காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் டிராகன் பல்லிகள்

ஜெயஶ்ரீ
Thu Jan 14 2016 00:25:23 GMT+0300 (EAT)

பலவருடங்களாக ஆஸ்டிரேலியாவைச் சேர்ந்த டிராகன் பல்லிகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், வெப்ப மிகுதியால் அவற்றின் பாலினம் மாறுவதைக் கண்டுபிடித்தனர். இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளரான முனைவர். கிலேர் ஹால்லெலி, “பிறப்பால் ஆணாக இருக்கும் டிராகன் பல்லிகளை அதிக வெப்பத்திற்கு அறிமுகப்படுத்தும் போது பெண்ணாக மாறுயது என்று ஏற்கனவே நிரூபித்திருக்கிறோம். இப்போது அவை இனப்பெருக்கவல்லதாகவும் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறோம்” என்றார். இவர் கன்பரா பல்கலைக்கழகத்தின் சூழலியல் துறையில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். 131 பல்லிகளின் இனப்பெருக்கத்தை ஆராய்ந்த போது ஆண் என்று நம்பப்பட்ட சில இதமான வெப்பம் கொண்ட பல்லிகள் ஆண் மரபுத்திரியைக்(chromosome) கொண்ட பெண் பல்லிகள் என்று தெரிய வந்தது. 

“இனம் மாறிய பெண் பல்லிகளை ஆண் பல்லிகளுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்தால் புதிய வகையான இனம் உருவாகும். மரபுத்திரியைச் சாராமல் வெப்பத்தைச் சார்ந்த இனமாக அது இருக்கும்” என்று அவர் விளக்கினார். மேலும், “பெண்ணாக மாறிய ஆண் பல்லிகள் சாதாரண பெண் பல்லிகளை விட அதிகமான முட்டைகளை இட்டன” என்றும் முனைவர். ஹால்லெலி தெரிவித்தார்.

அதே கன்பெரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய பேராசிரியரும் இந்த ஆய்வின் மூத்த எழுத்தாளருமான ஆர்தர் ஜார்ஜஸ் கூறுகையில், “இந்த ஆராய்ச்சி பாலினத்தைக் கண்டுபிடிக்கும் முறைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இனவிருத்தி செய்யும் உயிரினங்கள் படிப்படியாக எதிர்கொள்ளும் மாற்றங்களை பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் காலநிலை மாற்றத்தால் பல்லுயிர் பெருக்கம் எந்த விதத்தில் பாதிக்கப்படுகிறது என்று தெரியவரும்” என்றார்.

குறிப்பு: 
Clare E. Holleley, Denis O'Meally, Stephen D. Sarre, Jennifer A. Marshall Graves, Tariq Ezaz, Kazumi Matsubara, Bhumika Azad, Xiuwen Zhang, Arthur Georges. Sex reversal triggers the rapid transition from genetic to temperature-dependent sex. Nature, 2015; 523 (7558): 79 DOI: 10.1038/nature14574