பழங்கால மனிதர்கள்
இரஞ்சனி
Wed Nov 28 2012 11:30:19 GMT+0300 (EAT)

புதிதாக ஆரம்பிக்கபட்டிருக்கும் பழங்கால மனிதர்கள் பற்றிய ஒரு தொடருக்காக பிபிசி தொலைகாட்சி நிலையம் உயிருள்ளவை போல தோன்றும் பழங்கால மனிதர்களின் மாதிரிகளை உருவாக்கி இருக்கிறது. தடயவியல் சார்ந்த விவரங்களுடன் நமது மூன்று மூதாதையர்கள் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதை இந்த மாதிரிகள் தெரிவிக்கின்றன.பழமையான எலும்புகளிலிருந்து 21 ஆம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்துடன் எலும்புக் கூட்டிலிருந்து தொடங்கி முழு மாதிரியையும் செய்திருக்கிறார்கள். மறு வடிவமைக்கப்பட்ட இவை, Australopitheus Afarensis அல்லது லூசி, ஹோமோ எரக்டஸ், மற்றும் நியாண்டர்தால் மனிதர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை வெளி காட்டுகின்றன.3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இனம் Australopitheus Afarensis. ஹோமோ எரக்டஸ் மனிதன் தான் உடலின் முடிகளை இழக்க ஆரம்பித்தவன். நியாண்டர்தால் மனிதன் இன்றைய மனிதனின்  நாகரீக முன்னோடி என்கிறார்கள் இந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்.முதலில் லூசி என்று பிரபலமாக அறியப்படும் Australopitheus Afarensis:3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக பூமியின் மேல் நடந்தவள் என்ற பெருமை லூசியைச் சேரும்.

லூசியின் மாதிரியை 1974 இல் எதியோப்பியாவில் கிடைத்த எலும்புக்கூடு ஒன்றை வைத்து உருவாக்கினர். அந்தப் பகுதியில் இருந்த காலடிச் சுவடுகளை அலகிடு செய்து அதிலிருந்து லூசியின் கால்களின் அமைப்பை மூன்று கோண வடிவில் நகலெடுத்தனர். நமக்கு இருப்பதுபோலவே அவளது கால்களிலும் வளைவு இருப்பது இதில் தெரிய வந்தது. அவளது கைகளின் பிரதியை அலகிடு செய்து அதையும் மாதிரி செய்தனர்.லூசி ஒரு சிறு குழந்தையைப் போல  மூன்றரை அடி உயரமே இருந்திருந்தாலும் அவள் ஒரு இளம் வயது – 20 வயது யுவதியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவளது ஞானப் பல் அதிகம் தேயவில்லை. குட்டைக் கால்களும், நீண்ட கைகளும், வலுவான தசைகளுமாக இருந்தாள்.இந்த நேரத்தில் அடர்ந்த காடுகள் மெதுவாக புல்வெளிகளாக மாறத் தொடங்கியதால், அதுவரை மரத்தின் மேல் வாழ்ந்து கொண்டிருந்த லூசிக்கு நடந்து பல இடங்களுக்குச் சென்று உணவை தேடுவது சுலபமாயிற்று.அவளது கால்களில்  இருந்த முழங்கால் இணைப்புதான் அவளை இரண்டு கால் பிராணிகளில் முதன்மையாக  விஞ்ஞானிகள் நினைக்கக் காரணமாயிற்று.

