மாமிச உண்ணிகளின் வாயில் எச்சில் ஊறச்செய்யும் வேதிச்சேர்மம்

மா. சண்முகசுந்தரம்
Tue Nov 18 2014 22:49:17 GMT+0300 (EAT)

மாமிசபட்சிகளை ஈர்க்கும் இரத்தத்தின் மணத்திற்கு காரணியாய வேதியச்சேர்மம் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகுந்த ஈர்ப்புத்தன்மை கொண்டிருந்தாலும் எளிதில் ஆவியாகும் தன்மை காரணமாக எந்தவொரு விலங்கின் நாவினாலும் சுவைக்கப்படுவதில்லை. மாறாக நுகர மட்டுமே செய்யப்படுகிறது. டிரான்ஸ்-4,5-ஈபாக்சி-(E)-2-டெக்கீனல்(Trans-4,5-epoxy-(E)-2-decenal) என்ற சேர்மம் தான் இரத்தத்தின் மணத்திற்கு முக்கிய காரணி என கண்டறிந்துள்ளனர்.

சுவீடனிலுள்ள லிங்கோபிங் பல்கலையின் லஸ்கா(Matthias Laska, Linköping University, Sweden) மற்றும் அவரது குழுவினர் நறுமண நிபுணர்களின் உதவியுடன் இச்சேர்மத்தை பிரித்தெடுத்துள்ளனர். இரத்ததிலிருந்து எளிதில் ஆவியாகும் ஒவ்வொரு சேர்மத்தையும் தனித்தனியே நுகர்ந்து பார்த்து இரத்தத்தின் மணம் தரும் சேர்மத்தை பிரித்தறிந்துள்ளனர்.

ஆல்டிகைடு வகையை சார்ந்த சேர்மம் விலங்குக் கொழுப்புகள் சிதையும் போது உண்டாகின்றது. மேலும் இது இரத்தத்திற்கு லேசான உலோகத்தின் மணத்தை தருகிறது. இது அனைத்து பாலூட்டிகளின் இரத்தங்களிலும் இருக்கும் என உறுதியாக நம்புகிறார் லஸ்கா .

லஸ்காவின் குழுவினர் இச்சேர்மத்தை ஒரு மரத்துண்டின் மீது பூசி வைத்தபோது சைபீரிய புலி மற்றும் மூன்று வகை காட்டு நாய்களையும் வழக்கமாக அவைகளுக்கு கொடுக்கப்படும் மாமிச துண்டம் ஈர்ப்பதைப் போல் ஈர்த்தது என பதிவு செய்துள்ளனர். இதே மரத்துண்டின் மீது வாழைப்பழ மனத்தை தரும் சேர்மத்தை பூசி வைத்தபோது அவைகளை அவ்வளவாக ஈர்க்கவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் ஆப்பிரிக்க காட்டு நாய்கள் உண்மையான குதிரை இரத்தத்தினை காட்டிலும் இச்சேர்மத்தின் மணம் மீது அதிக விருப்பை காட்டியதாக கூறுகிறார் லஸ்கா.

PLoS One, DOI: 10.1371/journal.pone.0112694