இன்னும் கண்டுபிடிக்கப் படாத பர்முடா முக்கோணம் மர்மம்

ஜெயஶ்ரீ
Sat Sep 12 2015 21:08:46 GMT+0300 (EAT)

அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் போர்டோ ரிகோ, பர்முடா, மையமி ஆகிய மூன்று ஊர்களுக்கும் இடையில் உள்ள முக்கோணப் பரப்பிற்கு ‘பர்முடா முக்கோணம்’ என்று பெயர். இதற்கு ‘சாத்தானின் முக்கோணம்’(டெவில்’ஸ் டிரையாங்கில்) என்று இன்னொரு பெயரும் உண்டு. இப்பெயருக்கு காரணம் அந்த இடத்தில் பயணிக்கும் படகுகள், விமானங்கள் எதுவாயினும் மர்மமான முறையில் காணாமல் போவது தான். அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த முக்கோணத்தின் பரப்பளவு 5,00,000 சதுர மைல்கள்.

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிரிஸ்டபர் கொலம்பஸ் தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்ட போது இன்று ‘பர்முடா முக்கோணம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் பெருந்தீச்சுடர் ஒன்று கடலுக்குள் விழுந்தது என்றும் சில நாட்களுக்கு பின் அந்த இடத்தில் விசித்திரமான ஒளி தெரிந்தது என்றும் தன் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது திசைகாட்டி அந்த இடத்தில் செயல் இழந்தது என்றும் பதிவு செய்திருக்கிறார். இதற்கு காரணம், ‘பர்முடா முக்கோணம்’ பகுதியில் காந்தத்தின் வட துருவமும் புவியியல் ரீதியான வட துருவமும் ஒன்றாக இருக்கும். மற்ற இடங்களில் இவ்விரண்டிற்கும் 20 டிகிரி வேறுபாடு இருக்கும்.

ஜோஷுவா லோகம் என்பவர் கடல் வழிப் பயணமாக உலகம் முழுவதும் சுற்றி வந்தார். அவர் 1909 இல் தென் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கையில் காணாமல் போனார். அவர் எங்கு போனார் என்ன ஆனார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பிற்காலத்தில் பர்முடா முக்கோணம் தான் அவர் காணாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லை. 1918 இல் அமெரிக்கக் கடற்படையின் 542 அடி நீளமான சரக்கு கப்பல், சைக்லோப்ஸ், 300 பேருடன் காணாமல் போனது. 10,000 டன்கள் மங்கனீஸ் தனிமத்தைச் சுமந்துச் சென்ற கப்பலின் அழிந்தப் பாகங்கள் கிடைக்கவில்லை. ஆபத்தான தருணங்களில் கப்பல்களில் இருந்து வரும் அவசர உதவிக்கான அழைப்பும் வரவில்லை. நீண்ட தேடுதலுக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதியான வுட்ரோ வில்சன், “அந்த கடற்படை கப்பலுக்கு என்ன ஆனதென்று அந்த கடவுளுக்கும் கடலுக்கும் தான் தெரியும்” என்றார். 1941 இல் சைக்லோப்ஸ் போலவே மேலும் 2 கப்பல்கள் காணாமல் போனது.

1945 இல் 5 கடற்படை வீரர்கள் வெடிகுண்டு சோதனைக்காக ஃபிலோரிடா விமானத்தளத்தில் இருந்து 14 பேருடன் பயிற்சிக்குச் சென்றது. ஆனால் அந்த வீரர்களின் திசைகாட்டி செயல் இழந்ததால் வழி தவறிச் சென்றனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமற் போனது. இது போல் பல விமானங்கள் இப்பகுதியின் மேலே பறக்கும் போது காணாமல் போயிற்று.

வின்சென்ட் கட்டிஸ் என்பவர் 1964 இல் ஒரு இதழின் கட்டுரையில் இந்த விசித்திரமான இடத்திற்கு ‘பர்முடா டிரையாங்கில்’ என்று பெயரிட்டார். பின்னர் 1974 இல் சார்லஸ் பெர்லிட்ஸ் என்பவர் ‘பர்முடா டிரையாங்கில்’ பற்றி எழுதிய புத்தகம் அமோகமான வரவேற்பைப் பெற்றது. அதன் பின் அமானுடக் கதை எழுதும் அனைத்து எழுத்தாளர்களும் ‘பர்முடா டிரையாங்கில்’லை வேற்று கிரக வாசிகள், கடல் அசுரர்கள், மாற்று புவி ஈர்ப்பு புலந் போன்றவற்றுடன் தொடர்புப் படுத்தி எழுதினர்.

ஆனால் விஞ்ஞானிகளோ காந்தப் பிறழ்நிலை(அனாமொலி), நீர்ச்சுழல், கடலின் நிலப்பரப்பில் இருந்து எழும்பும் மீத்தேன் வாயு, புயல், கடற்பாறைகள் ஆகியவை இந்த மர்மத்திற்கு காரணமாக இருக்கக் கூடும் என்று கூறினர். ஆனால் இவை எதுவும் நிரூபிக்கபடவில்லை.

மேலும் இந்த மர்மத்திற்கு அசாதாரணக் காரணங்கள் இல்லை என்றும் அறிவியல் சார்ந்த காரணங்கள் தான் இருக்க முடியும் என்று லண்டனைச் சேர்ந்த கப்பல் வழி பயணக் காப்பீடு அளிக்கும் லாயிட்ஸ் நிறுவனமும் அமெரிக்கக் கடற்படையும் கூறுகிறது.

மேற்கோள்:

http://www.bermuda-triangle.org/html/true_north_magnetic_north_.html