மீநுண் துகள்கள் மூளைக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புண்டு

சண்முகசுந்தரம்
Wed Nov 05 2014 16:30:45 GMT+0300 (EAT)

மின்புலத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட ஒரு மனிதனை சாதாரண மருந்தினை கொண்டு குணமாக்ககூடிய நிலையில் இருந்து அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து செல்லும் நிலைக்கு கூட கொண்டு செல்லவல்லது என்கிறது புதிய ஆராய்ச்சி முடிவுகள். மருந்துப் பொருட்களை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஊர்திகளின்(drug carriers) நச்சுத்தன்மை குறித்த ஆராய்ச்சியின் போது, புறப்பரப்பில் நேர்மின்னூட்டம் உடைய சில ஊர்திகள் மூளையை அடையும் பட்சத்தில் அவை தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளனர்.


        மிசெல்கள் (Micelles) என அழைக்கப்படும் இத்தகு வாகனங்கள் மீநுண் துகள்களின் (Nanoparticles) ஒருவகையாகும். இவற்றின் இயைபு, மின்னூட்டம் போன்ற பண்புகளை மற்றும் புறப்பரப்பில் இணைக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள் ஆகியவற்றறை சரிவர மாற்றியமைப்பதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் மருந்துகளை ஒரு குறித்த உடற்பகுதிக்கோ அல்லது குறித்த உயிரணுக்களமைவிற்கோ கொண்டு சேர்ப்பிக்கும் ஊர்திகளாக வடிவமைக்கலாம். இத்தகைய ஊர்திகள் மருந்துபொருட்களை அவற்றின் தேவையுள்ள இடங்களை அடைய உதவுகின்றன. இதர வழிகளில் இது சாத்தியமற்றது. உதாரணமாக புற்றுநோய்க்கட்டிகளின் இதயப்பகுதிக்கு மருந்துப்பொருட்களை மற்ற பகுதிகளுக்கு பாதிப்புண்டாக்காமல் கொண்டு சேர்ப்பிப்பது சாத்தியமாகிறது. இதன் மூலம் புற்றுநோய் மருந்துகளால் நோய் தாக்குறாத பகுதிகளில் மருந்தின் விளைவுகளை தவிர்க்கலாம்.


        மேலும் ஆராய்ச்சியாளர்கள் குருதி-மூளை அரணை (Blood-Brain Barrier) கடந்து மருந்துப்பொருட்களை கொண்டுசெல்ல மீநுண்  துகள்களை பயன்படுத்துவதை குறித்து ஆய்ந்துவருகின்றனர். இவ்வரணானது இறுக்கி பிணைக்கப்பட்ட உயிரணுக்களால் ஆனது. இது அன்னியப்பொருட்கள் மூளையை சென்றடையா வண்ணம் காக்கும் அரணாகும். எனினும் மீநுண் துகள்கள் மூளைக்கு எந்த அளவிற்கு பாதுக்காப்பானது என அறுதியிடலாகாது. இதனையறிய கொபென்ஹகனிலுள்ள செயல்படு சுற்றுச்சூழலுக்கான தேசிய ஆய்வு மையத்தை(National Research Center for Active Environment) சார்ந்த நச்சுவியல் ஆய்வாளர் கிறிஸ்டின பிரம் க்னுட்சென்(Kristina Bram Knudsen) மற்றும் அவரது குழுவினர் நேர்மின் அல்லது எதிர்மின் தன்மையை தரவல்ல புரதங்களால் ஆன இருவித மிசெல்களை ஆய்வு செய்தனர். இவ்விருவகையான ஊர்திகளையும் (மருந்தில்லாமல்) தனித்தனியே எலி மாதிரிகளின் மூளையில்  செலுத்தி  ஒரு வாரத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்தபோது  நேர்மின்னூட்டம் கொண்ட ஊர்திகளை செலுத்திய ஐந்தில் மூன்று எலிகளுக்கு மூளைச்சிதைவு ஏற்பட்டிருந்தது. அதேவேளையில் எதிர்மின்னூட்டம் கொண்ட ஊர்திகள் அல்லது கட்டுப்பாட்டு மாதிரிகளில் எவ்வித உணரத்தக்க மாற்றங்களும் ஏற்ப்படவில்லை. இவ்வாய்வு முடிவுகளை மீநுண் நச்சுவியல்(Nanotoxicology)  இதழின் எதிர்வரும் பதிப்பில் குழு  வெளியிடும் என்றார்.


மிசெல்கள் மற்றும் அவைபோன்ற மீநுண் துகள்களின் வலிமைக்கும் புகழுக்கும் காரணமான அம்சமே சிலசமயம் மூளை அணுக்களுக்கு பாதகமாக அமையும் என எடுத்துரைக்கிறார் க்னுட்சென். மேலும் உயிரணுக்கள் தங்கள் புறப்பரப்பில் எதிர்மின் தன்மை கொண்டிருக்கும் அதன் காரணமாக நேர்மின்னூட்டம் கொண்ட மிசெல்களை கவர்ந்திழுத்து உட்கொள்ளும். இவ்வாறாக உட்சென்ற மிசெல்களின் இருப்பு மற்றும் மின்தன்மை அணுக்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும் என்கிறார்.


        மற்றோர் ஆய்வு  எதிர்மின்னூட்டமுடைய மீநுண் துகள்களும் அனுக்களுக்குள்  செல்லவல்லது என்கிறது. ஆனால் அவை உயிரணுக்களின் புறப்பரப்பிலுள்ள எதிர்மின்னூட்டத்தின் எதிர்ப்பு விசையையும் சமாளிக்க வேண்டியிருப்பதால் அவற்றின் விளைவு மிகவும் வீரியம் குறைந்ததாக இருக்கும். இதனால் எதிர்மின்னூட்டம் கொண்ட அணுக்கள் நச்சுத்தன்மையற்றது என கருதலாம் ஏனெனில் அவை நேர்மின்னூட்டம் கொண்ட அயனிகளை போல் அதிகளவில் உட்கொள்ளப்படுவதில்லை.


        இவ்வாய்வின் வெளிப்பாடுகள் இது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான ஆர்வத்தை தூண்டவல்லது என்கிறார் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையை சார்ந்த உயிரிமருத்துவ பொறியாளர் ஜோர்டான் கிரீன் (Jordan Green). மேலும் அவர் நேர்மின்னூட்டம் கொண்ட மீநுண்  துகள்களின் இவ்வாறான செயல்பாட்டிற்கு ஏற்பான ஆதாரங்கள் இல்லை என்கிறார்.


மீநுண் துகள்களின் நச்சுத்தன்மைக்கு அவற்றின் உருவளவு மற்றும்  செறிவு போன்ற காரணிகளும் இருக்கக்கூடும் என்கிறார் சீனாவை சார்ந்த மருந்தியல் நிபுணர் ஜியான் கிங் கோ (Jian Qing Gao).


        எவ்வாரயினும்  மருந்துபொருட்கள் மற்றும் அவற்றின் ஊர்திகள் ஆகியவற்றின் நச்சுத்தன்மை மற்றும் பக்கவிளைவுகளுக்கான அனைத்து காரணிகளும் கருத்தில் கொண்டு ஆராய்சிகளை மேற்கொள்வது நல்லது.