காணொலி விளையாட்டுகள் மூலம் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை

ஜெயஸ்ரீ
Sat Jan 09 2016 13:24:36 GMT+0300 (EAT)

அன்கி ட்சௌ மற்றும் சாம் சோ ஆகிய இருவரும் சேர்ந்து ஜிபியூ தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட அணு ஒப்புருவாக்க முறையில் ஆர்.என்.ஏ மூலக்குறு, நுண்ணுயிரி சார்ந்த ரைபோசோம் ஆகியவற்றின் செயல்பாட்டை புரிந்து கொள்ள பயன் படுத்தியுள்ளனர். 


சாம் சோ மற்றும் அவரது மாணவர்கள் வரைகலை செயலாக்க அலகுகள் / வரைகலை அட்டை (Graphics Processing Units- GPU) உதவியுடன் மூலக்கூறின் செயல்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றனர்.

“விளையாட்டுக் காட்சிகளை நம் கணினித் திரையில் உருவாக்கும் அதே தொழில்நுட்பத்தை மூலக்கூறு இயக்கத்தை ஒப்புருவாக்க பயன்படுத்தியிருக்கிறோம்” என்று சோ தெரிவிக்கிறார். அன்கி ட்சௌ, கணித வணிகம் மற்றும் கணிப்பு அறிவியல் பயின்றவர். இவர் ஜிபியு மற்றும் ஜிபியு அல்லாத உருவாக்கங்களில் கிடைத்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்.

“ஜிபியு கருவிகளின் சக்தி வாய்ந்த கணிப்பு திறனைப் பார்த்து வியந்தேன். முனைவர். சோ வின் வகுப்புகளில் சேர்ந்தேன். சில நாட்கள் கழித்து ஜிபியூ செயல்நிரல்(program) சார்ந்த ஆராய்ச்சியில் பணிபுரிய அவரை அணுகினேன்” என்று ட்சௌ கூறினார்.

சமீபத்தில் சோ வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், டெலொமெரேஸ்(telomerase) எனும் நொதியின்(enzyme) ஆர்.என்.ஏ (RNA) மூலக்கூறின் செயல்பாட்டை போலியாக உருவாக்கியிருக்கிறார். இந்த நொதி அணுப் பிரிவின் போது டி.என்.ஏ இழைகள் நீள்வதற்கு காரணமாக விளங்குகிறது. புற்றுநோய் கட்டிகள் வளர்வதற்கு இதுவே காரணம். டெலொமெரேஸ்ஸின் செயல்படும் முறையைப் புரிந்து கொண்டால் புற்றுநோய்க்கான சிகிச்சையை வகுக்கலாம். சோவின் ஆய்வுக் கட்டுரை ‘ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் கெமிக்கல் சொசைடி’ யில் வெளி வந்திருக்கிறது.

அடுத்த கட்டமாக ஜிபியு சார்ந்த மூலக்கூறு ஒப்புருவாக்கம் மூலம் பாக்டீரியாவின் ரைபோசோமை ஆராய்ந்துகொண்டிருக்கிறார். ஜிபியு வை முதன்முதலில் உருவாக்கிய ‘என்விடியா’ (Nvidia) எனும் நிறுவனம் இந்த ஆராய்ச்சிக்கு தேவைப்படும் வரைகலை அட்டையை நன்கொடையாக அளித்துள்ளது.

ஜிபியு ஒப்புருவாக்கம் விரைவாக செயல்பட உதவுகிறது. சாதாரணக் கணினியில் 40 ஆண்டுகள் எடுக்கும் ரைபோசோம் உருவாக்கம், ஜிபியு ஒப்புருவாக்கத்தால் சில மாதங்களிலேயே முடிந்து விடும். ரைபோசோமின் செயல்பாடுகளை ஆராய்ந்து பாச்டீரியாவைக் கொல்ல நுண்ணுயிர்க் கொல்லியை உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். இறுதியாக, “நிறைய காணொலி விளையாட்டு வீரர்கள் ஜிபியுக்களை வாங்கிக் கொண்டிருப்பதால் தான் ஜிபியு வின் விலை குறைந்தது. அதனால் தான் இந்த தொழில்நுட்பத்தை அறிவியலுக்கு பயன்படுத்த முடிந்தது” என்று சோ கூறினார்.