆய்வறிக்கை, நொதிகளின் நடவடிக்கைகளை – அதாவது ஈ-கோலி என்னும் நுண்ணுயிரில் இரசாய எதிர் வினைகளை உருவாக்கும் - புரதங்களைப் பற்றி ஆராய்ந்துள்ளது.

இந்த நுண்ணுயிரி, தன் வேலைகளை நிறைவேற்ற துணை இருக்கும் பல்வேறு இரசாயன மாற்றங்களை அலசி ஆராய சாண்டியாகோ பல்கலைக்கழக மற்றும் ஹார்வர்ட் மருத்துவ பள்ளி விஞ்ஞானிகள் ஒரு கணணி மாதிரியை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் ஒரு வகையான இரசாயன எதிர்வினையை உண்டாக்கும் ஒரு குறிப்பிட்ட புரதங்கள், உயிரணுவின் மிகவும் முக்கியமான வேலைளை செய்கின்றன என்றும் ஒழுங்கற்ற புரதங்கள் அதி முக்கியமில்லாத வேலைகளைச் செய்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.

download 

(நன்றி: systems Bology research Group/USCD/Jacob school of Engineering.)

இந்த ஆய்வுக்காக மொத்தம் 1,081 நொதிகள் ஆராயப்பட்டன. அவற்றில் 404 பொதுவானவை. இவை பல்வேறு இரசாயன மாற்றங்களை உருவாக்கும். மீதியுள்ள நிபுணத்துவம் வாய்ந்த 677 புரதங்கள் நுண்ணுயிரிகள் உயிர் பிழைத்து வாழ மிகவும் அத்தியாவசியமானவை.

வளர்சிதை மாற்றத்தின் வலைப்பின்னலில் இருக்கும் இந்தப் பொது மற்றும் நிபுணிப் புரதங்களின் பங்கு பற்றிய விஷயங்களை வெளிக் கொணருவது புதிய மருந்துகள், எரிபொருள், மற்றும் இரசாயப் பொருட்கள் உருவாக்கத் தேவைப்படும் ஆரம்பநிலை நொதிகளை அடையாளம் காண உதவும்.

அடிமட்டத்தில் இருந்து உயிரினங்களை உருவாக்க உயிரியல் அறிஞர்களுக்கு இந்த ஆய்வு உதவும் என்று பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த எவ்ரி-வல்-டி எசான் பல்கலைக்கழக செயற்கை உயிரியல் விஞ்ஞானி திரு பாப்லோ கார்போனேல் (Pablo Carbonell) கூறுகிறார்.

மேலும் இந்த ஆய்வினால், ஒழுங்கற்ற மற்றும் விசுவாசமாக ஒரே வேலையைச் செய்யும் நொதிகளைப் பற்றிய குழப்பத்திற்கும் தெளிவு பிறந்திருக்கிறது.

அடிமூலக் கூறுகளின் மேல் நொதிகள் வேலை செய்கின்றன. உதாரணமாக உமிழ் நீரில் இருக்கும் அமிலாஸ் (மாப்பொரு நொதி) என்கிற நொதி அடிமூலகூறான மாவுச்சத்தை உடைக்கிறது.

பல நூறாண்டுகளாக நொதிகள் தங்கள் அடிமூலகூறுகளுக்கு மிகவும் விசுவாசமானவைகளாகக் காட்டப்பட்டு வருகின்றன.

எல்லா நொதிகளும் விசுவாசமானவைகளாகவும், வேலையில் அர்பணிப்பு உணர்வோடும் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அப்படியில்லை என்கிற உண்மையை அதிகரித்து வரும் ஒழுங்கற்ற நொதிகளின் எண்ணிக்கையின் மூலம் விஞ்ஞானிகள் உணரும் கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

1970 களில் நுண் உயிரியலாளர் திரு ராய் ஜென்சென் என்பவர், உயிர்களின் ஆரம்ப கட்டத்தில் எல்லா நொதிகளுமே ஒழுங்கற்றதாகவும், பல வேலைகளை செய்பவையாக இருந்த போதிலும் தற்போதைய அளவுக்கு திறமையானவைகளாக இல்லை என்ற கருத்தை முன் வைத்தார். இந்தப் பன்முக வேலை ஆற்றலால், மிகக் குறைந்த திறமை அடங்கிய புரதங்கள் இருக்கும் ஆரம்ப நிலை நுண்ணுயிரியால் தனக்குரிய வேலையை செய்து கொள்ள முடிந்தது. ஆனால் வரைமுறையற்ற நொதிகள் இன்றும் நீடிப்பது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே நீடிக்கிறது.

இந்த பிணைய அணுகு முறை ஆராய்ச்சி ஒரே இணைதுணை புரதங்கள், ஒழுங்கற்ற புரதங்கள் என்பது எங்கே ஒரு பொருட்டாக இருக்கிறது என்பதை அறிய வழி வகுத்தது.

'ஒரு வகையில் இந்த ஆராய்ச்சியானது ஒரு நகரத்தின் போக்குவரத்து மாதிரியை கவனிப்பது போல’ என்கிறார் USCD குழு உறுப்பினர் திரு பெர்ன்ஹார்ட் பால்சன்.

முழு அமைப்புக்கும் உதவக் கூடிய குறிப்புகளை ஈ-கோலி-யின் வளர்சிதை பிணைய அமைப்பில் பால்சன் மற்றும் அவரது சகாக்கள் கண்டு பிடிக்க முயன்றனர்.

‘ஒரு நகரத்தின் முக்கியமான சாலைக, நாற்சந்திகள், பாலங்கள் இருக்கும்; ஒரு இடத்தில் தவறு நேர்ந்தாலும் போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்து விடும் என்று எங்களுக்குத் தெரியும்’ என்கிறார் பால்சன்.

மிகவும் இன்றியமையாத, எதிர்வினைகளை ஊக்குவிக்கும் பணிகளைத் தவிர இந்த ஒரே இணைதுணை நொதிகள் பிணைய இணைப்பில் முக்கியமான பொதுவழிகளில் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றன.

ஆகவே, கிளைகோலைசிஸ் போன்ற, உணவை ஆற்றலாக மற்றும் வேலையை இடைவிடாமல் செய்யும் நொதி மிகுந்த நிபுணத்துவமும், விசுவாசமும், அர்ப்பணிப்பும் உள்ளதாக இருக்கும்.

இதற்கு மாறாக, வைட்டமின் ‘பி’ யை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நொதிகள் வரைமுறையற்றதாகவும், பல வேலைகளை செய்யக் கூடியதாகவும் இருக்கலாம்.

இன்னொன்று: வரைமுறையற்றதாக இருப்பதால் இவை முக்கியமற்றவை என்று பொருள் இல்லை. நச்சுப் பொருட்களை கண்டறிந்து அவற்றை உடைக்கும் நொதிகள், ஒன்று மேற்பட்ட அபாயங்களை கண்டறிந்து செயல்படுவது நுண்ணுயிரிகளுக்கு பெரும் சேவையாக இருக்கும்.