ஒளிரும் காளான்கள்

ஜெயஶ்ரீ
Sat Sep 12 2015 21:10:32 GMT+0300 (EAT)

பூஞ்சைகள்(ஃபங்கை) இரவில் பூச்சிகளைக் கவர ஒளிர்கிறது என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர். செடி வகையில் பட்டியலிடப் பட்டிருந்த பூஞ்சை இப்போது விலங்காக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. நிலத்தின் மேலே தெரியும் பூஞ்சைகளின் சிதலகக்கோப்பை(ஸ்போரகக்கோப்பை) வித்துகளை காற்றில் பரப்புவதற்காகவே வளர்கிறது. மற்றபடி பூஞ்சைகளின் உடல்பகுதி நிலத்தின் கீழே மரக்கட்டைகளிலும் அழுகிய இலைகளிலும் வளரும்.

பூஞ்சைகள் மரத்தின் மேல் பகுதியில் இருந்தால் காற்றில் சுலபமாகப் பறந்து விடும். ஆனால் கீழ் பகுதியில் இருந்தாலோ அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்தாலோ காற்றால் இழுத்துச் செல்லப்படுவது சிரமம். அதனால் அவை ஒரு வகையான நறுமணத்தை வெளியிடுகிறது. ‘அசோமைசிட்’ எனும் பூஞ்சை வகை பன்றிகள், அணில்கள் மற்றும் பூஞ்சை தின்னும் மற்ற விலங்குகளைக் கவர மணத்தை பரப்புகின்றன. அதைத் தின்னும் அவ்விலங்குகளின் கழிவில் இப்பூஞ்சைகளின் வித்துகள் வெளியாகிப் பரவுகின்றன.

ஃபல்லாசீ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகையான காளான் சகதியைப் போன்ற மணத்தைக் கொடுக்கிறது. ஈக்களும் மற்ற பூச்சி வகைகளும் இதற்கு ஈர்க்கப்படுகின்றன. சில காளான்கள் மங்கலான பச்சை உயிரி ஒளிர்வை வெளிப்படுத்தி சில பூச்சிகளை ஈர்க்கின்றன.

புதிதாக பிரேசில் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் காளான்களின் இந்த உயிரி ஒளிர்வு பூச்சிகளைக் கவர்வதற்கு மட்டுமல்லாமல் வித்துகளைப் பரப்புவதற்கும் உதவுகின்றதா என்று சோதனை மேற்கொண்டனர். ‘நியொனொதோபனஸ் கார்டெனெரி’ என்ற வகை தான் காளான்களிலேயே அதிகமாக ஒளிரக்கூடியது. பெரும்பாலும் இவை பிரேசில்லில் உள்ள தென்னை, பனை மரங்களின் அடித்தளத்தில் காணப்படுகிறது. முன்னர் பூஞ்சைகளில் நாள் முழுக்க நடக்கும் வளர்சிதை மாற்றத்தால்(மெட்டபாலிசம்) தான் ஒளிர்கிறது என்று நம்பப்பட்டது. ஆனால் அவை இரவில் மட்டும் தான் ஒளிர்கின்றன. பகலில் அதன் ஒளி மங்கலாகத் தான் இருக்கும். இதற்கு காரணம் வித்துகள் முளை விடுவதற்கு இரவின் ஈரப்பதமான காலநிலைத் தேவைப்படுகிறது. அந்த பூஞ்சைகளை புகைப்படக் கருவி மூலம் கண்காணிக்கையில் வண்டுகள் அதனால் கவரப்படுவது தெரிந்தது. ஆனால் அதற்கு காரணம் ஒளிர்வா? நறுமணமா? என்று உறுதியாகத் தெரியவில்லை. இதைக் கண்டுபிடிக்க நெகிழி வகை(அக்ரிலிக்) பிசினை(ரெசின்) கொண்டு போலி புஞ்சையைச் செய்து அதனுள் ஒளிஉமிழ் இருமுனையம்(எல்ஈடி) கொண்ட விளக்கை காளான்கள் ஒளிரும் அதே அலைநீளத்தில் ஒளிரச் செய்தனர். இதைப் பூச்சிகளும் வண்டுகளும் மொய்த்தன. இதன் மூலம் காளான்கள் ஒளிர்வது வித்துகளைப் பரப்புவதற்கு தான் என்று நிரூபனமானது.