புவிவெப்ப மின்சாரம்: ஒரு பார்வை

ஜெயஸ்ரீ
Sat Mar 21 2015 12:24:51 GMT+0300 (EAT)

இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளி, காற்று, தண்ணீர் ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்படும் மின்சாரம் போல, பூமிக்கடியில் இருக்கும் வெப்பத்தைப் பயன் படுத்தி உருவாக்கப்படுவது தான் புவிவெப்ப மின்சாரம்.


இத்தாலியில் 1904 இல் முதன் முதலாக புவிவெப்பம் மூலமாக மின்சாரம் எடுக்கப்பட்டது. ஒன்றரை அடி ஆழத்தில் தேங்கி இருக்கும் நீராவி மற்றும் மிகுந்த சூடன தண்ணீரைக் கொண்டு ஒரு கழலி (டர்பைன்) இயக்கப்படுகிறது. இந்த கழலியுடன் இணைக்கப் பட்டிருக்கும் மின்னாக்கி(ஜெனரேடர்) மின்சாரத்தைத் தயாரிக்கிறது.

உலகம் முழுவதிலும் 20 நாடுகளே இந்த வகையான மின்சாரத்தை உருவாக்குகின்றனர். அதில் முதலாவது அமெரிக்கா. கலிஃபோர்னியாவில் உள்ள கெய்சர் நார்த் ஆஃப் சான் ஃப்ரான்சிஸ்கோ எனும் நுறுவனம் தான் உலகிலேயே புவிவெப்ப சக்திக்கான பெரிய வளர்ச்சி மையம். 25 வீரியமுள்ள எரிமலை மற்றும் பல வெந்நீரூற்றுகள் கொண்ட ஐஸ்லாந்திலும் இது உபயோகத்தில் உள்ளது.

பூமியின் மேல்மட்டத்திற்கடியில் இருக்கும் கற்கள் மற்றும் திரவங்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சக்தி பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. பூமியின் ஆழமற்ற மேற்பரப்பிலிருந்து பல ஆயிரம் மைல்கள் ஆழத்தில் இருக்கும் உருக்கப்பட்டக் கற்களான பாறைக்குழம்பு வரை புவிவெப்ப ஆற்றல் அடங்கி உள்ளது.

பூமிக்கடியில் சுமார் மூன்று மீட்டரிலேயே வெப்ப இறைவை எந்திரத்தின் மூலம் சுலபமாகக் கிடைக்கும் இந்த ஆற்றலைக் கொண்டு வீடுகளையும், அலுவலகக் கட்டிடங்களையும் குளிர் காலத்தில் மிதமானச் சூட்டுடனும் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.

பனிகாலங்களில் தேங்கி நிற்கும் பனியை உருக்க, ஆழமான இடங்களிலிருந்து கிடைக்கும் நீராவி மற்றும் சூடான நீரைக் குழாய் மூலமாகச் சாலை மற்றும் நடைபாதைகளின் அடியில் செலுத்தப்படுகிறது.

இவ்வளவு சுலபமாக கிடைக்கும் புவிவெப்ப ஆற்றலில் இருந்து மின்சாரம் மூன்று வகையில் தயாரிக்கப்படுகிறது. முதலாவதாக உலர்ந்த நீராவி முறை. இது மிகப் பழமையான முறை. இம்முறையில், நிலத்தில் உள்ள பிளவுகளில் இருக்கும் நீராவியை வைத்துக் கழலியை இயக்கச் செய்வதாகும்.

இரண்டாவதான ஃப்ளாஷ் முறையில் ஆழத்தில் இருக்கும் உயர் அழுத்தமுள்ளச் சுடான நீரை இழுத்துக் குளிர்ப்பிக்குள்(கூலர்) அனுப்பினால் வரும் ஆவியை வைத்துக் கழலியை இயக்குவதாகும்.

மூன்றாவதான இருமை(பைனரி) முறையில், சூடான நீரை அதை விட கொதிநிலை குறைவான திரவத்தின் மேல் பாய்ச்சப்படுகிறது. இதனால் ஆவியாகும் அந்த இரண்டாவது திரவம் கழலியை இயக்குகிறது. கழலியுடன் பொருத்தப்பட்டிருக்கும் மின்னாக்கி மின்சாரத்தைத் தயாரிக்கிறது.

புவிவெப்ப மின்சாரத்தின் நன்மைகளைப் பார்ப்போம். புவிவெப்ப மின்சாரம் பயன்படுத்துவதால் வெளிவரும் கரியமில வளிமம் மற்ற இயற்கை எரிவாயு பயன்படுத்தும் போது வருவதை விட 83 சதவிகிதம் குறைவு. நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றைப் பயன் படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும் போது வெளி வரும் கழிவுகளை விட புவிவெப்ப முறையில் மிக மிகக் குறைவு. முக்கியமாக இருமை முறையில் கழிவே வெளிப்படுவது இல்லை. சூரிய ஒளிக்கோ, காற்று வீசவோ காத்திராமல் வருடம் முழுக்கக் கிடைக்கக்கூடியது. விலையும் மற்ற முறைகளை விட எண்பது சதவிகிதம் குறைவு.

நன்மைகள் ஒரு புறம் இருக்க, இதனால் ஏற்படும் தீமைகள் என்று பார்தோமேயானால், ஹைட்ரஜன் ஸல்ஃபைட் மற்றும் சில நச்சுத் திரவங்களைச் சிறிய அளவில் வெளியிடுகிறது. மற்றொருத் தடை, பூமிக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட நீராவியின் வெப்பம் நாளடைவில் குறையும். அப்படி வெப்பம் குறையும் போது இந்த சூட்டைப் பயன்படுத்திக் குளிரைச் சமாளித்துக் கொண்டிருந்த இடங்களில் மறுபடியும் குளிர் தாக்கும்.