கருவிகள் ஆயிரம்
இலக்குவனார் திருவள்ளுவன்
Sun Mar 17 2013 10:21:36 GMT+0300 (EAT)


முன்னுரை :

  ஒரு பொருளின் உருவாக்கம், உருமாற்றம், ஆய்வாக்கம், செம்மையாக்கம், முதலியனவற்றிற்கு உதவுவன கருவிகளே ஆகும். பழந்தமிழ்நாட்டின் அறிவியல், மருத்துவம், தொழில் முதலியவற்றில் கருவிகள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆனால், அவை பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை. எனினும் இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் பயன்படும் அறிவியல் கருவிகள் யாவும் பழந்தமிழர் மட்டுமல்ல உலகின் பிற நாட்டு முன்னோரும் அறியாதனவே. என்றபோதும், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டவர் மிகுதியாகக் கருவிகள் பயன்படுத்தி உள்ளனர். பல நிலைகளில் என்னனென்ன கருவிகள் பயன்படுத்தி உள்ளனர் என அறிய வாய்ப்பு இல்லாவிட்டாலும் கருவிகளைக் கையாளாமல் இருநதிருக்க முடியாது என நாம் உறுதியாக நம்பலாம். எடுத்துக் காட்டாக வான் மண்டிலம் குறித்த கருத்துகள், கோள்களின் நிறம், பரப்பு குறித்த பொதுவான கருத்து முதலியவற்றை அறியக் கருவிகள் துணை இருந்திருக்க வேண்டும். பால்வீதி மண்டிலத்தைக் குறிக்கும் நாகவீதி என்னும் சொல்லாட்சிப் பால்மண்டில ஆராய்ச்சி இருந்தமையைக் குறிக்கிறது. சித்தர் பாடல்கள் அடிப்படையில் அவர்கள் குளிகை ஒன்றை உட் கொண்டு விண்ணிற்கே சென்று அறிந்தனர் என்றும் ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் பறக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்றும் அறிவியல் சாராமல் சிலர் கூறுவதை நம்ப இயலாவிடிலும், இன்றைய தொலைநோக்கி போன்ற ஏதோ கருவியின் துணை இருந்திருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கு இயலாது.

‘கயமூழ்கிச் சிரல்பெயர்ந்தன்ன நெடு வெள்ளூசி ‘ (பதிற்றுப்பத்து: 42) என அறுவை மருத்துவத்தில் ஊசி பயன்படுத்தப்பட்ட குறிப்பைச் சங்க இலக்கியம் கூறுகிறது. எனவே, அறுவைக்கு உதவக்கூடிய கருவிகளைப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை வரலாறாக இருக்க முடியும். கரும்பாலை பற்றிய செய்திகள் உள்ளமையால் இயந்திரங்களை உருவாக்க உதவும் கருவிகளைப் பயன்படுத்தாமல் அவற்றை உருவாக்கி இருக்க இயலாது என்பதைத் தெளியலாம். கோட்டைகளில் பயன்படுத்தப் பெற்ற படைக்கலன்சார் இயந்திரங்களை நோக்கும் பொழுது இயந்திரத்துறையில் மிகுதியான கருவிகள் பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் எனலாம். ‘புள்வருக்கநூல்’எனப்படும் பறவையியல் நூல் அறிவியல் செய்திகள் அடங்கியவைதாமே. பறவைகளின் உறுப்புகளின் வடிவம்,தன்மை முதலியவற்றைக் கூறி இருந்துள்ளனர் எனில் இவ்வாராய்ச்சி தொடர்பான கருவிகளும் இருந்திருக்கவேண்டும்தானே!

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும் தொல் வரலாற்றுக் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் சங்கக்காலத்திலும் அதற்குப் பின்னர் வழி வழியாகவும் பல்வகைக் கருவிகள் பயன்படுத்தப் பெற்றுள்ளன என்பதே உண்மையாகும். அக்காலம் முதல் அண்மைக்காலம் வரை பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகள் சிலவற்றை நாம் பார்ப்போம்.

