இயற்கை விவசாயத்திற்கு பெரிதும் உதவும் நுண்ணுயிர்கள்

ஜெயஶ்ரீ
Thu Feb 04 2016 23:06:02 GMT+0300 (EAT)

பயிர்களைக் காப்பாற்ற பூச்சிக் கொல்லிகளை உருவாக்கும் பேயர், மான்சன்டோ போன்ற பெரிய நிறுவனங்கள், மண்ணில் வசிக்கும் நுண்ணுயிரிகளைப் பயிர்களுக்கு பயனளிக்கக் கூடியவையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம் உடலுள் நுழையும் நோய் கிருமிகளைத் தாக்கி நோய் வராமல் தடுக்கும் நுண்ணுயிரிகள், மண்ணில் வாழும் பயிர்களுக்கு சத்துகளை ஊட்டவும் பூச்சிகளை அழிக்கவும் களைகளை அகற்றவும் உதவுகிறது.

கலிஃபோர்னியாவின் மர்ரோன் பையோ இன்னோவேஷன்ஸ்ஸின் நிறுவனர், பேம் மர்ரோன் தன் வாழ்வின் பெரும் பங்கை நுண்ணுயிர் சார் பூச்சிக் கொல்லிகளை உருவாக்குவதில் செலவளித்துள்ளார். நுண்ணுயிரி திரட்டுத் தட்டுகளில்(petri dish) வழுவழுப்பான தெளிவில்லாத நுண்ணுயிர்களை உருவாக்கியுள்ளார். அவை இளஞ்சிவப்பு, நீலம், கருப்பு, ஊதா, மெஜன்டா போன்ற பல நிறங்களில் காட்சி அளிக்கின்றன.

இந்த நுண்ணுயிர்கள், பீட் புழுக்கள், சோளத்தின் வேர் புழுக்கள், பீச் அசுவிணிக்கள்(aphids), சிலந்திப் பூச்சிகள், கோஸில் வசிக்கும் கொக்கிப் புழுக்கள் மற்றும் பல பூச்சிகளை கொல்கிறதா என்று சோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது மட்டுமின்றி களைச் செடிகளை அழிக்கும் நுண்ணுயிர்களைக் கண்டுபிடித்திருப்பதாக தெரிவிக்கிறார், மர்ரோன். ஜப்பானின் ஒரு புத்த கோயிலின் தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிர்கள், பூச்சிகளைத் தாக்குவதில்லை. ஆனால் களைச் செடிகளைத் தாக்குகிறது. இது போன்ற கண்டுபிடிப்பு இயற்கை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று மர்ரோன் நம்புகிறார். ஆய்வுப் பதிவுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பிடம் சமர்பித்து, களைக்கொல்லியை(pesticide) விற்க அனுமதி கேட்க உள்ளார்.

நீண்ட காலமாக இயற்கை விவசாயத்தில் இது போன்ற உயிர் சார் பூச்சிக் கொல்லிகள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் வேதியல் பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள் இயற்கையான பூச்சிக்கொல்லிக்ளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி பயிர்களை ஊக்குவிக்கும் நுண்ணுயிர்களையும் தேடி வருகின்றனர்.

டாக்சன் பையோ சைன்சஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியும் ஆன மாத்யூ அஷ்பி, “நுண்ணுயிர்கள் எப்படி வேலை செய்கின்றன என்று தெரியவில்லை” என்கிறார். ஆனால் அவரது நிறுவனம் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மண் மாதிரிகளில்(samples) இருந்து பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களைக் கண்டுபிடித்துள்ளார். ஒவ்வொரு நுண்ணுயிரையும் அதன் டி.என்.ஏ வை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர்களை ஆராய்ந்தால் அவை என்ன செய்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, சில நுண்ணுயிர்கள் அமோகமாக விளையும் அனைத்து சோளக்காடுகளிலும் இருந்தது. நல்ல விளைச்சலுக்கு அந்தக் குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் காரணமாக இருக்கலாம். இவற்றை அனைத்து சோளக் காட்டிலும் சேர்த்தால் அவர்களின் விளைச்சலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

டூபான்ட் பையலாஜிகல்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் இயக்குனர், ஃபிராங்க் டிஜெனரோ, டாக்சன் நிறுவனத்தின் ஆய்வுகளைக் கண்டார். தற்போது டூபன்ட், டாக்சன் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்துள்ளது. டாக்சன் கண்டுபிடித்த நுண்ணுயிர்களைப் பரிசோத்தித்து வருகின்றனர். மான்சன்டோ, பேயர், க்ராப்சைன்ஸ், சின்ஜென்டா போன்ற பெரிய நிறுவனங்களும் இது போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இனிமேல் விவசாயிகளுக்கு உதவப் போகும் அடுத்த முக்கியமான கருவி மண்ணிலேயே கிடைக்கும்.