ஞாபகத்திறன் கொண்ட மின்னணு தோல்-நானோ தொழில்நுட்பத்தின் புதிய இயலுமை

ஜெயஸ்ரீ
Sat Mar 21 2015 12:23:38 GMT+0300 (EAT)

நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடம்போடு ஒட்டி, அவனது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் திறன் கொண்ட மின்னணுத் தோலை உருவாக்கியுள்ளனர். மிகவும் மெல்லியதாக இருக்கும் இந்த கருவி, மனித உடலிற்குத் தேவையான மருந்துகளைச் செலுத்தும் ஆற்றலும் கொண்டது. 


இதை போன்ற ‘மின்னணு தோல்’களைக் கண்டுபிடிக்க வெகு நாட்களாக முயற்சிகள் நடந்துகொண்டிருப்பினும், தகவல்களை சேகரித்து நோயாளிகளுக்கு மருந்து அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட முதல் கருவி இது தான். இதனோடு சேர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளித்து கண்காணித்துக் கொள்ளும் இந்த ‘தோல்’ வருங்காலத்தில் பார்க்கின்சன் நோய், கால்-கை வலியால் சுயமாக நடமாட முடியாதவர்கள், மூட்டு வலியினால் நடக்க சிரமப்படுபவர்கள் ஆகியோருக்கு உபயோகமாக இருக்கும் என்று இதனை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

“வெப்பம் மற்றும் இயக்கத்தை கண்டறியகூடிய உணரவிகள்(சென்ஸார்), தரவுகளை சேமிக்க மின் தடையி(ரெசிஸ்டர்) கொண்ட தற்காலிக சேமிப்பகம்(ராம்), நுண் வெப்பமூட்டிகள்(மைக்ரோ ஹீட்டர்), மருந்துகள் ஆகிய அனைத்தும் நீட்டிக்கும் திறன் கொண்ட நானோ பொருட்களாக செய்யப்படுகிறது. பிறகு அவைகளை மனித சருமத்தைப் போன்று மென்மையான, இளக்கமான பொருளுடன் சேர்த்து அடுக்கப்படுகிறது. இவ்வாறு செய்யப்படுகிற இந்த தோலின் நீளம் 4 செ.மீ, அகலம் 2 செ.மீ, தடிமன் 0.3 செ.மீ.” என்கிறார் ஆஸ்டினில் உள்ள டெக்ஸஸ் பல்கலைகழகத்தில் இயந்திரவியல் பொறியாளராக பணிபுரியும், ஆராய்ச்சியாளர் நான்ஷு லூ.

இந்த புதுமையான நானோ கருவியை இயக்க மின்சாரம் மற்றும் தரவுகள் அலைபரப்பி தேவைப்படுகிறது. அவற்றையும் மேற்குறிப்பிட்ட நானோ பொருட்களைப் போலவே மெல்லியதாக்கி அதனோடு சேர்த்து அடுக்கினால், ‘மின்னணு தோல்’இன் முன்மாதிரி நோயாளியின் உடம்பில் பயன்படுத்த தயார் ஆகிவிடும். “மின்சாரத்திற்கு வணிக ரீதியாக கிடைக்கும் லித்தியம் மின்கல அடுக்கையும் அலைபரப்பிக்கு வானொலி அலைவெண் இனங்காட்டலை பயன்படுத்தியும் இதை இயக்கலாம். ஆனால், அவை மனிதனின் தோல் போல் மென்மையாகச் செய்ய முடியாது என்பதனால் இவை உபயோகப்படுத்தப்படுவது இல்லை.” என்கிறார் லூ.

இப்படி மனிதனின் தோலில் ஒட்டப்பட்ட இந்த கருவி கம்பியில்லாதத் தொலைவரி (வயர்லெஸ்) மூலமாக அனுப்பும் தரவுகளைப் படிக்கத்தகு இலக்கமுறைப் படிவங்களாக மாற்றப்பட்டு பெருக்கப்பட வேண்டும்.“ஒரு மெல்லியக் கருவிக்குள் இத்தனையையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது சிக்கிலான விஷயம். ஆதலால் இது நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகும்” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.