+9 ஆக்சிசனேற்ற நிலையை உடைய இரிடியத்தின் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு

மா. சண்முகசுந்தரம்
Thu Oct 30 2014 22:20:29 GMT+0300 (EAT)

பன்னாட்டு விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று இதுநாள் வரை கருத்தியல் மாதிரிகளால் கணிக்கப்பட்டு இதுவரை நடைமுறையில் கண்டறியப்படாத +9 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்ட புதிய இரிடிய சேர்மத்தை தயாரித்துள்ளனர். 


இது நாள் வரை அறியப்பட்ட எந்தவொரு தனிமத்திற்கும் அதிகபட்ச ஆக்சிசனேற்ற நிலை +8 ஆகும். வெளிக்கூட்டில் 9 இணைதிறன் எதிர்மின்னிகளைக் கொண்ட இரிடியம் பல்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில் இருக்கவல்லது. பொதுவாக +3 மற்றும் +4 நிலைகளில் சேர்மங்களை உண்டாக்குகிறது. 2009-ல் ஆராய்ச்சியாளர்கள் இரிடியம் ஆக்சைடின் ஒரு வடிவமான IrO4 -னை தயாரித்தனர். அச்சேர்மம் முறையாக வெளிக்கூட்டில் 5d1 எதிர்மின்னி அமைப்பையும் +8 ஆக்சிஜனேற்ற நிலையையும் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான கருத்தியல் மாதிரிகள் வெளிக்கூட்டில் கடைசியாக உள்ள d ஆர்பிட்டல் எதிர்மின்னியை வெளியேற்றி ஒரு நிலையான இரிடியம் ஆக்சைடு நேரயணியை உண்டாக்க இயலும் எனவும் அதன் ஆக்சிசனேற்ற நிலை +9 ஆகக் கருதலாம் எனவும் தெரிவித்தன.

தற்போது சீனாவின் புடன் பல்கலையின் மிங்க்பெய் சோ (Mingfei Zhou) என்பவர் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு ஒன்று இரிடிய உலோக மாதிரியைக் துடிப்பு சீரொளி ஆவியாக்கம் (pulsed-laser vaporization) செய்து [IrO4]+ சேர்மத்தை உருவாக்கி அதனை ஒளிச்சிதைவு நிறமாலையியல் (photodissociation spectroscopy) மூலம் உறுதிசெய்துள்ளனர். மேலும் அவர்களது குழுக் கருத்தியல் கணக்கீடுகள் மூலம் [IrO4]+ அயனியானது மற்ற எதிரயனிகளுடன் சேர்ந்து உப்புகளை உருவாக்கவல்லது எனக் கணித்துள்ளனர். ஆனால் அவையெவையும் இதுவரை ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்: