புதிய விண்மீன் பேரடை 'மிக அதிக தூரத்தில்' கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி 
Sun Nov 17 2013 17:51:32 GMT+0300 (EAT)

30 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள விண்மீன் பேரடை (Galaxy) ஒன்றை பன்னாட்டு வானியலாளர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் இது மிக அதிக தூரத்தில் உள்ள பேரடை ஆகும். ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி இந்தப் பேரடையை அவதானித்தது, பின்னர் ஹவாயில் உள்ள கெக் விண்வெளி அவதான நிலையம் தூரத்தை உறுதி செய்தது. இக்கண்டுபிடிப்பு பற்றிய விபரங்கள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. "இதுவே நாம் இதுவரை அறிந்த பேரடைகளுள் மிக அதிக தூரத்தில் உள்ளது. இந்த விண்மீன் பேரடையை நாம் பெரு வெடிப்பு இடம்பெற்றதில் இருந்து 700 மில்லியன் ஒளியாண்டுகளுக்குப் பின்னர் நாம் பார்க்கிறோம்," என அமெரிக்காவின் டெக்சாசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவன் ஃபின்கெல்ஸ்டைன் கூறினார். இந்தப் பேரடைக்கு z8_GND_5296 எனப் பெயரிடப்பட்டுள்ளது.