புடைவை நெய்யுங் கருவிவகையான வாண தண்டம், நெசவுக்கருவிகளாகிய கயிறுதடி, சுண்டுகட்டை, சீர்வண்டு,சுண்டுகட்டை, கொய்யாக்கயிறு, நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் அச்சு, துளாரி, விசைக்கம்பு, நூக்கல்,நூலுறிஞ்சி, நெய்யற்கயிறு, பலகைக்கயிறு, பன்னத்தண்டு, அச்சனம், உராய்வதன் மூலம் தீப்பொறி உருவாக்கும் அரணி, நேரம் அறிய உதவும் நாழிகை வட்டில், கப்பலோட்டத்தைக் கணிக்க உதவும் சாராணடப்பு என்னும் கருவி,துளையிடுந் தச்சுக்கருவி ஆகிய துரப்பணம்/துறப்பணம் (துரப்பு- துருவுதல் என்னும் பொருள் அடிப்படையில் துரப்பரணம் என்றும் துறப்பு-நீக்குதல்; துளையிடுவதன் மூலம் உள்ளே உள்ளவற்றை நீக்குதல் என்னும் பொருளில் துறப்பணம் என்றும் சொல்லப்படுகின்றன.), உலையாணிக்கோல், இழைப்புளி, கல்லுளி, கொட்டாப்புளி, சிற்றுளி,வளையுளி, மெருகேற்றப் பயன்படும் மெதுகாணி, மெருகிட உதவும் தட்டார் கருவிவகை ஆகிய மெருகுவளை,மெருகுவேலையில் பயன்படும் மெல்லிய அரவகை ஆகிய மெருகரம் அணிகலன்களை மெருகிடும் கருவியாகிய ஒப்பம், தட்டார்கள் நகையாக்கத்திற்குப் பயன்படுத்தும் அரைவைரக்கண், கம்மாளர் கருவியாகிய அணிகலம் (நகைப்பேழை ஆகிய அணிகலம் வேறு), கம்மாளர் கருவியுளொன்று ஆகிய குரவை (குரவைக்கூத்து வேறு), கம்மாளர் கருவியான கப்பச்சு, ஆயுதக்காம்பு, களைவெட்டி, சலாக்கு, மாழைகளில் (உலோகங்களில்) சித்திரவேலைப்பாட்டிற்கு உதவும் சலாகை, நுண்ணிய அறுவை மருத்துத்திற்கு உதவும் சலாகை, அறுவை மருத்துவர்கள் பயன்படுத்தும் இருமபுச்சலாகை, கம்பிபின்னுங் கருவியாகிய சவடிமுள், புல் முதலியன வெட்ட உதவும் செதுக்கி, புற்செதுக்கி, கடைசற்கருவிவகையைச் சேர்ந்த நாகவாய், குயவர் ஆயுதங்களு ளொன்று ஆகிய கவருகோல், குயவர் மட்பாண்டத்தைச் சக்கரத்தினின்றும் அறுக்குங் கருவியாகிய பத்தை, மண்பாண்டங்களை அறுக்கப் பயன்படும் ஊசி, குயவர் பயன்படுத்தும் சக்கரமாகிய திரிகை, மட்கலத்தை அறுக்குங் கருவியாகிய மட்பகை,தானே அம்பு எய்யும் எந்திர வில்லாகிய வளைவில்பொறி, கருவிரலூகம், காலில் தைக்கும்படி நட்டுவைக்க உதவும் கருவியாகிய அடியொட்டி, அளவு கருவியாகப் பயன்படுததும் அச்சு, கோட்டையை நோக்கி வரும் பகைவர்களைப் பின்னடையச் செய்யக் கவண்கல் வீசும் இடங்கணிப்பொறி, மதிப்புகூடிய மாழைகளை மெருகேற்றும உருக்குவளை,மூன்று பிரிவுகளாய் அமைந்த சூட்டுககோல் ஆகிய கதுப்புளி, தையலூசி, செம்பொன்னூசி, செப்பூசி, துலாக்கோல்,கைபெயரூசி, முட்டுக்கருவிகள், தசை கிழிக்கும் கருவி ஆகிய உன்னம்,சமநிலையை அறிய உதவும் கருவியான மட்டம், மட்டலகு, பருத்தியினின்று பஞ்சு பிரிக்குங் கருவியாகிய மணை, (பாதம் வைக்கும் மணை,வெட்டுக்கருவியின் அடிக்கட்டையாகிய மணை ஆகியன வேறு) தேங்காய்த் துருவலகு, முள்வடிவாகச் செய்யப்பட்டமுள் கருவி, தராசு, வளைந்த ஆயுதவகையான முள், நூல் முறுக்குங் கருவியாகிய வடிக்கதிர்,

