ராணுவ வீரர்களுக்கு உதவும் கணவாய் மீனின் புரதம்

ஜெயஸ்ரீ
Fri Apr 03 2015 22:21:56 GMT+0300 (EAT)

கணவாய் மீனில்(ஸ்க்விட்) காணப்படும் ஒரு வகைப் புரதம் ராணுவ வீரர்களுக்கு உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கணவாய் மீன் இறையைப் பிடிக்கத் தன் உண்மையான நிறத்தை மறைத்துத் தன் பின்னணி நிறத்திற்கு மாறிவிடும். அச்சமயத்தில் இறையின் கண்களுக்கு அது தெரியாது. ஆபத்து என்று தெரியாமல் பக்கத்தில் வரும் இறையை உண்டு விடும். எப்படி அதனால் நிறத்தை மாற்ற முடிகிறது?

கணவாய் மீனின் மேற்புறத் தோல் ‘இரிடோசைட்’ என்ற அரியவகை உயிரணுக்களால் ஆனது. இவை ‘ரிஃப்லெக்டின்’ என்னும் புரத(ப்ரோட்டீன்) அடக்குகளால் உருவாக்கப்பட்டது. தேவையான போது இந்த அடுக்குகளின் தடிமனையும் அவைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியையும் மாற்றுகிறது. இதன் காரணமாக அதன் மேல் படும் ஒளியின் நிறம் மாறி எதிரொளிக்கிறது. இதனால் உண்மையான நிறமும் மாறுபட்டுத் தெரிகிறது.

ரிஃப்லெக்டினைப் பயன் படுத்தி ராணுவ வீரர்களுக்குப் பயன் தரக்கூடிய ஒட்டுபடத்தை(ஸ்டிக்கர்) உருவாக்கி உள்ளனர். இலைத் தழைகளைப் போன்ற வடிவமைப்புக் கொண்ட ஆடையைப் போட்டுக் கொண்டு பகலில் எதிரிகளின் கண்களில் இருந்துத் தப்பித்துக்கொள்ளும் இவர்களை இரவில் அகச்சிவப்பு(இன்ஃப்ரா ரெட்) ஒளியைக் கொண்டு கண்டுபிடித்து விட முடியும். அப்படிச் சக்தி வாய்ந்த அகச்சிவப்புப் புகைப்படக் கருவியாலும் கண்டுப் பிடிக்க முடியாதப் படி கண்ணுக்குப் புலப்படாத ஒட்டுப்படங்களை ரிஃப்லெக்டினைக் கொண்டு உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பணிபுரியும் முனைவர் அலொன் கொரடெட்ஸ்கி, “மெல்லிய வளைந்துக் கொடுக்க்க்கூடிய ஒட்டுபடங்களை உருவாக்கியுள்ளோம். அகச்சிவப்பு ஒளியைக் கொண்டு வீரர்களை எதிரிகள் தேடுகையில் அதன் எதிரொளி அவர்களின் பின்னணியை ஒத்த பிம்பத்தைத் தரும். அதனால் எதிரிகள் கண்ணிலிருந்து சுலபமாகத் தப்பிக்க முடியும்” என்கிறார்.

இவர் தன் குழுவோடு நுண்ணுயிரியைக்(பாக்டீரியா) கொண்டு ரிஃப்லெக்டின் செய்தார். அதை ஒரு தடிமனான மேற்பரப்பில் தடவினார்கள். இந்த ரிஃப்லெக்டின்னில் இரிடோசைட் போன்ற கட்டமைப்பை உருவாக்கவும் எதிரொளியைப் பின்னணிக்கேற்ப மாற்றவும் ஒரு தூண்டுதல்(ட்ரிகர்) தேவைப்பட்டது. அந்தத் தூண்டுதலுக்கு அசிடிக் அமிலத்தின் ஆவியை உபயோகப்படுத்தினர். அசிடிக் அமிலத்தின் ஆவி அந்தப் படலத்தை முதலில் வடியச் செய்து பின் மறையச் செய்கிறது. அகச்சிவப்பு ஒளியைக் கொண்டும் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் நடைமுறையில் அசிடிக் அமிலம் முறை சாத்தியப்படாது.

அடுத்தக் கட்ட முயற்சியாக ரிஃப்லெக்டின் படலங்களைப் பல்படிம அடித்தளத்தில் ஒட்டினார்கள். இந்த அடித்தளத்தை வீரர்கள் உடுத்தும் சீருடையில் ஒட்டினார்கள். ரிஃப்லெக்டினை இயக்கத் தூண்டுதலாக இழுவை முறையைப் பயன்படுத்தினார்கள். அதாவது, சீருடை இழுக்கப்படும் போது அந்தப் புரதம் வேலை செய்யும். அப்போது எதிரிகளின் அகச்சிவப்புப் புகைப்படக்கருவியில் தென்படாமல் தப்பித்து விடுவார்கள். இந்த முறை நடைமுறைக்குச் சாத்தியப்படும்.

இந்தப் பட்டையை விலைக்குறைவாகவும் தேவைப்படும் போது ஒட்டிக் கொள்ளவும் வேலை முடிந்ததும் பிரித்துக் கொள்ளவும் சுலபமாக உருவாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கொரடெட்ஸ்கி கூறுகிறார்.

இப்போது உருவாகப்பட்டுள்ள ஒட்டுப்படம், அகச்சிவப்பு ஒளி பக்கத்தில் இருந்தால் மட்டுமே வேலை செய்யும். நடு மற்றும் தூர அகச்சிவப்பு அலைநீளத்தில் இதைச் செயல்முறைப்படுத்த ஆராய்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் வெளிச்சத்தை அதிகப்படுத்தவும் பல படலங்களைப் பயன்படுத்தினாலும் அனைத்தும் ஒன்று போல் செயல் படச் செய்யவும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இது ராணுவம் அல்லாது பிற இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. வானிலைக்கு ஏற்ப ஆடை வாயிலாக உடம்பில் இருந்து சூட்டை வெளியேற்றவும் சூட்டை வெளியேற்றாமல் தடுத்து நிறுத்தவும் உதவுகிறது. மேலும் யுசிஐ ஸ்கூல் ஆஃப் மெடிசினைச் சேர்ந்த முனைவர் ஃப்ரான்சிஸ்கோ டம்போலா, முனைவர் லீஸா ஃப்லனகன் மற்றும் கொரடெட்ஸ்கி, ரிஃப்லெக்டின் புரதம் உயிரணுக்கள் வளர உதவுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆற்றலை உயிர் சார்ந்த மின்னணு எந்தரங்களில் பயன் படுத்தலாம். அது மட்டுமின்றிச் செயற்கையான முறையில் கணவாய் மீனின் தோலை செய்வதற்கும் பயன் படுத்தலாம் என்கின்றனர்.