குழந்தைகள் மற்றும் மகளிரின் ஆரோக்கியத்திற்காக ஐயோடின் நெத்திப் பொட்டு

ஜெயஶ்ரீ
Thu Feb 04 2016 23:06:58 GMT+0300 (EAT)

காலங்காலமாக இந்தியப் பெண்களுக்கு புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இது இந்து மதத்தின் கலாச்சாரமாக கருதப்படுகிறது. காலப்போக்கில் பெண்கள் அழகுக்காக வெவ்வேறு நிறத்திலும் வடிவத்திலும் பொட்டுகளைச் சூடுகின்றனர்.

‘வாழ்வைக் காக்கும் பொட்டு’ (Life Saving Dot) எனும் அமைப்பு மகளிருக்கு தேவையான அளவு நுண்ணூட்டப்பொருட்கள்(micronutrients) கிடைக்க இந்த பொட்டுக்களை உபயோகிக்க உள்ளனர். தைராய்டு சுரப்பிகளுக்கு தேவையான ஐயோடின் குறைபாட்டால் மனச் சோர்வு, உடல் எடைக் கூடல் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. கருவுற்றிருக்கும் போது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெருமளவு ஐயோடின் உதவுகிறது. இதில் குறைபாடு ஏற்படும் போது குழந்தைக்கு மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன; சில சமயங்களின் இறந்து போவதற்கும் வாய்ப்புள்ளது.

நம் நாட்டில் ஐயோடின் இல்லாத மண்ணில் பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. இது போன்ற இடங்களில் 350 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மேலும் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு ஐயோடின் கலந்த உப்பு கிடைப்பதில்லை. இந்தப் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்க ‘நீல்வசந்த் மருத்துவ அறைக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம்’ புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

லாப நோக்கமற்று செயல்படும் இந்நிறுவனம், நாசிக்கில் உள்ளது. ‘கிரே குரூப் சிங்கப்பூர்’ எனும் விளம்பர நிறுவனத்தோடு இணைந்து பெண்களின் ஐயோடின் பற்றாக்குறையைத் தீர்க்க புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் சூடும் பொட்டுகளின் பின்புறத்தில் ஐயோடின் பூசுவதே அவர்களின் திட்டம். “எளிய அதே சமயம் ஆக்கப்பூர்வமான இம்முறைப்படி பெண்கள் பொட்டுக்களைச் சூடினால் பின்புறத்தில் இருக்கும் ஐயோடின் அவர்களின் உடலுக்குள் நுழைந்து அவர்களுக்கு தேவையான ஐயோடினை அளிக்கும்” என்று மருத்துவர் பிரச்சி பவார் கூறினார். இவர் இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர். இவரது குழு ஐயோடின் பற்றக்குறையைத் தீர்க்க மேலும் தேவைப்படும் முயற்சிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இத்திட்டம் வெற்றி அடைந்தால் குறைந்த செலவில் ஊட்டச்சத்து கிடைக்கும்.

யூ.என்.ஐ.சி.ஈ.எஃப் (UNICEF) இன் நுண்ணூட்டப்பொருள் நிபுணரான ரோலன்டு குப்கா கூறுயதாவது, “வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் ஐயோடின் ஆவியாகிவிட்டால் அவமானம் தான் மிஞ்சும். எனினும் இந்தியாவின் ஐயோடின் பற்றாக்குறையைக் குறைக்க முயற்சி எடுப்பது வரவேற்கத்தக்கது”. மைக்கேல் ஸிம்மர்மண் எனும் ஊட்டச்சத்து ஆய்வாளர், “இதே முறையில் செயல்படும் பல மருந்துகள் வந்துவிட்டன. ஐயோடின் பொட்டுக்கள் குறித்த சோதனையை இந்நிறுவனத்தார்கள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்” என்றார். “ஐயோடின் பொட்டுக்கள் வேலைச் செய்யவில்லை என்றாலும் பரவா இல்லை. ஏனெனில் மக்கள் மத்தியில் ஐயோடின் பற்றாக்குறைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விடும். பலருக்கு ஐயோடினின் முக்கியத்துவம் தெரியவில்லை. அதனால் ஐயோடின் இல்லாத விலைக் குறைந்த சாப்பாட்டு உப்பை வாங்கி உபயோகிக்கிறார்கள்” என்று மருத்துவர் பவார் கூறினார். “இதுவரை ஐயோடின் பொட்டுக்கள் ஐயோடின் பற்றாக்குறை உள்ள 100 கிராமங்களில் வசிக்கும் 30000 பெண்களைச் சென்றடைந்துருக்கிறது” என்றும் தெரிவித்தார்.