செவ்வாய் கிரகத்தில் எரிமலை இருக்க சாத்தியக்கூறு

ஜெயஸ்ரீ
Sat Mar 21 2015 12:25:52 GMT+0300 (EAT)

புகைப்படக்கருவியைத் தூக்கிக் கொண்டு பறக்கும் எந்திரத்தைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த திரைபடங்களிலும் விளம்பரங்களிலும் பார்த்து ஆச்சிரியப்பட்டிருப்போம். ஆனால் அவை நிஜமாகவே இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்தப் படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? உலகத்தின் மிக பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேஸான் கூட அமெரிக்காவில் இந்த எந்திரத்தை தனக்கு வரும் ஆர்டர்களை பூர்த்திச் செய்ய வாடிக்காளர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதற்காக உபயோகப்படுத்துகிறது. இந்த எந்திரத்தை சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எரிமலையை ஆராய உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். முக்கியமாக எரிமலைகள் அதிகம் இருக்கும் ஹவாய் தீவுகளில் இவை அவ்வெரிமலைகளின் இயற்கூறுகளைக் கண்டறியப் பயன் படுத்தப்படுகிறது.


பட்டம் போல பறக்கும் திறன் கொண்ட இந்த எந்திரத்தில், புகைப்படக்கருவியோடு ஜிபிஸ் மற்றும் திசையமர்வு உணர்விகளும் பொருத்தப்பட்டிருக்கிறது. இவற்றை எரிமலைகளின் மேல் பறக்கவிட்டு ஆயிரக்கணக்கான் புகைப்படங்கள் எடுக்கப் படுகின்றன. பின்பு உயர் தொழில்நுட்ப மென்பொருள் கொண்டு அப்புகைப்படங்களை சரியாக வரிசைப்படுத்தி எரிமலைகளின் விரிவான துள்ளியமான 3டி இலக்கமுறை நிலவமைப்பின் மாதிரியை உருவாக்குகிறார்கள். புகைப்படத்தில் பிரிதிறன் அதிகமாக இருப்பதால் (ஒரு படப்புள்ளிக்கு அறை அங்குலம்) படம் மிகத்துள்ளியமாக இருக்கும்.

இந்த வரைபடம் எழுதும் எந்திரத்தை உருவாக்கிய ஸ்டீஃபன் ஸ்கீட் கூறுகையில், “ இந்த எந்திரம் 11 அடி கொண்ட இறக்கையால் இயக்கப்படுகிறது. பறக்கும் போது 5 முதல் 10 கோணம் வரை சுற்றும். இதனால் கிடைக்கும் காட்சிகளை வைத்து 3டி யில் நிலப்பரப்பின் மாதிரியை இதனுள் பொருத்தப்பட்டிருக்கும் மென்பொருள் உருவாக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி ஒவ்வொரு 2 நொடிக்கும் ஒரு புகைப்படம் எடுக்கும். ஆக ஒரு தளத்தை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் எடுக்கும். அப்படி எடுக்கப்படும் புகைப்படங்களில் உள்ள உருக்குலைவுகளை சீராக்கி ஒன்று சேர்த்து உண்மையான நிலத்தை ஒத்த மாதிரி உருவாக்கப்படுகிறது “

இந்த செயல்முறையின் பெயர் ஆர்தோ ரெக்டிஃபிகேஷன். இச்செயலுக்கு நிறைய கணக்கிடுதலும் நிறைய நேரமும் தேவைப்படுகிறது. முடிவில் துள்ளியமான பிரிதிறன் கொண்ட உருப்படிவம் கிடைக்கிறது.

இந்த நிலவமைப்பு மாதிரிகளை வைத்து செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பையும் புரிந்துக் கொள்ள முயல்கிறார்கள் விஞ்ஞானிகள். நாஸா, செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பியிருக்கும் மார்ஸ் ரெகொநெஸான்ஸ் ஆர்பிட்டர் ஆறு கருவிகளைக் கொண்டது. அதில் ஹை.ஆர்.ஐ.ஸ்.ஈ (ஹை ரெஸல்யூஷன் இமேஜிங் எக்ஸ்பெரிமன்ட்) எனும் உயர்ரக புகைப்பட கருவி மூலம் எடுத்திருக்கும் புகைப்படங்கள் செவ்வாய் கிரத்தின் இதுவரை கண்டிராத இடங்களை படம்பிடித்திருக்கிறது. க்ரிஸ்டஃபர் ஹாமில்டன் என்பவர் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் கூறுகையில், “ செவ்வாய் கிரகத்தின் வெப்ப வரலாற்றை புரிந்து கொள்ள அந்த கிரகத்தின் நிலப்பரப்பை போன்றே பூமியில் உள்ள புல்வெளி இல்லாத நிலங்களை ஆராய்கிறோம். அந்த நிலம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு நிற்த்திவிடாமல் அப்படி உண்டானதற்கான காரணம் என்ன என்பதையும் தேடுகிறோம். “ என்கிறார்.

இந்தக் குழு தங்கள் ஆராய்ச்சிக்காக ஹவாயில் உள்ள கிலாவ் எனும் எரிமலையைத் தேர்ந்தெடுத்து ஆராய்கிறது. இந்த எரிமலை 1947 இல் சீற்றம் கொண்டு எரிமலைக்குழம்பை கக்கியது. இந்த மலையின் மேற்புற அமைப்புக்கும் ஹை.ஆர்.ஐ.ஸ்.ஈ எடுத்த செவ்வாய் கிரகத்தின் மேற்புற அமைப்புக்கும் இருக்கும் ஒற்றுமைப் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர் ஒடியதற்கான் தடங்கள் என்று நம்பப்பட்ட தடங்கள் அனற்குழம்புகளால் உண்டானது என்று தெரிகிறது.

ஹாமில்டன் ஹவாய் எரிமலையின் நிலவமைப்பின் மாதிரியை சுட்டிக்காட்டி பேசும்பொது “சில இடங்களில் நிலம் பிளந்து நீர் செல்லுவதற்காக பாதை வார்த்திருத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அது அனற்குழம்பு சென்ற பாதை என்று இப்போது தெரிகிறது” எங்கிறார். மேலும் “ புதிதாக வழியும் அனற்குழம்பு ஏற்கனவே அனற்குழம்புகளால் உருவாக்கப்பட்ட மலைகளின் இடையில் நிரம்பி மேற்தரப்பில் மட்டும் உறைந்து தட்டுகளாக நிற்க்கும் பழைய அனற்குழம்பின் மேல் விழுகிறது. இந்த தட்டுக்கள் வடிகால் வழியே செல்லும் போது நொறுங்குகிறது. ஒரு அமைப்பை மட்டும் பார்க்காமல் உருவாகியிருக்கும் பல விதமான அமைப்புகளை எது இணைக்கிறது என்ற நோக்கத்தில் தேடிய போது விடை கிடைத்தது ” என்கிறார்.