‘புவியியலின் தந்தை’யால் 200 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட (காணாமல் போன) வரைபடம் கிடைத்தது-வருடம் முழுவதும் கொண்டாட புவியியலாளர்கள் திட்டம்

ஜெயஸ்ரீ
Thu Sep 22 2016 10:14:51 GMT+0300 (EAT)

பிரிட்டன் நாட்டில் ‘புவியியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர் வில்லியம் ஸ்மித். இவர் உலகிலேயே முதல் புவியியல் வரைபடத்தை எழுதியவர். அவருடைய படைப்பு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் பல தரப்பட்ட பாறை அடுக்குகளைக் சுட்டிக் காட்டியது. தொலைந்து போன அவருடைய அரிய படைப்பு ஒன்று சென்ற வருடம் மீண்டும் கிடைத்தது. அந்த வரைபடம் வரைந்து 200 வருடங்கள் நிரைவுற்ற நிலையில் லண்டனின் புவியியல் குழு வில்லியம் ஸ்மித்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த வரைபடத்தை வெளியிட உள்ளது. புவியியல் குழுவில் புவியியலின் வரலாற்றிற்கு என்று தனிக் குழு இருக்கிறது. அதன் தலைவர் ஜான் ஹென்ரி கூறுகையில், ”தொல் படிவங்களுக்கென்று குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றை கொண்டு புவியியல் படிநிலைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை முதலில் உணர்ந்தவர் வில்லியம் ஸ்மித் தான். ஸ்மித்தின் கண்டுபிடிப்பிற்கு முன்னர் தொல்படிவங்களை அலங்காரப் பொருட்களாக தான் மக்கள் கருதினார்கள். புவியின் கட்டமைப்பை வரிசைப்படுத்த இப்படிவங்கள் பயன் படும் என்று யாரும் நினைக்கவில்லை” என்று விளக்கினார். ஸ்மித், ரயில்கள் கண்டுப்பிக்கப்படும் முன்பே இந்த வரைபடத்தை உருவாக்கினார். 

14 ஆண்டுகள் நடந்தும் குதிரை சவாரியிலும் இங்கிலாந்தின் எல்லாத்தரப்பட்ட நிலங்களையும் பாறை அடுக்குகளையும் ஆராய்ந்து இந்த படத்தை எழுதினார். 1815 ஆம் ஆண்டு ஜான் கேரி என்பவர் செம்பு தகடுகளில் ஸ்மித்தின் வரைபடத்தைப் பதித்து வெளியிட்டார். ஒவ்வொரு தகடும் கையால் நிறம் பூசப்பட்டது. இவ்வரைபடம் வருவதற்கு முன்பு கனிமங்களைக் குறிக்கும் வரைபடங்கள் தான் உபயோகிக்கப்பட்டன. வில்லியம் ஸ்மித்தின் இந்தக் கண்டுபிடிப்பு பிரபலம் அடைய 10 வருடங்கள் ஆயின. ஸ்மித்தின் தந்தை இரும்புக் கொல்லர். ஆதலால் அவரின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க சிறிது கால தாமதம் ஆனது. 1807 இல் தொடங்கிய புவியியல் குழுமம் கூட அவர் கொல்லரின் மகன் என்பதால் பாரபட்சம் காட்டியது. ஆனாலும் பல செல்வந்தர்கள் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்களின் நிலங்களில் நீர் மற்றும் நிலக்கரி எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து அதை உபயோகிக்க வழி வகுத்தும் கொடுத்தார் ஸ்மித். நாளடைவில் புதிய உறுப்பினர்கள் உள்ளே வர ஸ்மித்திற்கு ‘புவியியலின் தந்தை’ என்ற பெயரும் 1831 இல் சூட்டப்பட்டது. 

“ஸ்மித் எழுதிய 70 அசல் வரைபடங்கள் இன்றும் உள்ளன” என்று ஹென்ரி கூறினார். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம் மாறி வைக்கப்பட்ட ஒரு வரைபடம் சமீபத்தில் கிடைத்துள்ளது. அதன் நிறங்களும் உருக்குலையாமல் பாதுகாப்பாக உள்ளன. “காணாமல் போன படம் மறுபடியும் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதைப் பழமை மாறாமல் புதுப்பித்துள்ளோம்” என்றும் ஹென்ரி கூறினார். இந்த வரைபடம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வரைபடம் எழுதி 200 வருடங்கள் ஆனதை முன்னிட்டு வருடம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மார்ச் 23 ஆம் தேதி சர் டேவிட் அட்டென்பரோ லண்டனில் ஸ்மித் வாழ்ந்த இடமான 15, பக்கிங்ஹாம் தெருவில் அவரைப் பெருமை படுத்தும் வகையில் சிறப்பு வில்லையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் “மேப்” எனும் கவிதை தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை புவியியல் குழுவின் நூலகர் மைக்கேல் கிம் வாசித்தார். இந்தக் கவிதை தொகுப்பில் இங்கிலாந்தின் முன்னால் அரசவை கவிஞரான சர் ஆன்ட்ரூ மோஷன்னின் கவிதை மட்டும் இன்றி பெனிலோப் ஷட்டுள், ஹெலன் மோர்ட் ஆகியோரின் கவிதையும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.