மீன்பிடிகூடை ஆகிய ஊற்றால், குதிரைகளின் மயிர்வெட்டுங் கருவியாகிய கைக்கத்திரிகை, கைகளை இறுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கைக்கிட்டி, தண்டனைக்குப் பயன்படுத்தப்படும் கிட்டிப்புள் என்னும் கருவி, கிட்டிகட்டி, சட்டி சுரண்டுங் கருவி ஆகிய சட்டிசுரண்டி, பனை ஏட்டில் துளையிடுங் கருவி ஆகிய சுரி/சுரியூசி, சூலக்குறடு,சேற்றைத்தள்ளுதற்கு உதவும் கருவி ஆகிய சேறுகுத்தி, சேறுகுத்தி வகையாகிய தளம்பு, துளையிடுங் கருவி ஆகிய தமர், நெற்போரடிக்குங் கோல் ஆகிய தூலம், தேங்காய் மட்டையை உரிக்குங் கருவி ஆகிய தேங்காய் வெட்டி,தேய்பிறையைப் போன்ற அரிவாள் ஆகிய தேய்பிறையிரும்பு, நகம் வெட்ட உதவும் நகவுளி, நகவுளிபோன்ற தச்சுக்கருவி, நிலத்தைச் சமன்படுத்த உதவும் நிலந்தட்டி, செங்கல் செதுக்குங் கருவியாகிய வாய்ச்சி, கிட்டிக்கோல் ஆகிய விடுநகம், யானையின் செவிகளைத் தொளையிடுங் கருவியாகிய வேதனி, கூரானமுட் கருவிவகை ஆகிய அடியோட்டி, அறுவைமருத்துவக் கருவிகளுள் ஒன்றாகிய காயக்கோல், தெண்டுச்சலாகை, சித்திரவதைக்கருவியாகிய நடைத்தூண்டில், பஞ்சு வெட்ட உதவும் கருவியாகிய பஞ்சட்டைக்கம்பு, கனமுள்ள பொருள்களை மேலேகிளப்புங் கருவி ஆகிய தெண்டுதடி, கொத்தர் மட்டம் பார்ப்பதற்கு உதவுங் கருவி ஆகிய கைம்மட்டம், வலைநூலை முறுக்குதற்குப்பயன்படும் கருவி ஆகிய நூமுறுக்கி, பறப்பதற்கு உதவும் இயந்திரமயில் ஆகிய மயிற்பொறி, தச்சர் கருவி வகை ஆகிய சததளம், படந்தீட்டுங் கருவி ஆகிய வனைகோல், மீனவர் கருவி ஆகிய மேலாமரம், சுமையை யேற்றியிறக்குவதற்குரிய கருவி ஆகிய பாரஞ்சாம்பி, அழுக்குப்போக்குங் கருவி ஆகிய தும்படைசி, நீரிறைக்கும் இயந்திர வகையைச் சேர்ந்த சமட்டுச்சக்கரம், எந்திரத்தில் பயன்படுத்தப்படும் சுருள் வளையமாகிய சூத்திரம்,நெருப்பை வெளியிட்டழிக்கும் ஒருவகைப் பீரங்கி ஆகிய பெருநாளிகம், எந்திர உதவியாற் செல்லுதற்குரிய ஊர்தியாகிய யந்திரவூர்தி, ஆபரணங்களை மெருகிடுங்கருவி ஆகிய ஒப்பக்கதிர், நெட்டை என்னும் படைக்கருவி,எண்ணெயாட்டும் எந்திரம் ஆகிய செக்கு,

வேட்டைப்பொறி, எலிப்பொறி ,விலங்கினங்களைப் பிடிக்கும் இடார்,தச்சர் பயன்படுத்தும் கருவிகளுள் ஒன்றாகிய பலகைசுரண்டி, சீவுளி, அறுவை மருத்துவத்திற்குப் பயன்படும் மட்டக்கோலூசி, மீனவர்கள் கருவிகளுள்ஒன்றாகிய மேலாமரம், கடைசற்கருவிவகை ஆகிய நாகவாய், முதலான பல்வகைக்கருவிகள் பற்றிய குறிப்புகளை இலக்கியங்களில் காணலாம்.

எலிமயிர்க்கம்பலம் இருந்தமையால் எலிமயிரை நீக்கவும் கம்பளமாக உருவாக்கவும் பயன்படுத்தப் பெற்ற இயந்திரங்களும் கருவிகளும் இருந்துள்ளமையை உணரலாம்.
செய்குன்று, சுதைகுன்று, கட்டுமலை எனபன பொழுதுபோக்கிற்காகப் பூங்காவுடன் இணைந்த செயற்கைக் குன்றை அமைத்துள்ளமையை விளக்குகின்றன. இப்பொழுதெல்லாம் பொழுதுபோக்குப் பூங்காக்கள் (amusement parks)உள்ளன போல் அக்காலத்திலேயே அமைத்திருந்தனர் எனில் இவற்றுள் கட்டுமானக்கலை முதலான அறிவியல் கலையும் அடங்கும் அல்லவோ? இவை தொடர்பான கருவிகளும் இருந்திருக்க வேண்டும் அல்லவா?பொழுதுபோக்குக் குன்று மட்டுமல்ல, பாதுகாப்புக கருதி இயந்திரக்குன்றையும் அமைத்திருந்தனர். ‘எண்ணரும் பல்பொறி யெந்திரப்பொருப்பும்’(பெருங்கதை : நரவாண காண்டம் : 8) என்ற அடி பல் வகை இயந்திரங்கள் அடங்கிய செயற்கைக் குன்றை அமைத்து உள்ளமையை விளக்குகிறது. செயற்கைக் குன்றை உருவாக்கி அதில் மறையும் அளவிற்கு இயந்திரங்களும் பொறிகளும் அமைத்திருந்தனர் என்றால் இயந்திரவியலில் மிகச்சிறந்து இருக்க வேண்டுமல்லவா? - ( தொடரும்)