ஒரு சிம்பன்ஸிக்கும், பபூன் குரங்கிற்கும்  முழங்கால் இணைப்பு நேர்கோட்டில் இருக்கும் ஆனால் மனிதனுக்கு ஒரு கோணத்தில் இருக்கும்.மற்ற பாலூட்டிகள் எல்லாம் நான்கு கால்களில் நடக்கின்றன. ஆனால் மனிதன் இரண்டு கால்களில் நடக்கின்றான். மற்ற பிராணிகளிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது அவன் நிமிர்ந்து நடக்கும் செயல்தான். இந்த ஆதிகால மனிதனும் இப்படி நடந்ததால் மனித குடும்ப மரத்தில் முதலாக இவன் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதிப்படுகிறது.ஆனால் இப்படி நிமிர்ந்து நடந்ததற்கு இவள் கொடுத்த விலை அதிகம். லூசியின் கொப்பரை வடிவில் இருந்த இடுப்பெலும்பு நிமிர்ந்து நடப்பதற்காக மாற்றப்பட்டதில் மனித இடுப்பெலும்பை ஒத்து இருந்தது. இதனால் குழந்தையை கருப்பையில் தாங்குவது  கடினம் ஆனதுஆனால் லூசியின் காலத்திலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்து விட்டதால் லூசியின் இடுப்பெலும்பு நாகரீக மனிதர்களின் இடுப்பெலும்பை ஒத்து அகலமாக இருந்தது.


 

ஹோமோ எரக்டஸ்லூசிக்குப் பிறகு ஹோமோ எரக்டஸ் என்னும் நம் இரண்டாவது மூதாதையர் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். ஆப்பிரிக்காவை விட்டு வெளியே வந்து ஆசியாவிலும், சீனாவிலும் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். உச்சகட்டமாக இந்த இனத்தை சேர்ந்த சுமார் 125,000 மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து இருந்தனர்.விஞ்ஞானிகள் ஹோமோ எரக்டஸ்-ஸின் மாதிரியை ‘நாரிகொடோம் சிறுவன்’ என்னும் ஒரு எலும்புகூட்டின் வடிவமைப்பைக் கொண்டு செய்திருக்கிறார்கள். இந்த எலும்புக் கூடு வடக்கு கென்யாவின் லேக் டர்கானா என்ற இடத்தில் 1984 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. சிறிய மூளை, தனித்தன்மை வாய்ந்த முகம் மற்றும் தலை இவற்றால் இந்தச் சிறுவன் நாகரீக மனிதனைப்போலவே இருந்திருக்கிறான். இவனது தசை குழுமங்களும் தற்கால மனிதனின் வடிவமைப்பை ஒட்டியே இருக்கிறது.மெல்லிய உடலும், உறுதியான முதுகும், பின் பக்கங்களும், நீண்ட கால்களுடன் ஒரு ஓட்டக்காரனுடைய கட்டுடல் இவனுக்கு இருந்ததாகத் தெரிகிறது. இந்த உடலமைப்பினால் வெகு தூரம் சென்று  உணவு வேட்டையாட முடிந்தது. இவனது பல் எனாமலிலிருந்து இவன் தனது 8வது வயதிலேயே தாடையில் ஏற்பட்ட கட்டி தொற்றாக மாற இவன் இறந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இவனது உடலமைப்பிலிருந்து பல காத தூரம் ஓடி தங்கள் உணவை தேடிக் கொள்ளும் இனத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அப்படி ஓடும்போது தலை அசைவுக்குத் தகுந்தாற்போல் கண்களின் தொடர்பும் இருந்ததாகத் தெரிகிறது.இந்த ஆதிவாசிகளே முதன்முதலாக நெருப்பு மூட்டவும், உணவை சமைத்து உண்ணவும் செய்தனர். மாறுபட்ட விலா எலும்புகளும், சிறிய வயிறும், சின்ன பற்களும் முந்தைய தலைமுறையை விட மேம்பட்ட உணவை இவன் சாப்பிட்டிருக்கலாம் என்று எண்ண வைக்கிறது.சமீப காலம் வரை, 400,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் சமைத்து உண்டனர் ன்பதை விஞ்ஞானிகள் நம்பவில்லை. ஆனால் புதிய இரசாயன முறை அலசல்கள் இந்தக் கருத்தை மாற்றிவிட்டன. 

