அரோரா பொரியலிஸ்

ஜெயஶ்ரீ
Sat Sep 12 2015 21:14:08 GMT+0300 (EAT)

சூரிய உதயத்தின் போது சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் மின்னூட்டத்துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதுகையில் வண்ணமயமான ஒளி தோன்றுகிறது. அதைப் பார்க்க ஒளி நடனமாடுவது போன்றிருக்கும். இந்த ஒளி புவியின் தென் மற்றும் வட முனையில் காணமுடியும். பெரும்பாலும் மங்கலான மஞ்சள் கலந்த பச்சை நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும். சில நேரங்களில் ஊதா, நீலம், சிவப்பு, ஆகிய வண்ணங்களிலும் காட்சியளிக்கும். இதை அரோரா(புவிமுனைச் சுடரொளி) என்று அழைப்பர்.

பெரும்பாலும் தெரியும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திற்கு பூமிக்கு 60 மைல்கள் மேல் இருக்கும் உயிர்வளி(ஆக்சிஜன்) தான் காரணம். அரிதாய் தெரியும் சிவப்பு அரோராக்களுக்கு 200 மைல்கள் உயரத்தில் இருக்கும் உயிர்வளி காரணம். நீலமான மற்றும் ஊதா கலந்த சிவப்பு நிறத்திற்கு நைட்ரஜன் வாயு காரணம். சூரியனின் மேற்பரப்பின் வெப்ப அளவு பல மில்லியன் டிகிரீ இருக்கும். இங்கு வாயுவின் உட்கூறுகள் அடிக்கடி மோதி வெடிக்கும். அப்போது கட்டுறா மின்னணுக்களும்(ஃபிரீ எலக்ட்ரான்ஸ்) முன்மி(புரோட்டான்)களும் அதன் காந்தப் புலத்தில் இருக்கும் துளை வழியாக தப்பித்து சூரியப் புயலால் பூமியை நோக்கித் தள்ளப்படுகிறது. இம்மின்னூட்டத்துகள்களைப் புவியின் காந்தப்புலம் திருப்பியனுப்பி விடும். ஆனால் புவியின் இரு முனைகளிலும் காந்தப்புலத்தின் தாக்கம் குறைவாக இருப்பதால் சில துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து வாயுத் துகள்களுடன் மோதுகிறது. அவ்வாறு மோதும் போது ஒளியை வெளியிடுகிறது. இதைத் தான் நடமாடும் ஒளி அல்லது ‘அரோரா’ என்று கூறுகின்றனர். இவை பூமியின் மேலே 80 கிலோமீட்டர்களில் இருந்து 640 கிலோமீட்டர் உயரம் வரை காணப்படும்.

அரோரா என்றால் லத்தீனில் சூரிய உதயம் என்று பொருள். ரோம் நாட்டின் விடியலுக்கான கடவுளின் பெயரும் அது தான். பூமியின் வட மற்றும் தென் துருவங்களில் அரோராவைக் காணலாம். வடக்கில் அண்டார்டிகா, ஐஸ்லாண்ட், நார்வே போன்ற நாடுகளிலும் தெற்கில் ஆஸ்டிரேலியா, நியூ ஸீலாந்து, தென் அமெரிக்கா, ஆர்டிகா ஆகிய நாடுகளில் பார்க்கலாம். வடக்கில் தெரியும் அரோராவை ‘அரோரா பொரியலிஸ்’ என்றும் தெற்கில் தோன்றுவதை ‘அரோரா ஆஸ்டிரேலிஸ்’ என்றும் கூறுவர். ‘பொரியலிஸ்’ என்றால் கிரேக்க மொழியில் வடக்கில் வீசும் காற்று என்று பொருள். ‘அரோரா பொரியலிஸ்’ என்று பெயரிட்டது கலீலியோ.

வட ஒளி (நார்தன் லைட்ஸ்) என்று பொதுவாக அழைக்கப்படும் அரோரா, நீள் வட்ட வடிவம் கொண்டது. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிப் படி ‘அரோரா பொரியலிஸ்’ஸும் ‘அரோரா ஆஸ்டிரேலிஸ்’ஸும் ஒரே நேரத்தில் ஒரே நிறத்தில் தோன்றுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். வட அமெரிக்காவின் ஒரு பகுதியான கனடாவில் இதைப் பார்க்கலாம். வடமேற்கு கனடாவான யூகான், நுனாவட் மற்றும் பிற வடமேற்கு பகுதிகள் மற்றும் அலாஸ்காவில் இதைக் காணலாம். கிரீன்லாண்ட்டின் தென் பகுதி, ஐஸ்லாண்ட், நார்வேயின் வடகரை மற்றும் சைபீரியா ஆகிய இடங்களிலும் பார்க்கலாம். தென் துருவத்தில் அண்டார்டிகாவையும் இந்தியப் பெருங்கடலையும் சுற்றி இவ்வொளி ஒருமுனைப்பட்டிருப்பதால் காண்பது அரிது.

முற் காலத்தில் அரோரா பற்றி பல்வேறு கலாச்சாரங்களில், பல விதமான கருத்துகள் இருந்து வந்தன. இடைக் காலத்தில் அரோராவை போர் அல்லது பஞ்சத்தின் முன்னறிவிப்பாகக் கருதினர். நியூ ஸீலாந்தின் மவோரி கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் அரோராவை தீப்பந்ததின் எதிரொளியாகக் கருதினர். விஸ்கோசின்னின் மெனோமினீ குடியினர் இந்தச் சுடரொளியை வேடர்கள் மற்றும் மீனவர்களின் ஆன்மா நடமாட்டம் என்று நம்பினர். அலாஸ்காவின் இனூட் இன மக்களோ அதை தாங்கள் வேட்டையாடிய மீன்கள் மற்றும் மிருகங்களின் ஆன்மா என்று நம்பினர்.

1950 இல் ஆராய்ச்சிக் கூடங்கள் அமைத்து ஊதற்பை(பலூன்), ஏவுகலம், கதிர்வீதிணி(ரேடார்), செயற்கைக்கோள்(சாட்டிலைட்) மூலம் சோதனை செய்தனர். இன்றும் ஏவுகலம் கொண்டு அலாஸ்கா பல்கலைக்கழகத்தின் துணையுடன் பொகர் ஃபிளாட்ஸ் எனும் இடத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் இந்தச் சுடரோளி 11 வருட சுழற்சி முறையைக் கொண்டது என்று தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு பதினோராவது ஆண்டும் அரோராவின் வீரியம் உச்ச நிலையில் இருக்கும். ஆதலால் தெளிவாக காண முடியும். பெரும்பாலும் நீண்ட இரவைக் கொண்ட குளிர் காலங்களிலும் மேகமில்லா வானம் இருக்கும் போதும் காணுவதற்கு எளிதாக இருக்கும். பெரும்பாலும் நள்ளிரவு தான் இதைப் பார்க்க உகந்த நேரம்.