கருவிகள் ஆயிரம் 2. சொற்சீர்மை

இலக்குவனார் திருவள்ளுவன்
Sun Mar 17 2013 10:21:36 GMT+0300 (EAT)


சொற்சீர்மைஇன்றைய அறிவியல் கருவிகளின் பெயர்கள் தமிழில் இங்கே தரப்படுகின்றன. சில சொற்கள், பிற அகராதிகளில் காணப்படுவன. வேறு சில சொற்கள், பிற அகராதிகள் அடிப்படையில் ஆனால், அவற்றில் மாறுபட்டுச் செம்மையாகத் தரப்படுவன. மற்றும் சில, சொற்கள் புதியனவாகக் குறிக்கப்படுவன. புதியன, நேர் பொருளின் அடிப்படையில் அமைந்தவையும் தோற்ற அடிப்படையில் அமைந்தவையும் பயன் அடிப்படையில் அமைந்தவையும் ஒத்த சீர்மை கருதி அமைந்தவையும் என வெவ்வேறு வகையின. கருவிகளுக்குப் பல்வேறு பயன்கள் உள்ள பொழுது ஏதேனும் ஒரு பயன் அடிப்படையில் அமைந்த சொற்கள், மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது தவறாகத் தோன்றவும் வாய்ப்பு உண்டு. ஆங்கிலத்தில் கலைச்சொற்கள் இடுகுறியாக இருந்தாலும் அவற்றை ஏற்கும் நாம், தமிழில் முழுமையான பொருள் விளக்கத்தை எதிர்பார்ப்பதால் ஏற்படும் நிலைமை இது. முழுப் பொருள் அடிப்படையில் பார்க்காமல் பயன் எளிமை அடிப்படையில் கண்டறியப்பட்டனவே இவை.

இன்றைய தேவைக்கேற்ற முழுமையான ஆங்கிலம் - தமிழ் அகராதி எதுவும் இல்லை. எனினும் இருப்பனவற்றுள் சென்னைப்பல்கலைக்கழக (ஆங்கிலம்-தமிழ்) அகராதியே மிகச்சிறந்ததாகும். அடுத்து வந்தனவற்றுள் யூனிவர்சல் டீலக்சு அகராதி (Universal Deluxe Dictionary) மிகச்சிறந்த ஒன்றாகும். இன்றைய அறிவியல் தேவைக்கேற்ற சொற்கள் அக்காலப்பயன்பாட்டில் பரவலாக இல்லாமல் போனமையால் அவை இடம் பெற்றிருக்கும் வாய்ப்பை இழந்து விட்டன. இருப்பினும் அறிவியல் சொற்களுக்கான சொல்வடிவின்றி விளக்கத் தொடராகப் பல உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவற்றுக்கான கலைச்சொற்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

பொது அகராதிகளைவிட அறிவியல் அகராதிகள்தாம் அறிவியல் கலைச்சொற்கள் காணப் பெரிதும் உதவுவன. அந்த வகையில் இப்போதுள்ள அறிவியல் அகராதிகளில் நல்ல தமிழிலும் சிறப்பாகவும் அமைந்துள்ளது ‘அறிவியல் அகராதி’ யே ஆகும். (பேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களின் பெருமுயற்சியில் மணிவாசகர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.) ‘மருத்துவ அறிவியல் தொழில் நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி ’ என்பது நல்ல தொகுப்பு என்று சொல்ல முடியுமே தவிர புதுச்சொல்லாக்கங்களைக் காணல் அரிது. அதே நேரம் கல்லூரிக்கல்விக் கழகம், கலைக்கதிர் அகராதி முதலான பிற வெளியீடுகளின் தொகுப்பாக இருந்தாலும் அவற்றைப் புரிந்து கொள்ள எளிமையான விளக்கங்களை இவ்வகராதியில் காணலாம். தமிழ்நாட்டரசின் பல்வேறு துறை அகராதிகளையும் தொகுத்து தமிழ் இணையப் பல்கலைக்கழகம்(தமிழ் இணையக் கல்விக்கழகம்) இணையத்தில் தந்துள்ளதும் கலைச்சொற்கள் அறிய பெரிதும் துணைபுரிவன. அயற்சொல் கலப்பின்றி எழுத இலங்கை அகராதிகள் உந்துதலாக உள்ளன. தமிழில் உள்ள முதன்மை அகராதிகளின் தொகுப்பாகத் தமிழ்.கியூப் இணைய அகராதி (tamilcube.com) அமைந்துள்ளது. ஐரோப்பிய அகராதி (Eudict.com) இவற்றுடன் வேறு பலவும் தொகுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பல இணைய அகராதிகள் உள்ளன. ஆனால், தரவு மூலங்களை அவை குறிப்பிட்டிருப்பின் பயன் உள்ளதாக அமையும். இணைய வழிப் பல்வேறு அகராதிகளைக் காண முடிந்தாலும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற தமிழ்க் கலைச்சொற்கள் பெரிதும் இல்லை என்பதே வருந்துவதற்குரிய உண்மையாகும்.

