நானோ தொழில்நுட்பத்தின் முன்னோடி இயற்கை!

முனைவர். ஆர். சுரேஷ்
Sat Feb 13 2016 22:02:17 GMT+0300 (EAT)

தற்காலத்தில் நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அளப்பரியது. உடுத்தும் உடையிலும், வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களிலும், சில மருந்துகளிலும், உணவு பொருட்களிலும், நோயினை கண்டறியும் கருவிகளிலும், நீர் சுத்தீகரிப்பு சாதனங்களிலும், மின் உற்பத்தி மற்றும் சேமிப்பு கலனிலும், நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறக்குறைய எல்லா துறையிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மிகவும் கவரப்பட்டு பயன்படுத்தும் தொழில்நுட்பமாக விளங்குகிறது நானோ தொழில்நுட்பம்! நானோ தொழில்நுட்பத்தின் மீதான மோகத்திற்கு என்ன காரணம்? நானோ பொருட்களின் அதீத பயன்களும், வித்தியாசமான பண்புகளும் தான்! முதலில் ’நானோ’ என்றால் என்ன? என்று அறிந்து கொள்வோம். 

’நானோ’ என்ற சொல் ’நன்னாஸ்’ என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ’நன்னாஸ்’ என்பதற்கு ’குல்ல’ அல்லது ’சிறிய’ என்று பொருள். உதாரணமாக ஜப்பனீஸ் குரங்கையும், மார்மோசெட் வகை குரங்கையும் பாருங்க.

இரண்டும், குரங்கினமாக இருந்தாலும், ஜப்பனீஸ் குரங்கின் சராசரி உயரம் 60 cm ஆனால் மார்மோசெட்டின் சராசரி உயரமோ 19 cm தான்! எனவே, உயரத்தில் மிகவும் சிரியதான ’மார்மோசெட்’ குரங்கினத்தை, ’நானோ மார்மோசெட்’ என்று அழைக்கலாம். ஆனால், ’சிறிய’ என்ற சொல் ஒரு ஒப்பீட்டலவிலான வார்த்தை. கிலோமீட்டரை, மீட்டருடன் ஒப்பிடும் பொழுது, மீட்டர் ’சிறிய’ அளவு ஆகும். இதே போன்று மீட்டரை, சென்டிமீட்டருடன் ஒப்பிடும் பொழுது, சென்டிமீட்டர் ’சிறிய’ அளவு ஆகும். எனவே, ’சிறிய’ அல்லது ’நானோ’ பொருள் என்றால், எந்த அளவிற்கு சிறிய? என்ற வினாவுடன், குழப்பமும் ஏற்படுவதை தவிற்க விஞ்ஞானிகள், ’நானோ’ விற்கு சரியான அளவை கொடுத்துள்ளனர். அதுதான் 10-9. அதாவது, ஒரு பொருள் நானோமீட்டர் அளவில் இருக்கும் என்றால் அதன் அளவு 10-9 m ஆகும்.

சரி, ஒரு பொருளின் அளவு குறைந்து நானோமீட்டர் அளவிற்கு சென்றால் என்ன நன்மை? அப்பொருளின் பண்புகள் பெருமளவு மாருபடும், அதனால் அதன் பயன்களும் அதிகரிக்கும். உதாரணமாக மார்மோசெட் குரங்கை பார்க்கும் பொழுது நம்மிடையே ஆச்சர்யம் தோன்றுகிறது அல்லவா? இதற்கு காரணம் இக்குரங்கின் அளவு தான்!

எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் நானோதொழில்நுட்பத்தை உன்மையில் மனிதர்கள் உருவாக்கினார்களா? என்றால், இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. மேலும் நானோ தொழில்நுட்பத்தின் முன்னோடி இயற்கை தான் என்பதை, பின்வரும் செய்திகள் மூலம் ஊர்ஜிதபடுத்த முடுயும்!

பல்லியின் ஒட்டும் தன்மை:

நம் வீட்டின் சுவற்றின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை பாருங்கள். புவியீர்ப்பு விசையையும் எதிர்த்து பல்லி உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? அதன் கால்கள் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பல்லியின் ஒவ்வொரு காலிலிலும் லட்சக்கணக்கான இழைகள் உள்ளதாகவும், ஒவ்வொரு இழையிலும் என்னற்ற ’ஸ்பேட்சுலே’ எனப்படும் நானோஇழைகள் உள்ளதாகவும் கண்டரியப்பட்டுள்ளது. இந்நானோ கட்டமைப்புகளே பல்லி சுவற்றிள் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கு காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மனிதர்கலால் கண்டுபிடிக்கப்பட்டது தான் ”நானோபசைகள்”.

நமீப் பாலைவனத்து வண்டுகளின் நீர் அருந்தும் முறை:

நமீப் பாலைவனங்களில் காணப்படும் வண்டுகள் வித்தியாசமான முறையில் நீரை அருந்துகின்றன. மிகவும் வெப்பமான மற்றும் மிகமிக குறைவான மழைபொழிவை கொண்ட இப்பாலைவனத்தில், அதிகாலை பொழியும் பனிதுளியை இவ்வண்டுகள் தங்களது உடலின் மேற்கூட்டில் சேர்த்துவைத்துக் கொள்கிறது. அதாவது, இவ்வண்டுகளின் மேற்கூட்டில் நானோ அளவிலான நீரைவிலக்கும் தன்மை கொண்ட மெழுகும், நீரை ஈர்க்கும் தன்மை கொண்ட பொருட்களும் மாறி மாறி அமைந்துள்ளதால் நீர்துளிகள் இக்கூட்டின் நீரை ஈர்க்கும் தன்மை கொண்ட பொருட்களுடன் ஒட்டிக்கொள்கின்றன. வேண்டிய பொழுது, மெழுகினால் ஆன அவற்றின் முன்னங்கால்களின் மூலம் அதன் மேற்கூட்டின் மீது சேர்த்து வைத்திருக்கும் நீரை எடுத்து குடிக்கின்றன. இதே போன்று நானேஅமைப்புகளை கொண்ட செயற்கை நீர் உறிஞ்சிகளை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

மேலும், இறகுகளின் நீர் ஒட்டா தன்மை, சிலந்தி வலையின் உறுதி, நீரின் மேற்பரப்பின் மீது நடக்கும் பூச்சிகள், நீரை உறிஞ்சும் களிமண், நீரை விலக்கும் தாமரை இலைகள், வண்ணத்து பூச்சியின் நிறங்கள், உள்ளிட்ட பல காட்சிகளில் நானோதொழில்நுட்பம் அடங்கியுள்ளது.