தேவையான வண்ணத்தை வெளியிடும் புதிய கண்டுபிடிப்பு

ஜெயஸ்ரீ
Thu Sep 22 2016 10:13:28 GMT+0300 (EAT)

கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நமக்கு தேவையான நிறத்தைப் பிரதிபலிக்கும் மெல்லிய கருவியை உருவாக்கியுள்ளனர். இக்கருவி வளைக்கப்படும் போது அல்லது அதன் சிறிது வலு கொடுக்கப்படும் போது நிறம் மாற்றும் வலிமை உடையது. இக்கருவி பலதரப்பட்ட பரப்புகளில் பல வண்ணங்களைக் கொடுக்கும். இந்தக் கருவியில் சிறு மேடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒளியின் அலைநீளத்தை விட சிறிதானவை. மனிதனின் முடியை விட ஆயிரம் மடங்கு மெல்லிய சிலிக்கான் படலத்தில் இந்த மேடுகள் பதிக்கப்பட்டிருக்கிறன. ஒவ்வொரு மேட்டிற்கும் இடையில் உள்ள இடைவெளி தான் பலத்தரப்பட்ட நிறங்களுக்குக் காரணம். இந்தக் கருவி வண்ணங்களை உருவாக்க புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி இருக்கிறது. மேலும் இவை அதிக அளவில் ஒளியைத் திருப்பி அனுப்பும் திறன் கொண்டது. 

83 சதவிகித ஒளியை திருப்பி அனுப்பப்படுவதால் நிறங்களை உருவாக்குவதிலும் இக்கருவி திறமை வாய்ந்தது. சாதாரணமாக வண்ணாப்பூச்சுகளிலும் கட்டுமானப்பொருள்களிலும் வேதியல் கூட்டமைப்பைப் பொருத்து வண்ணங்கள் மாறுபடும். வெள்ளை நிற ஒளி இப்பொருள்களின் மீது விழும் போது ஒளியின் சில அலைநீளங்கள் உள் இழுக்கப்படும். ஒளியின் சில அலைநீளம் மட்டும் திருப்பி அனுப்பப்படும். இது தான் குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டும் தெரிவதற்கான காரணம். ஆக பல்வேறு நிறங்கள் வேண்டுமெனில் அப்பொருளின் வேதியல் கட்டமைப்பை மாற்ற வேண்டும். ஆனால் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கும் கருவியிலோ நிறத்தின் கட்டமைப்பு முறையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். 

இம்முறைப்படி நிறத்தின் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் நிறத்தை மாற்ற முடியும். இந்த செயல்முறை புதிதல்ல. இயற்கையில் எப்போதும் நடந்துகொண்டிருப்பது தான். வண்டுகளின் ஓடு மற்றும் மயில்களின் இறகுகள் நிறக் கட்டமைப்பின் வெளிப்பாடு தான். புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன் முன்னூறு வருடங்களுக்கு முன்னரே இந்த ஊகத்தை முன் வைத்துள்ளார். மேலும் இந்த நுட்பங்கள் வணிகம் சார்ந்த பயன்பாட்டிற்கும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பு அதிகமான வளைவு திறன் கொண்டது. அதோடல்லாமல் பலத்தரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டது. குறிப்பிட்ட நிறங்களைத் துள்ளியமாக அளிக்கும் திறன் கொண்டது. மேலும் உருவமறைப்புக்காக செய்யப்படும் பொருள்களிலும் கட்டிடங்களிலும் பாலங்களிலும் உள்ள கட்டமைப்பு குறைகளைச் சுட்டிக்காட்டவும் பயன்படுகிறது.