இரு விழி இரு நிறங்கள்- நோயா? இயற்கையா?

ஜெயஶ்ரீ
Thu Jan 14 2016 23:25:58 GMT+0300 (EAT)

பெரும்பாலானோரின் கண்கள் இரண்டும் ஒரே நிறத்தில் அமைந்திருக்கிறது. ஆனால் 1000 த்தில் 11 அமெரிக்கர்களுக்கு இரண்டு கண்களும் வெவ்வேறு நிறத்தில் இருக்கின்றன. அவை திடீரென்று ஏற்படும் மாற்றம் அல்ல. பல காரணங்களால் பல நாட்கள் தாண்டி ஏற்படும் மாற்றம். பிறந்து சில மாதங்களில் கருவிழிப்படலத்தின் (iris) நிறம் உருவாகும். நம் கண்களின் நிறம் எவ்வளவு அழுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது மெலமின் நிறமி (pigment). கருவிழிப்படலத்தில் குறைந்த மெலனின் நிறமி இருந்தால் கண்களின் நிறம் குறைவாகவே இருக்கும். நிறமி அதிமாக இருந்தால் நிறமும் அதிமாக இருக்கும்.

சில நேரங்களில் மெலனின் ஒரேவிதமாக பரவி இருக்காது. இதற்கு ஹெடரோகுரோமியா (heterochromia) என்று பெயர். இது பல வழிகளில் வெளிப்படும். இரண்டு கண்களிலும் வெவ்வேறு நிறம் இருந்தால் அதை ‘முழுமையான ஹெடரோகுரோமியா’ (complete heterochromia) என்று அழைக்கப்படுகிறது. ‘மத்தியில் ஏற்படும் ஹெடரோகுரோமியா’ (Central heterochromia) என்றால் கருவிழிப்படலம் ஒரு நிறமாகவும் கருமணி (pupil) ஒரு நிறமாகவும் இருக்கும். ‘பகுதி ஹெடரோகுரோமியா’ (sectoral heterochromia) என்றால் கருவிழிப்படலத்தின் நிறமும் சுற்றியுள்ள நிறமும் வேறாக இருக்கும்.

விழியில் ஏற்படும் நிறமி படிவுகள் (pigmentation) உடல் உபாதைக்கான அறிகுறி அல்ல. அவை சாதாரண ஹெடரோகுரோமியா தான். பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு மரபுவழி வருவது. ஆனால் சில மரபணு சார்ந்த கோளாறுகளாலும் இவை உருவாகின்றன.

உதாரணத்திற்கு, வார்டென்பர்க் நோய்த்தொகை (Waardenburg syndrome) யில் குழந்தைகளுக்கு காது கேளாமை, ஹெடரோகுரோமியா மற்றும் இளநரை ஆகியவற்றிற்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. நரம்பு தசைநார்க்கட்டி (neurofibromatosis) எனும் மரபுவழி நோயிலும் ஹெடரோகுரோமியா ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது. இந்த நோய் நரம்பு மண்டலத்தை தாக்கி நரம்பு திசுக்களின் மீது கட்டிகளை உருவாக்குகிறது. விழிகளுக்குள் கட்டி உருவாவதால் ஹெடரோகுரோமியா உருவாகிறது.

விழிகளில் ஏற்படும் காயங்களாலும் கருவிழிப்படலம் நிறம் மாறலாம். ஒரு விழியில் மட்டும் வீக்கம் இருந்தால் அந்த விழியில் மட்டும் ஹெடரோகுரோமியா உருவாக வாய்ப்புள்ளது. தூசு, நோய்க்கிருமி போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படலாம்.விழியில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பை பாதிக்கும் ‘கண் அழுத்த நோயா’லும் (glaucoma) ஹெடரோகுரோமியா ஏற்படலாம். திடீரென உருவாகும் ஹெடரோகுரோமியா புதிய உடல் உபாதைக்கான அறிகுறியாக இருக்கலாம். ஆதலால் அதை உடனடியாக கண் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது.