வீட்டின் ஓடுகளை குளிச்சியாக்கி மின்சாரத்தைச் சேமிக்கலாம்

ஜெயஸ்ரீ
Sat Jan 09 2016 13:27:25 GMT+0300 (EAT)

வெயில் காலங்களில் வீட்டின் கூரை வாயிலாக வெப்பம் இறங்குகிறது. வெப்பக்காப்பு இருந்தாலும் பெரிய அளவில் வெப்பத்தைக் குறைக்க முடிவதில்லை. இதன் விளைவாக காற்றுப் பதனி(air conditioner) அதிகமாக உழைக்கிறது. மின்சாரச் செலவு அதிகமாகிறது.

இதற்கு பதிலாக புதிய வகைப் பூச்சு(paint) பயன்படுத்தினால் அதிகப் படியான வெப்பத்தைத் தடுக்கலாம் என்று ஜெஸ்ஸிகா குஷர் எனும் 18 வயது பெண் கண்டுபிடித்திருக்கிறார். இவர் தென் கரோலினாவின் ஸ்பார்டன்பர்க் பள்ளியில் படிக்கிறார்.

வெயில் காலங்களில் வீட்டின் ஓடுகள் அதிகப்படியான வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. ஓடுகள் சூரியக் கதிர்களை திருப்பி அனுப்பி விட்டால் வெப்பம் குறையும். வீடும் குளிர்சியாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் ஆய்வில் அமெரிக்காவில் காற்றுப் பதனி 5 சதவிகித மின்சாரத்தை உபயோகிக்கிறது என்று தெரிய வந்தது. குளிர்விப்பதற்கென்றே ஆண்டுதோறும் 11 பில்லியன் டாலர்களை அமெரிக்கர்கள் செலவிடுகின்றனர்.

ஜெஸ்ஸிகா, ஒளியைத் திருப்பியனுப்பக்கூடிய ஓடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தினார். பல பொருட்களால் ஆன தூளை தெளிவான வண்ணப்பூச்சு போல் கலந்து பூசினார். ஒரு பூச்சு கிராஃபைட்(graphite) ஆல் ஆனது. மற்றொன்று ஜிப்சம்(gypsum) ஆல் ஆனது. மைக்காவையும்(mica) சேர்த்து முயற்சித்தார். ஒவ்வொரு தூளும் ஒவ்வொரு நிறத்தில் கிடைக்கின்றன. இவற்றுடன் 40 சதவிதம் எதிரொளி(reflective) தூளையும் சேர்த்தார். சேர்மானப் பொருள்(additive) இன்றியும் சில பூச்சுகளைத் தயார் செய்தார்.

நான்கு வண்ணங்களில் ஓடுகளை எடுத்து அவர் தயாரித்து வைத்த பூச்சுகளை பூசி 24 மணி நேரம் காய வைத்தார். பின்னர் அஞ்சல் தலை அளவிலான மாதிரிகளை 150 வாட் சூரிய விளக்கிற்கு அடியில் வைத்தார். இந்த விளக்குகள் சூரியனைப் போன்று பல அலைநீளத்தில் கதிர் வீசும் ஆற்றல் கொண்டவை. அனைத்து ஓடுகளும் 15 நிமிடங்கள் ஒளி வீச்சில் வைக்கப்பட்டன. அதே சமயம் இந்த ஓடுகளுடன் சாதாரண ஓடுகளும் 73.5 டிகிரீ செல்சியஸ் வெப்பநிலையை அடையும் வரை விளக்கின் ஒளி வீச்சில் கிடத்தப்பட்டன. எது முதலில் முடிந்ததோ அதைச் சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு அவற்றின் வெப்பத்தை அளந்தார். அதாவது, 15 நிமிடங்களுக்குமுன்னரே சாதாரண ஓடுகள் 73.5 டிகிரியை தொட்டுவிட்டால் அனைத்து ஒடுகளின் வெப்பத்தையும் அளந்தார். ஒடுகளில் இருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர் வீச்சை அளக்கும் கருவியைப் பயன்படுத்தி அவற்றின் வெப்பத்தை அளந்தார்.

தூள் சேர்க்காமல் போசப்பட்ட ஓடுகளும், சாதாரண ஓடுகளும் அதிக வெப்பமாக இருந்தன. தூள் சேர்த்து பூசப்பட்ட ஓடுகள் வெப்பம் குறைவாக இருந்தன. ஜெஸ்ஸிகா கண்டுபிடித்த தூள் கண்டிப்பாக வேலை செய்கிறது என்பதற்கு இதுவே சான்று. மைக்கா பூசப்பட்ட ஓடுகள் மிகுந்த குளிர்ச்சியாக இருந்தன. மைக்கா ஓடுகள் 58.5 டிகிரீ செல்சியஸ் வெப்ப அலகைக் காட்டின. ஜிப்சம் மற்றும் கிராஃபைட் ஓடுகள் 57 முதல் 63 டிகிரீ செல்சியல் வெப்ப அலகைக் காட்டின.

தன் ஆராய்ச்சி குறித்த விவரங்களை 2015 இன்டெல் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் ஜெஸ்ஸிகா சமர்பித்தார். 70 நாடுகளில் இருந்து 1700 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவை சொசைட்டி ஃபார் சைன்ஸ் அன்டு பப்லிக் நிறுவனம் உருவாக்கியது; இன்டெல் நிறுவனம் வழங்கியது.

இந்தப் பூச்சுகள் ஏசி செலவுகளைக் குறைப்பதோடு அல்லாமல் பட்டணத்தின் காற்றையும் குளிர்விக்கும். நகரங்களில் கட்டிடங்கள், சாலைகள் ஆகியவை பகல் நேரங்களில் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு இரவில் வெப்பத்தை வெளிவிடுகின்றன. பேருந்துகள், குளிர் சாதனப் பெட்டிகள்(refridgrator), காற்று பதனி போன்றவையும் வெப்பத்தை வெளியிடுவதால் நகரம் மேலும் 0.5 டிகிரீ சூடாகிறது. இதனால் நகரங்களின் அருகில் இருக்கும் கிராமப்புறங்களும் வெப்பமடைகின்றன. வெப்ப மிகுதியால் காற்றில் வேதியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஓசோன் உருவாகிறது. கண்கள், நுரையீரல் ஆகியவற்றில் எரிச்சல் உண்டாகிறது. அமெரிக்காவில் நிறைய இடங்களில் ஓடுகள் உபயோகிக்கப்படுவதால் மின்சாரச் செலவுகளைக் குறைக்கவும் ஓசோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று ஜெஸ்ஸிகா கூறுகிறார்.