காகிதத்தால் ஆன ஓரிகமி மின்கலன் மூன்று ரூபாய்

ஜெயஸ்ரீ
Sat Jan 09 2016 13:26:33 GMT+0300 (EAT)

‘ஓரிகமி’ எனப்படுவது காகிதத்தை மடித்து பறவை, குரங்கு, தவளை போன்ற பல உருவங்களைச் செய்யும் பழங்கால ஜப்பானியக் கலை. தற்போது பிங்கம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சோகியுன் “ஷான்” சோய் எனும் பொறியியலாளர் ஓரிகமி மின்கலனை (battery) உருவாக்கியிருக்கிறார். நுண்ணுயிரிக்களால் இந்த மின்கலன் சக்தியூட்டப்படுகிறது.

“அசுத்தமான நீரில் கரிமப்பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இவை எந்த வகையாயினும் நுண்ணுயிரிக்களின் தோற்றுவாயாக விளங்குகின்றன. அவற்றின் வளர்சிதைமாற்றத்திற்கு (metabolism) வழி வகுக்கின்றன” என்று சோய் கூறுகிறார். ஒரு துளி அசுத்தமான நீரில் இருக்கும் நுண்ணுயிரிக்களின் சுவாசத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் காகிதம் சார்ந்த உயிரிய உணர்வியை(biosensor) இயக்கப் போதுமானதாக அமைகிறது.

மின்சார வசதியில்லாத தொலைவான இடங்களில் பணிசெய்பவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவிகரமாக இருக்கும். காகிதம் எளிதாகக் கிடைக்கக்கூடியது விலையும் குறைவு என்பதால் நோய்த் தடுப்புக்காகவும் கட்டுப்பாட்டுக்காகவும் போராடும் விஞ்ஞானிகள் நோய்க்கண்டறியும் கருவிகளைக் காகிதத்திலேயே உருவாக்குகின்றனர்.

“காகிதங்கள் மக்கக்கூடியவை. திரவத்தை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவை என்பதால் ஊசி, இறைப்பி(pump) போன்றவை தேவைப்படாது” என்று சோய் விளக்கினார். சுயமாக மின்சாரம் தயாரிக்கும் காகித மின்கல அமைப்பை உருவாக்க நேஷனல் சைன்ஸ் ஃபௌன்டேஷன் மூன்று வருடத்திற்கு 300000 அமெரிக்க டாலரை மானியமாக வழங்கியிருக்கிறது.

மடித்தால் தீப்பெட்டி அளவே இருக்கும் சோய் இன் மின்கலனின் எதிர்மின்முனை(cathode), நிக்கல்(nickel) தெளிக்கப்பட்ட சாதாரண காகிதத் துண்டு. நேர்மின்முனையோ(anode) கரிம சாயத்தால் அச்சிடப்பட்டவை. இது மெழுகைக் கொண்டு நீர்நாட்டமுள்ள மண்டலத்தை உருவாக்குகிறது. இந்தக் காகித மின்கலனின் மொத்த விலை 5 சென்டுகளே ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று ரூபாய்.

சோய் தன் இளநிலைப் பட்டப்படிப்பையும் முதுநிலைப் படிப்பையும் தென் கொரியாவில் முடித்தார். அரிஸோனா மாநில பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். தற்போது பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் மின்னாற்றல் மற்றும் கணினி பொறியியல் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் இரண்டு அமெரிக்க காப்புரிமைக்கு சொந்தக்காரர். ஆரம்ப கட்டத்தில் காகித மின்கலன் குறித்த ஆய்வில் பிங்காம்டன் இன் முன்னாள் இளநிலை பட்டதாரியான ஹான்கென் லீ யுடன் சேர்ந்து பணியாற்றினார்.

மேற்கோள்:

Hankeun Lee, Seokheun Choi. An origami paper-based bacteria-powered battery. Nano Energy, 2015; 15: 549 DOI:10.1016/j.nanoen.2015.05.019