செவ்வாய் கிரகத்திற்கு சென்ற இந்தியாவின் முதல் கள ஆய்வாளர், மாம்

ஜெயஶ்ரீ
Thu Feb 04 2016 23:09:33 GMT+0300 (EAT)

இந்தியாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் இயந்திர கள ஆய்வாளர் அக்கிரகத்தின் அற்புதமான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் சுழற்சி தூதுக்குழு (Mars Orbiter Mission aka MOM) என்றழைக்கப்படும் இந்த இயந்திரம் அனுப்பியுள்ள புகைப்படங்களை இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ (ISRO) வெளியிட்டுள்ளது. இதில் செவ்வாயின் எரிமலைகள், நிலவுகள், பள்ளத்தாக்கு என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. மாம் இன் இலக்கு செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம், வெளிப்புறச் சூழல், கனிமவியல்(mineralogy), புறவடிவயியல்(morphology) ஆகியவற்றை ஆய்வு செய்வதே ஆகும். இதற்காகவே 15 கிலோ எடையுள்ள அறிவியல் கருவிகள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இதை தவிர மீத்தேன் வாயுவைத் தேடும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.

பூமியில் இருந்து கிளம்பிய 10 ஆவது மாதத்தில், சென்ற வருடம் செப்டம்பர் 23ஆம் தேதி செவ்வாயின் சுழற்சிப் பாதையில்ம் மாம் இணைந்தது. நீள் வட்ட வடிவில் சுழலும் இந்த விண்வெளி ஆய்வுக்கலத்தின் அண்மை வட்டணைப்புள்ளி 421 கிலோமீட்டர். தூர வட்டணைப்புள்ளி 76000 கிலோமீட்டர்.

செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வர மாம் 72 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நவம்பர் 5, 2013 அன்று பி.எஸ்.எல்.வி மூலம் பூமியின் சுழற்சிப்பாதையில் செலுத்தப்பட்டது. 73 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த திட்டம் ஆறு மாதம் மட்டுமே நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாம் இன் ஐந்து கருவிகளும் நல்ல நிலையில் வேலை செய்து கொண்டிருந்ததாலும் தேவையான அளவு எரிவாயு மிச்சம் இருந்ததாலும் மேலும் ஆறு மாதங்களுக்கு இஸ்ரோ அதன் சோதனையை நீட்டித்தது.

ஜூன் மாதம், பூமியும் செவ்வாயும் நேர் கோட்டில் சுழலும். அச்சமயம் சூரியன் இவ்விரண்டிற்கும் இடையில் இருக்கும். இதனால் செவ்வாயைச் சுற்றியுள்ள அனைத்து விண்கலங்களும் செயல் இழந்துவிடும் என்பதால் செவ்வாய் குறித்த அனைத்து புகைப்படங்களையும் மாம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

‘மார்ஸ் கலர் கேமரா’ வில் எடுக்கப்பட்ட ஆர்சியா மான்ஸ் எரிமலையின் படத்துடன் அவ்விடத்தின் அமைப்பை இணைத்து அந்த எரிமலையின் முப்பரிமாண தோற்றத்தை வெளிட்டுள்ளனர். இட அமைப்பை ‘மார்ஸ் ஆர்பிட்டர் லேசர் ஆல்டிமீட்டர்’ (Mars Orbiter Laser Altimeter) மூலம் கண்டறிந்தனர். இந்தப் புகைப்படம் 10707 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மான்ஸ்ஸின் பக்கவாட்டில் எரிமலையின் படிவுகள் இருந்ததென்று இஸ்ரோ கூறியுள்ளது. இந்த புகைப்படம் இவ்வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது.

பிடல் எனும் எரிமலை வாயின் படம் ஏப்ரல் 23 ஆம் தேதி 808 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் சிறிய வகை எரிமலைகள் பல காணப்படுகின்றன. 40 கிலோமீட்டர் அகலமான எரிமலை ஆஃபிர் பிளானம் எனும் இடத்தில் உள்ளது. இது வல்லெஸ் மரினெரீஸ்ஸின் கிழக்கு பகுதியில் உள்ளது என்று இஸ்ரோ விளக்குகிறது. வட்ட வடிவும் அல்லாது நீள் வட்டமும் அல்லாத இந்த எரிமலை வாயின் விசித்திர வடிவத்திற்கு மேற்கிலிருந்து கிழக்குவரை தொடரும் பிளவு தான் காரணம் என்கின்றனர்.

வல்லெஸ் மரினெரீஸ், சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு ஆகும். 4000 கிலோமீட்டர் நீளம் 600 கிலோமீட்டர் அகலம் 7 கிலோமீட்டர் ஆழமான இந்த பள்ளத்தாக்கு, ‘கிரான்ட் கேன்யன் ஆஃப் மார்ஸ்’ என்று குறிக்கப்படுகிறது.

“ஜூன் 8 முதல் 25 வரை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் எந்த வித தொடர்பும் இருக்காது. 25 ஆம் தேதிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விடும். விண்கலத்தில் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்பதால் பிரச்சனை இல்லை” என்று இஸ்ரோவின் செயற்கைக் கோள் மைய இயக்குனர் எம். அண்ணாதுரை ‘தி ஹிந்து’ இதழில் தெரிவித்திருக்கிறார்.

இது வரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ஏழு விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் நாசா, ஈசா (European Space Agency), இஸ்ரோ அனுப்பிய ஐந்து வட்டணைக்கலங்களும்(orbiters), நாசா அனுப்பிய இரண்டு தரை ஊர்த்திகளான(rovers) க்யூரியாசிட்டி(Curiosity) மற்றும் ஆப்பர்சூனிட்டி(Opportunity)யும் அடங்கும்.