செங்கடலில் ஒளிரும் கடல் பவளம் மருத்துவத்திற்கு உதவுமா?

செங்கடலில், 50 மீட்டர் ஆழத்தில் இருக்கும் பவளப்பாறைகள் (coral reef) இரவில் ஒளி வீசுகின்றன. ஆப்பிரிகாவிற்கும் அரேபிய தீவகத்திற்கும் (peninsula) இடையே பாயும் செங்கடலில்(Red sea) குறைந்த அளவு ஒளியே ஊடுருவுகிறது. எனினும் அங்குள்ள பவளப்பாறைகள் ஒளிரும் மஞ்சள், காட்டு பச்சை, பளிச்சென்ற ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ஒளிர்வதை ஆராய்ச்சியாளர்கள் படம்பிடித்திருக்கின்றனர். இந்தக் கடல் பவளங்களை வைத்து நுண்ணிய அளவிலான பொருட்களைக் காண புதிய கருவிகளை உருவாக்கலாம். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“பவளங்களுக்கு நிறமி(pigments) அதன் புரதங்கள். அவை நீலம் அல்லது புற ஊதா ஒளியால் ஒளியேற்றப்படும் போது பதிலுக்கு அதிகமான அலைநீளம் கொண்ட சிவப்பு அல்லது பச்சை நிற ஒளியை வெளிவிடுகின்றன” என்று இந்த ஆய்வின் துணை எழுத்தாளரும் சௌத் ஆம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கடலியல் பேராசிரியருமான ஜார்க் வியட்மான் கூறுகிறார்.

100 முதல் 330 அடி ஆழத்தில் இருக்கும் கடல் பவளத்தின் மேல் குறிப்பிட்ட அளவு சூரிய ஒளி மட்டுமே படுவதால் அவற்றை ‘மீசோஃபோடிக் பவளம்’ (Mesophotic coral) என்று அழைக்கின்றனர். இந்த வகை பவளங்களை பற்றி நம்மிடம் அதிகத் தகவல் இல்லை என்பதால் தானியங்கி ஆழ்கடல் வாகனம் அல்லது தூரத்தில் இருந்து இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல் (submarine) போன்றவற்றால் இந்தப் பாறைகளை ஆராய்கின்றனர்.

“சூரிய ஒளியின் நீலக் கற்றைகள் மட்டுமே கடலுக்குள் 50 மீட்டர் ஆழத்தைத் தாண்டிச் செல்ல முடியும். ஆனால் நிறைய பவளங்கள் ஆழமான பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். ஒளிர் நிறமிகள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்” என்று இஸ்ரேலின் டெல் -அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால் இயல் கூறினார்.

ஆழமற்ற நீர்நிலைகளில் தான் பொதுவாக கடல் பவளங்கள்ூயி வாழும். அதன் மேல் விழும் சூரிய ஒளியைப் பொருத்து நிறமிகளை சுரக்கும். ஆழமான இடங்களில் வசிக்கும் பவளங்களில் சில தனக்கு கிடைக்கும் ஒளியைக் கொண்டு தானாகவே நிறமிகளை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாக பச்சையாக இருக்கும் இவை சூரிய ஒளி அதிகம் கிடைக்காததால் சிவப்பு நிறமாக மாறிவிடுகின்றன.

கடல் பவளம், ஒளிர்வு நிறமிகளை எதற்காக உற்பத்தி செய்கின்றன என்று குறிப்பாக தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த நிறமிகள், உயர்நிலை உருவரைவு(imaging) கருவிகளை மருத்துவத்துறையில் உருவாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, ஒளிரும் புரதங்கள் உயிரணுக்களுடம் ஒட்டிக் கொண்டால் அது செல்லும் பாதையை கண்காணிக்க முடியும். சிவப்பு நிற ஒளிர்வு புரதங்கள் அதிகமான அலைநீளத்தில் ஒளி வீசுவதால் அவற்றை கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கும். “பவளங்களின் ஒளிரும் பண்பு மருத்துவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். நுண்ணோக்கி(microscope) மூலம் உயிரணுக்களை ஆராய மிகவும் உதவிகரமாக செயல்படும். மேலும் புற்றுநோய் அணுக்களை கண்டறியவும் புதிய மருந்துகளை சோத்திக்கவும் உதவும்” என்று வியட்மான் விளக்கினார்.