உப்புக்கடலின் கரையில் ஆபத்தான புதைகுழிகள் உருவாவதன் காரணம் என்ன?

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:55:09 GMT+0300 (EAT)

பல ஆண்டுகளாக உப்பான தாதுக்கள் நிறைந்த ஜோர்டான் இஸ்ரேலிடையில் உள்ள உப்புக்கடலுக்கு யாத்திரிகள் பலர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் கரைகளில் பெரும் பிளவுகள் முன்னறிவிப்பு இன்றி உருவாவது சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. உப்புக்கடலின் மேற்கு பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லை உள்ளது. கிழக்கிலோ ஜோர்டான் உள்ளது. உப்புக்கடலில் உள்ள உப்பின் அளவு 34 சதவிகிதம். இது மற்ற கடல்களின் உப்புத்தன்மையில் விட 10 மடங்கு. ஆழமோ கடல் மட்டத்திற்கு 429 மீட்டர் கீழே.

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்தக் கடலின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் ஜோர்டான் நதியை திசை திருப்பியதும் தெற்கு பகுதியில் பாயும் நீரிலிருந்து தாதுக்களைச் சுரண்டிவதும் தான். ஜோர்டான் நதி தான் உப்புக் கடலுக்குள் நீரைக் கலக்குகிறது. 1.7 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவு நீரை உப்புக்கடலில் கலக்கும் ஜோர்டான் ஆறு, இப்போது அதில் 20 சதவிகிதத்தை தான் கலக்குகிறது. மேலும் டெட் ஸீ வர்க்ஸ் எனும் நிறுவனம் அந்நீரில் உள்ள உப்பையும் தாதுக்களையும் பிரித்தெடுக்கிறது. இவ்விரண்டும் தான் உப்புக்கடலின் நீர் மட்டம் குறைவதற்கு முக்கிய காரணங்கள். ஹனன் ஜினத் என்ற புவியியலாளரின் கணிப்புப்படி இக்கடலின் நீர்மட்டம் வருடத்திற்கு 1 மீட்டர் குறைகிறது. ஜினத் உப்புக்கடல் மற்றும் அரவா ஆராய்ச்சிக்கூடத்தில் பணிபுரிகிறார். இக்கூடம் இஸ்ரேலின் பென்-குரியன் பல்கலைக்கழகம் வழங்கும் நிதியில் செயல்படுகிறது.

உப்பு நீர் குறையும் இடத்தில் புதிய நிலத்தடி நீர் நிறைந்து உப்பைக் கறைக்கிறது. இதனால் பூமிக்கடியில் பெரிய துவாரங்கள் உருவாகிறது. இந்த துவாரங்களின் மேல் புதைகுழிகள் உருவாகின்றன.” இந்த குழிகள் முன்னறிவிப்பு இன்றி திடீரென்று திறக்கின்றது. இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் அது கடினமான இருக்கிறது” என்கிறார் ஜினத்.

ஜினத்தின் சக ஊழியரான ஈலை ராஸ் இந்த புதைக்குழிகளை ஆராய்கையில் பல பள்ளங்கள் ஜோர்டான் பள்ளத்தாக்கின் நில அதிர்வு சார் குழிகள் வரிசையில் உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இது போன்ற பிளவுகளுக்கு அடியில் உள்ள கரைந்த உப்பு உறுதி குறைவானது. ஆகையால் புதிய நீரால் எளிதில் கரைந்து குழிகளை உருவாக்கும் என்று ஈலை கூறுகிறார்.

1970களில் தான் முதல் முதலாக புதைக்குழிகளைக் கண்டுபிடித்தனர். சமீப காலத்தில் இக்குழிகள் அதிக அளவில் உருவாகின்றது. இதுவரை இக்குழிகளால் யாரும் இறக்கவில்லை என்றாலும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுருத்துகின்றனர். ஒரு புதைக்குழி 25 மீட்டர் ஆழமாகவும் 40 மீட்டர் அகலமாகவும் இருக்கும். சில குழிகள் பக்கத்தில் உள்ள குழிகளுடன் சேர்ந்து பெரிய குழிகளாகும் என்று ராஸ்ஸும் அவரது சக ஊழியர்களும் கூறுகின்றனர்.

தற்போதைய கணக்குப்படி 400 புதைகுழிகள் உப்புக்கடலின் மேற்கு கரையில் இருக்கின்றன. இந்த நீர்மட்டம் குறையாமல் இருக்க செங்கடலில் இருந்து உப்புக்கடல் வரை வாய்கால் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இது ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீன் எல்லைகளுக்கு தண்ணீர் வழங்குவதோடு மட்டும் அல்லாமல் உப்பு நீரை உப்புக்கடலில் கொண்டு சேர்த்து அதற்கு தேவையான மின்சாரத்தையும் தயாரித்துக் கொள்ளும் படி திட்டமிட்டுள்ளனர். இஸ்ரேலும் ஜோர்டானும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜினத், ”புதைக்குழிகள் உருவாகாமல் நிறுத்த முடியாது. ஆனால் சாலை போடும் போதும் கட்டிடங்களை எழுப்பும் போதும் இந்த ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த தகவல்களை நினைவில் கொண்டு செயல் பட வேண்டும்” என்று கூறினார்.

உலகின் வேறு சில பகுதிகளில் புதைக்குழிகள் உருவாகி இருக்கின்றன. சைபீரியாவில் கிட்டத்தட்ட 7 பெரிய பள்ளங்களை கண்டுபிடித்துள்ளனர். நிலத்தடி உறைபனி உருகியதால் மீத்தேன் வாயு வெடித்து சிதறி பள்ளங்களை உருவாக்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர்.