மாற்றத்திற்குள்ளான PRDM12 மரபணு மூளைக்குச் செல்லும் வலி நரம்புகளைத் தடுக்கிறது

ஜெயஶ்ரீ
Thu Feb 04 2016 23:10:07 GMT+0300 (EAT)


உடல் இயக்கத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை வலி உணர்த்துகிறது. PRDM12 எனும் மரபணுவில் இயற்கையாக ஏற்படும் சடுதிமாற்றத்தால்(mutation) உடலில் ஏற்படும் வலியை உணரமுடியாது என்று ‘நேட்சர் ஜெனெடிக்ஸ்’ எனும் இதழில் கட்டுரை வெளிவந்துள்ளது.

வலி என்னும் எச்சரிக்கை மணி அடிக்காவிடில் மனிதன் தன்னையறியாது உண்டாகும் காயங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள தவறிவிடலாம். 

இதில் சில நன்மைகளும் இருக்கின்றன. மாற்றத்திற்கு உள்ளான PRDM12 மரபணு, வலியை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டு அதீத வலியால் துடிப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். 

PRDM12 மரபணு, வலியை உணரக்கூடிய நரம்பணுக்களை உருவாக்கும் புரதத்தை உற்பத்தி செய்ய உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த நரம்பணுக்கள் ‘நோசீசெப்டார்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மாற்றப்பட்ட PRDM12 மரபணுவோடு பிறப்பவர்களுக்கு வலிக்கான சமிக்ஞை மூளையைச் சென்றடைவது இல்லை. “வலியை உணர வலிக்கான நரம்பணுக்கள் வளர வேண்டும்” என்று வுட்ஸ் விளக்குகிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜியோஃப் வுட்ஸ் குழு சடுதிமாற்றப்பட்ட PRDM12 மரபணு கொண்ட 11 குடும்பங்களைக் கண்டுபிடித்து சோதித்துள்ளனர். 

“கரு உருவாகும் போதே PRDM12 புரதம் நோசீசெப்டார் நரம்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. பிறந்த பின்னும் அப்பணியைத் தொடர்கின்றன என்று நம்பப்படுகிறது. வலி நரம்புகளின் முழுமையான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் இந்த மரபணு முக்கியமானது என்று தெரிகிறது என்றார் வுட்ஸ்.

இந்தப் புரதம் வலி உண்டாக்கும் நரம்புகளில் மட்டுமே காணப்படுகிறது. வரும் காலத்தில் இதைப் பயன் படுத்தி வலி நிவாரணச் சிகிச்சை உருவாகும் வாய்ப்புள்ளது. உடலின் மற்றப் பாகங்களைப் பாதிக்காமல் வலி இருக்கும் இடத்தில் மட்டும் வேலை செய்யும் மருந்தாக அமையும். நோசீசெப்டார் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால் பலரின் அதீத வலியைக் குணப்படுத்த முடியும்” என்று வுட்ஸ் கூறினார். 

மேற்கோள்: 

Y-.C. Chen et al. Transcriptional regulator PRDM12 is essential for human pain perception. Nature Genetics. May 25, 2015. doi: 10.1038/ng.3308