டார்வினைக் குழப்பிய விசித்திர விலங்குகளின் பரிமாணத் தோற்றம்

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:40:25 GMT+0300 (EAT)

சார்லஸ் டார்வினால் ‘இதுவரை கண்டுபிடித்ததிலேயே விசித்திரமானவை’ என்று விவரிக்கப்பட்ட இரண்டு விலங்குகளின் பரிமாணத் தோற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஒன்று நீண்ட உறிஞ்சிக்குழல் கொண்ட குதிரை போன்றது. இரண்டாவது காண்டாமிருகம் போன்ற உடலும் நீர்யானைப் போன்ற தலையும் கொண்டது. இவ்விரண்டு விலங்குகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவை என்றும் இவை பழங்காலப் பாலூட்டி வகைகளானக் ‘காண்டிலார்த்ஸ்(condylarths) எனும் குழுமத்தைச் சேர்ந்தது என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்றில் வெளிவந்துள்ளது. காண்டிலார்த்ஸ் என்பவைப் ‘பெரிஸ்ஸோடாக்டில்ஸ்’(perissodactyls)(கால்களில் ஒற்றைப் படை விரல்களைக் கொண்ட விலங்குகள்) குடும்பத்தின் உடன்பிறப்பாகும். 


“டார்வின் இவ்விரு சிறப்பு இனத்தையும் ‘மக்ரௌசினியா’(Macrauchenia) மற்றும் ‘டாக்ஸடான்’( Toxodon ) என்ற பேரினப்பெயர்களின் கீழ் வகைபடுத்தினார். தென் அமெரிக்காவைச் சுற்றி அவர் கடல் பயணம் மேற்கொண்ட போது, டாக்ஸடான் உடைய தொல்லுயிர் புதைப்படிவங்களை உருகுவேயில் ஒரு கால் நடைப் பண்ணையில் வாங்கினார். மக்ரௌசினியாவின் புதைப்படிவங்களைத் தெற்கு படகோனியாவில் வாங்கினார்” என இந்த ஆராய்ச்சியைச் செய்பவர்களுள் ஒருவரான டங்கன் போர்டர் கூறினார். இவர் வெர்ஜீனியா டெக்-இன் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார்.

டாக்ஸடானின் உடல் காண்டாமிருகத்தைப் போலும் தலை நீர்யானையைப் போலும் இருந்ததால் அது எந்த மிருகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற குழப்பம் டார்வினுக்கு இருந்திருக்கிறது. அது எறும்புண்ணியின் குடும்பமாகவும் இருந்திருக்கலாம் என்று அவர் ஊகித்தார்.

மக்ரௌசினியாவோ நீளமான கழுத்தைக் கொண்டிருந்தது அதனால் அது ஒட்டகம், சடை எருமை(இலாமா) வகையைச் சேர்ந்ததாக இருந்திருக்கலாம். பல ஆண்டுகளாக டாக்ஸடானும் மக்ரௌசினியாவும் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

டார்வினின் முதற்கணிப்பு, இவை யானைகள், கடல் பசுக்கள் மற்றும் கொறிக்கும் பிராணிகளோடு தொடர்புடையதாக இருக்கும் என்பது தான்.

ராஸ் மெக்ஃபீ, அமெரிக்கன் அருங்காட்சியகத்தின் பாலூட்டித் துறைக்குப் பொறுப்பாளர். அவர் கூறுவதாவது “இந்த ஊகங்களை உடைத்து விடையை அடைய மூலக்கூற்றின் மேல் கவனம் செலுத்த வேண்டும்”. ஆதலால் விஞ்ஞானிகள் அவ்விலங்குகளின் எலும்பிலிருக்கும் ‘கொலஜென்’ என்ற ஒரு வகைப் புரதத்தை ஆராய்ந்தனர். பல மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டதால் டிஎன்ஏ அழிந்திருக்கும். ஆனால் கொலஜென் புரதம் அதன் எலும்பில் நெடுங்காலம் நீடித்திருக்கும். ஒரே ஒரு சிக்கல் கொலஜென்னில் இருந்து தகவலைச் சேகரிப்பது கடினம். 45 வகைப்படிவங்களைச் சோதித்ததில் 5 இல் தான் புரதங்கள் கிடைத்தன. அவற்றைச் சில அழிந்த மிருகங்களோடும் சில வாழ்ந்து வரும் மிருகங்களோடும் ஒப்பிட்டனர்.

ஒவ்வொரு ஒப்பீட்டிலும் கிடைத்த விடை- டாக்ஸடானும் மக்ரௌசினியாவும் பெரிஸ்ஸோடாக்டில்(காலில் ஒற்றைப்படை விரல்களைக் கொண்ட) இனத்தின் உடன்பிறப்பு என்பது தான். இறுதியில் அவ்வினோத விலங்குகளுக்குப் பரிமாண வரைபடத்தில் ஒர் இடம் கிடைத்தது.

“இதே முறையைப் பயன்படுத்தி அழிந்து போன இன்னும் பல விலங்குகளின் பரிமாணத் தோற்றம் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். தற்சமயம் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகங்களின் புரதத்தைத் தான் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் பத்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மிருகங்களில் இருந்தும் புரதத்தை எடுத்துப் பரிசோதிக்கக்கூடிய அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிடும்” என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் மெக்ஃபீ.