இதற்குக்காரணம் தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வி அமையாததே ஆகும். தொடக்கம் முதல் நிறைவு வரை தமிழ்வழிக்கல்வியே இருப்பின் உலக மொழிகளில் மிகுதியான கலைச் சொற்கள் உள்ள மொழியாகத் தமிழ் இருப்பதை உணர வாய்ப்பு கிட்டியிருக்கும். தேவைக்கேற்ப கலைச்சொற்கள் பெருகும் என்பது உண்மைதான். என்றாலும் வருங்காலத் தேவையை உணர்ந்து கலைச் சொல்லாக்கங்களைப் பெருக்குவதே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும். அவ்வாறு வழக்கில் இல்லாத தமிழ்க் கலைச்சொற்களைக் கண்டறிய இணைய வழியிலான மிகுதியான ஆங்கில அகராதிகளும் கட்டுரைக் குறிப்புகளும் துணை நிற்கின்றன. அவ்வகையில் அமைந்த கலைச்சொல்லாக்கங்களும் இணைந்து பின்வரும் கருவிகள் பட்டியல் அமைந்துள்ளது. இவற்றில் கட்டம் 3-இல் அடைப்பிற்குள் சுருக்கமாகக் குறிக்கப் பட்டுள்ளவை கருதிப் பார்க்கப்பட்ட அகராதிகளைக் குறிக்கும். இவற்றுள் (-செ.) என்பது சென்னைப் பல்கலைக்கழக அகராதியையும் (-மூ.) என்பது பேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்களின் அறிவியல் அகராதியையும் (-ம.) என்பது மணவை முசுதபாவின் கலைச்சொல் களஞ்சிய அகராதியையும் (-ஐ.) என்பது ஐரோப்பிய இணைய அகராதியையும் (-இ.) என்பது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணைய அகராதியையும் குறிப்பன.
அக்காலம் முதல் பிற்காலம் வரை உள்ள இலக்கியங்கள் வழியாக நாம் பல்வகைக் கருவிகள் பற்றிய விவரங்களை அறிய முடிகிறது. எனவே, கருவி என்றால் அறிவியல் ஆராய்ச்சிக்குரிய கருவி என்று மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் எனப் பார்த்தால் ஆயிரத்திற்கு மேற்பட்டவை உள்ளன. இவற்றை நீக்கி நிலை மாற்றம் அல்லது துணை ஆக்கம் என்ற நிலையில் பொதுவாகப்பார்த்தால், மண்வெட்டி, கடப்பாரை முதலான எண்ணற்றக் கருவிகளை நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றுள் அவர்கள் கால அறிவியல் வளர்ச்சி சார்பான கருவிகளும் உள்ளன என்பதே பேருண்மையாகும். எனினும் இங்கே பொதுவாக இக்கால அறிவியல் கருவிகளின் பெயர்களைப் பார்ப்போம்.