மசாசுசெட்ஸ் வில்லியம்ஸ்டவுன் பல்கலைக்கழகவேதியியல் வல்லுனர் டாக்டர் ஆன் ஸ்கின்னர் சுழல் மின்னணு ஒத்ததிர்வுகளின் உதவியால் ஸ்வார்ட்க்ரான்ஸ் குகை அருகே கண்டெடுக்கப்பட்ட எரிந்து போன ஒரு மானின்  எலும்பு மிச்சங்களை ஆராய்ந்ததில் அவை 300 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் புற்களால் உருவாக்கப்பட்ட நெருப்பைக்  கொண்டு எரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.பெரிய மூளை, ஒரு ஓட்டக்காரனுடைய உடலமைப்பு, தீயை வளர்க்கும் திறன், சிறந்த உபகரணங்களுடன் இந்த ஹோமோ ஏரக்டஸ் ஆப்பிரிக்காவிற்கு வெளியேயும் தன் இருப்பிடங்களை அமைத்துக் கொள்ளும் திறன் கொண்டவனாக இருந்தான். அவனுக்கு தடையாக இருந்தது உடலின் உரோமங்கள் தான்.இதே சமயத்தில் தான் நம் மூதாதையர்கள் தாங்கள் உடல் உரோமத்தை இழக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆப்பிரிக்க புல்வெளிகளில் வசித்துவந்த இவர்களுக்கு கடும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உரோமங்கள் தடையாக இருந்திருக்கும். மெதுமெதுவாக உரோமங்கள் உதிர ஆரம்பிக்க, அதிகம் வியர்த்து தங்கள் உடல் உஷ்ணத்தை தணித்துக் கொள்ள  ஆரம்பித்தனர்.நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் மனிதன்:30,000 ஆண்டுகளுக்கு வாழ்ந்த இவர்களின் DNA சில நம் எல்லோரிடமும் இருப்பதால், நாம் ஒரு மூதாதையர் வம்சத்தை சேர்ந்தவர்கள் அல்ல; கலப்பினமே என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.‘லா ஃபெராசி 1’ என்று அறியப்படும், பிரான்ஸ் நாட்டு குகை ஒன்றில் 1909 ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட 70,000 ஆண்டுகளுக்கு முந்திய  ஒரு எலும்புகூட்டில் இருந்து இந்த மாதிரியை செய்திருக்கிறார்கள்.நவீன மனிதனைவிடவும் பலசாலியாகவும், சுமார் 40 வயதிலிருந்து 55 வயதிற்குட்பட்ட, 5 அடி 6 அங்குல உயரமான மனிதனின் எலும்புக்கூடு இது.நவீன கால பந்து வீச்சாளர்களின் மேற்கை எலும்பு போல வட்ட வடிவில் இல்லாமல் இவனது  மேற்கை எலும்பு முட்டை வடிவத்தில் இருந்ததால் இவர்கள் தங்கள் உணவை (இரையை) குத்தி கொன்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதற்கு முன் வாழ்ந்தவர்கள் ஈட்டி போன்ற ஆயுதங்களை எறிந்து தாங்கள் இரையைக் கொன்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மனித இயல் வல்லுனர் டாக்டர் காலின் ஷா இன்னொரு கருத்தையும் முன் வைக்கிறார்.“நியாண்டர்தால் மனிதர்கள் மிகக் குளிரான பிரதேசத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். அதனால் தாங்கள் உடலை வெப்பமாக வைத்திருப்பது அவர்களுக்கு இன்றியமையாதது. அதனால் உடைகளில் அவர்கள் அதிகக் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இவர்களின் வலது கை பெரியதாகவும் இடது கையை விட கட்டுரம் வாய்ந்ததாகவும் இருப்பதிலிருந்து இந்த முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.”இவர்கள் நாம் நினைத்திருந்ததை விடவும் அதிக பண்பாளர்களாக இருந்திருக்க வேண்டும். 37,000 ஆண்டு பழமை வாய்ந்த வண்ணம் தீட்டிய கிளிஞ்சல் – நடுவில் ஒரு துளையுடன் இருப்பது – ஒரு பதக்கமாக இருக்க வேண்டும். நவீன கால மனிதனின் வருகைக்கு முன்பே இவர்கள் அதி நவீன வாழ்க்கை நடத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.