மிதவை வாழிகள் பெருங்கடல்நீரின் அமிலத்தன்மையை விரும்புகின்றன - பிளோஸ் ஒன்

விக்கிசெய்தி
Tue May 14 2013 14:40:32 GMT+0300 (EAT)

காற்றில் கார்பன்டையாக்சைடு பங்கு அதிகமாகும் பொழுது பெருங்கடல்கள் அமிலத் தன்மையடைகின்றன. கூடுடைய மிதவைவாழிகள் (planktons) அமிலத் தன்மை அதிகரிப்பால் அவதிப்படாமல் வேகமாக வளர்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.
பெருங்கடலின் அதிக அமிலத்தன்மையினால் மிதவை வாழிகளுக்கு அதன் கால்சியம் கார்பனேட்டு கூடுகளை உருவாக்குவதில் கடினமான சிக்கல் ஏற்படும் என்று அறிவியாலளர் எண்ணியிருந்தனர். ஆனால் அதற்கு மாறாக, அவை ஒரு மில்லியனில் 1320 கார்பன்டையாக்சைடு பகுதிகள் உள்ள ஒரு கடல் நீர்க்குளத்தில் 17 விழுக்காடு வேகமாக வளர்வதை சான்டா பார்பரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெபோரா இக்லேசியெசு-ராட்ரிகசு என்பவரின் தலைமையிலான அறிவியலாளர் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

அவ்வாறு வளர்ச்சியடையும் எமிலியானியா கக்சுலெயி (Emiliania huxleyi) என்னும் இந்த மிதவை வாழிகளின் கூடுகளை காக்கோலித்து (coccolith) என அழைக்கின்றனர். இந்த காக்கோலித்துக் கூட்டின் பயன்பாட்டை அவர்களால் இன்னும் அறிய முடியவில்லை, ஆனாலும் அவை அதன் உடலில் ஒரு அடிப்படை உறுப்பு என அவர்கள் மேலும் கூறினர்.

இது பற்றிய முழு ஆய்வினை பிளோஸ் ஒன் இணையத்தில் ஆய்வாளர்கள் இவ்வாரம் வெளியிட்டுள்ளனர்.