வெள்ளி நானோதுகளை எதிர் நுண்ணுயிரியாக பயன்படுத்த முடியுமா?

முனைவர். ஆர். சுரேஷ்
Tue May 10 2016 00:12:16 GMT+0300 (EAT)

நானோ வேதியியல் ஆராய்ச்சியிலர்களால் பெரிதும் கவரப்பட்ட பொருள் வெள்ளி உலோக நானோத்துகள்! இதற்கு காரணம் வெள்ளி துகளின் மிகச்சிறந்த எதிர் நுண்ணுயிரி பண்பாகும். ஆம், வெள்ளி நானோத்துகளின் அதிக நிலைப்பு தன்மையும், பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதும், மற்ற பாரம்பரிய நுண்ணுயிர் கொல்லிகளை காட்டிலிலும் அதிக எதிர் நுண்ணுயிர் பண்பும் தான்!


எதிர் நுண்ணுயிரி என்றால் என்ன? நுண்ணுயிரிகலான, பாக்டீரியாங்கள், பூஜ்சைகள் நம் உடலினுல் சென்று சில நச்சுத்தன்மை உடைய வேதிபொருட்களை வெளியிடும். அதனால் நமக்கு தீங்கு நேரிடும். இத்தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகலை கொல்வதின் மூலம், அவைகளினால் ஏற்படும் பாதிப்பை நீக்க முடியும்.

எவ்வாறு வெள்ளி நானோத்துகள் பாக்டீரியாங்களை அழிக்கிறது? இக்கேள்விக்கு பல வகையான வழிமுறைகள் ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வழிமுறையை காண்போம். வெள்ளி நானோத்துகள் பாக்டீரியாவின் செல் சுவரை ஊடுருவி செல்கின்றது. செல்லினுல், வெள்ளி நானோத்துகள் ஆக்சிகரனம் அடைந்து வெள்ளி அயனிகளை தருகிறது. பொதுவாக, வெள்ளி அயனிகள் கந்தகம் அல்லது பாஸ்பரஸ் தனிமங்களை கொண்ட செல் உருப்புகளுடன் அதிக அளவில் வினைபடுகிறது. இதன் அடிப்படையில், வெள்ளி அயனிகள் சுவாச நொதியினை தாக்கி, அதிக வினைதிறன் மிக்க ஆக்சிஜன் காரணிகளை உருவாக்குகின்றது. இதன் காரணமாக பாக்டீரியாவின் செல் அழிக்கப்படுகிறது. பொதுவாக, வெள்ளி நானோ அமைப்பை பொருத்து நுண்ணுயிரிகலை கொல்லும் திறன் அமைகிறது. உருளை, கோலம் முதலிய வடிவங்களை காட்டிலும், முக்கோண தட்டை வடிவிலான வெள்ளி நானோத்துகள் மிக அதிக வினை திறன் மிக்க நுண்ணுயிர் கொல்லியாக விளங்குவதாக ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது.

சிறந்த எதிர் நுண்ணுயிர் பண்பின் அடிப்படையில், வெள்ளி நானோத்துகள் நீர் சுத்தீகரிப்பு சாதனங்களிலும், துணிகளிலும் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், வெள்ளி நானோத்துகளை எதிர் நுண்ணுயிர் காரணியாக பயன்படுத்துவதற்கு எதிர்பும் கிளம்பி இருக்கிறது. இதற்கு காரணம், வெள்ளி அயனிகள் தான்! ஆம், உலோக வெள்ளி நானோத்துகள் தீங்கற்றது மற்றும் பாதுகாப்பானது. ஆனால் வெள்ளி அயனிகள் தீங்கானது. வெள்ளி உலோக நானோத்துகளை பயன்படுத்தினாலும், அவைகள் செல்லினுல் சென்றவுடன் வெள்ளி அயனியாக மாறி பாக்டீரியாவின் செல்லை அழிக்கிறது. இந்த வெள்ளி அயனிகள் மனித செல்லையும் தாக்கலாம் என்பதால் தான் வெள்ளி நானோத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற முழக்கங்களும் ஒலிக்க தொடங்கியுள்ளது. மிகச்சிறந்த ஆய்வுகளின் மூலம் மனித இனத்திற்கும் சுற்றுசூழலிற்கும் பாதிப்பில்லாத பொருட்களை உருவாக்கி அதன் மூலம் அனைவரும் பயன் அடைந்து இன்புற்று வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.