அறிவியல் கருவிகளின் தமிழ்ப்பெயர்களைக் குறிப்பிடும் முன்னர் ஒத்த சீர்மை நோக்கு இருக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவர் ஒவ்வொருவகையாகக் குறிக்கும் நடைமுறை உள்ளதால் பயன்பாட்டுக் குழப்பம் ஏற்படுகிறது. ஒரே வகைப் பெயரையே வெவ்வேறு வகைப்பாட்டிற்கும் பயன்படுத்தும் குழப்பமும் உள்ளது. எனவே, நாம் அறிவியல் கருவிகளின் பெயர்களில் சீர்மையைக்காண வேண்டும். அந்த நோக்கில்தான் இப்பொழுது நாம் கருவிகளின் பெயர்களைப் பார்ப்போம். தேவையில்லாமல் புதுப்புதுப் பெயர்களைக் காண்பது தவறுதான். ஆனால், தவறான பயன்முறையில் சொற்கள் பயன்பாட்டில் இருப்பின் அவற்றை மாற்றித்தான் ஆகவேண்டும். அந்த அடிப்படையில் பல பெயர்கள் மாற்றிக் குறிப்பிடப்படுகின்றன.

நுண்கருவி, செயற்கருவி, ஆயுதம், இயந்திரம், படைக்கருவி, எனப் பலவகையாகக் கருவிகள் தமிழ் நாட்டில் இருந்துள்ளன எனத் தெளியலாம். அவற்றை மறந்தும் துறந்தும் விட்டமையால் சொல்லாக்கத் தேடலில் தடுமாறுகிறோம். instrument, tool, gadget, device, utensil, apparatus, appliance, என்பனவற்றிற்குப் பொதுவாகக் கருவி என்பதைப் பொதுச் சொல்லாகவே கையாளுகின்றோம். அவ்வாறில்லாமல்

கைக்கருவி - tool
திறன்கருவி / திறனி/ சாதனம்/ முட்டு - device
ஏந்துகருவி(appliance)
ஏனம் Utensil (ஏனம் என்பது பாத்திரத்தையும் குறிக்கும்.)
சிறு பொறி - gadget
கரணம் / செய்கருவி - Instrument
ஆய்கருவி - Apparatus
ஏத்தனம் - Implement
இயந்திரம் - machine
எனப் பகுத்துக் குறிப்பிடலாம்.

சாதனம் என்னும் சொல் கருவி அல்லது துணைக்கருவி என்னும் பொருளில் சமசுகிருதத்தில் இல்லை. ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கருவி என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. எனவே, இச்சொல் தென்னகத்தில் வழங்கப்பெற்ற பழைய சொல்லாக இருக்க வேண்டும். மூலம் அறிய இயலாவிட்டாலும் பழந்தமிழ்ச்சொல் அல்லது திசைச்சொல் என ஏற்றுக் கையாளலாம்.

கருவியைக் குறிக்கும் மற்றொரு சொல் முட்டு என்பதாகும். பணிக்கு உதவும் கருவி என்னும் பொருளில் பணிமுட்டு என்னும் சொல் கன்னடத்தில் உள்ளது. முட்டு என்னும் சொல்லை device எனக் குறிக்கலாம்.

சாது என்பதற்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, சிறந்த உயர்ந்த என்னும் பொருள்களைக் குறிப்பிடுகின்றது. எனவேதான் சிறந்த செயல் சாதனை எனப்படுகின்றது. சாதனை என்பதை ஆரியச்சொல்லாகக் கருதாமல் திசைச்சொல் என உணரலாம். இதைப் போலவே சாதனம் என்னும் சொல்லையும் திசைச் சொல்லாகக் கருதலாம்.

இயத்து - Implement/utensil எனச் சென்னைப் பேரகராதி குறிப்பிடுகிறது. இயற்று - Implement, utensil என வின்சுலோ அகராதி குறிப்பிடுகிறது. இயற்று என்பது இயத்து என மாறியிருக்கிறது என அறியலாம். இயற்று என்றால் இயற்றுதல் என்னும் பொருள் வருவதால் இயத்து என்னும் சொல்லையே பயன்படுத்தலாம்.
மானி, அளவி, முதலான கருவி தொடர்பான சொற்கள் மாறி மாறிப் பயன்படுத்தப்படுவதால், சீர்மைத்தன்மை இல்லை. எனவே, தரப்படுத்தப்படுவதே நன்று. எனவே,

மானி-meter,
அளவி-guage,
நோக்கி - scope,
குறிப்பி -indicator,
வரைவி - graph,

என வரையறுத்துக் கொண்டு நாம் பின்பற்றினால் எளிதில் சொல்லாக்கங்களின் வகைகளைப் புரிந்து கொள்ள இயலும்.
இவற்றின் அடிப்படையில் கருவிகளின் பெயர்களை இனிக் காண்போம்.