இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் வைகிங் கல்லறை: புதிய ஒளிப்பட அளவியல் முறை ஏற்படுத்திய மாற்றம்

ஜெயஸ்ரீ
Sat Jan 09 2016 13:25:32 GMT+0300 (EAT)

ஒளிப்பட அளவியல்(photogrammetry) என்பது இரு பரிமாணத்தில் எடுக்கப்பட்ட தொல்பொருளின் படங்களைக் கொண்டு முப்பரிமாண பிம்பத்தை உருவாக்கும் முறை. இதற்கு விசேஷமான கண்ணாடியோ நவீன கருவிகளோ தேவை இல்லை. தோண்டிய இடத்தின் துல்லியமான அளவுகள் மட்டுமே பயன்படுத்தி ஒளிப்பட அளவியல் ஆராய்ச்சி இடத்தின் முழுமையான விரிவான வரைபடத்தை உருவாக்கி விட முடியும்.


இது புதுமையான செயல் முறை என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ரேமன்ட் சௌவாஜ் மற்றும் ஃப்ரெட்ரிக் ஸ்கோக்லன்ட் கருதுகிறார்கள். இது பழைய முறைகளை விட குறைவான நேரம் எடுத்துக் கொள்ளும் துல்லியமான முறையாகும்.

சென்ற வருடம் நார்வேயில் கண்டுபிடிக்கப்பட்ட வைக்கிங் கல்லறையில் ஒளிப்பட அளவியல் உபயோகிக்கப்பட்டுள்ளது. இவை உருவாக்கும் முப்பரிமாண படிவங்களை பிடிஎஃப்(PDF) தொகுப்புகளாக மாற்றி சக ஊழியர்களுக்கு அனுப்ப வசதியாக உள்ளது.

இந்தச் செயல் நிரலை ரஷ்ய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் வளர்ச்சியும் உபயோகமும் சமீப காலங்களில் அதிகமாகி உள்ளது. “இந்தச் செயல்நிரல் சுலபமாகக் கிடைக்கக் கூடியது. விலையும் குறைவு” என்று சாவேஜ் கூறுகிறார். “இந்தச் செயல்முறையில் வேலை அதிகமாக இருந்தாலும் நேரம் குறைவு. ஒரே நாளில் மூன்று மில்லியன் அளவைப் புள்ளிகள் கிடைக்கின்றன. இதற்கு முன்னர் 3000 புள்ளிகள் தான் கிடைக்கும்” என்கிறார்.

இதே போன்ற விளைவுகள் ஒளிப்பட அளவியலின் ஆரம்பக் கால செயல் நிரலிலும் கிடைத்திருக்கிறது. லேசர் கருவியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முறையில் செலவு அதிகம்; நேரமும் அதிகம். புதிய செயல் நிரலின் விலை சில நூறு யூரோக்கள் தான். வெவ்வேறு கோணங்களில் மூன்று அல்லது நான்கு புகைப்படங்கள் எடுத்தாலே ஒரு எளிமையான முப்பரிமாண மாதிரியை உருவாக்க போதுமானது. இருந்தாலும் அதிக படங்கள் எடுத்தால் அதிக தரம் கிடைக்கும். சாதாரண புகைப்படக் கருவியையே உபயோகிக்கலாம்.

பழைய கண்டுபிடிப்புகளின் படங்களைப் பயன்படுத்தியும் முப்பரிமாண மாதிரியை உருவாக்கலாம். இவை காலத்தால் ஏற்படும் மாற்றத்தை அறிந்து கொள்ள உதவும்.

கடல் சார்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஸ்காக்லன்ட், நார்வேயின் கப்பல் ஒன்றை ஒளிப்பட அளவியல் கொண்டு அலசினார். ‘டி க்ராவெ ஆட்லர்’ அல்லது ‘தி கிரே ஈகில்’ என்ற கப்பல் 1696 இல் மூழ்கியது. 1982 இல் கண்டுபிடிக்கப்பட்ட இக்கப்பலின் சிதைந்த பாகங்களை இவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். நீருக்கடியில் எடுக்கப்பட்ட படங்கள் துல்லியமாக இருந்தால் கப்பல் சிதைந்து போவதை தெளிவாக கவனிக்கலாம். பாதுகாப்பு பணிகளையும் முன் கூட்டியே செய்து கொள்ளலாம்.

அடுத்த கட்டமாக ஒரு 3டி கண்ணாடியைப் அணிந்து கொண்டாலே தோண்டப்பட்ட ஆராய்ச்சியகத்திற்குள் நுழைந்த மாதிரியான உணர்வை ஏற்படுத்தக் கூடிய கண்ணாடி. ஆனால் அதற்கு இன்னும் சில காலம் ஆகும். இந்த செயல் முறைக்கு இருக்கும் ஒரே சவால், வருங்காலத்திற்கும் உதவும் வகையில் இதன் பதிவுகளைச் சேமித்து வைப்பது. காகிதப் பதிவுகள், புகைப்படங்களை நூறு ஆண்டுகளுக்கு பிறகும் உபயோகிக்கலாம் ஆனால் பிடிஎஃப் தொகுப்புகள் நூறு ஆண்டுகளுக்கு பிறகும் உபயோகத்தில் இருக்குமா என்பது சந்தேகமே.