குண்டர் சட்டம்

இராஜ்குமார்
26/07/2017 12:22PM

இது மக்கள் போராட்டம் அதிகரித்துள்ள காலம். மக்கள் நல்ல தலைவர்களை தேடுகிற காலம். மக்கள் நல்ல அரசியலை எதிர்நோக்கி ஏங்குகிற காலம்.

நன்கு படித்து வேலை பார்க்கும் ஒரு இளைஞன் அரசு அலுவலங்களில் உள்ள இலஞ்சம், இலாவண்யங்களைக் கண்டு வருந்துகிறான். அரசு அதிகாரிகளும் சரி, பொது மக்களும் சரி இலஞ்சங்கள் பழகி, சாதாரணமாகவே எடுத்துக்கொள்கின்றனர். இதைக் கண்டு இவ்விளைஞன் ஏதேனும் செய்து இதனை மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறான்.

தமிழ் நாடு முழுவதும் ஒவ்வொரு நகராட்சி அலுவலகத்திற்கும் செல்கிறான். தவறுகளை குறைதீர் மனுவாக கொடுக்க தயங்கும் மக்களை பின் தொடர்கிறான். பாதித்த மக்களைப் பற்றி தகவல் திரட்டி, இணைய வழியில் அவர்கள் பேரிலேயே அரசின் பல்வேறு இணையதளங்களில் குறைதீர் மனுவாக பதிவு செய்கிறான்.

இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த பதிவு குறைதீர் மனு எல்லாவற்றையும் கொடுத்தது ஒரே நபர் என்று சைபர் கிரைம் காவலர்கள் கண்டறிகின்றனர். அதிரடியாக அந்த இளைஞரின் வீட்டிற்குள் நுழையும் காவலர்கள் அவரை கைது செய்கின்றனர். உடனே ஊடங்கள் விரைந்து இந்த குற்றத்தை பரபரப்பாக்கிறது.

பிரேக்கிங் நுயூஸ், விவாதங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என இந்த விவகாரம் சூடுபிடிக்கிறது. 3 நாட்களுக்கு பிறகு அந்த இளையஞனுக்கு ஜாமின் கிடைத்து வீட்டுக்கு செல்கிறான். பணமோ, வேறோ காரணங்களால் ஊடங்களும் வேறு பிரச்சனைக்கு கவனத்தை திருப்பின.

மூன்று மாதங்கள் கழித்து, மெதுவாக பாதிக்கப் பட்ட மக்களே நேரடியாக குறைதீர்மனுவை இணையத்தில் கொடுக்க ஆரம்பித்தார்கள். மனுக்கள் படிப்படியாக அதிகரித்து தினமும் சுமார் 20 இலட்சம் மனுக்கள் என்ற ரீதியில் நிலை மோசமானது. மீண்டும் ஊடகத்தின் கவனம் இந்த விவகாரத்தில் திரும்பியது.

அரசியல் அதிகாரிகளும், அரசியல்வாதிகள் இணைந்து அனைத்து குறைதீர் இணையதளங்களையும் முடக்குகின்றன. அப்பொழுது அந்த இளையஞனை ஊடங்கள் நேரலையில் பேட்டி காண்கிறது. “அரசு தற்போது குறைதீர் இணையதளங்களை முடக்கிவிட்டதே! இது பற்றி உங்கள் கருத்து?” என்றது ஊடகம். இதற்கு அவன் கூறினான், “குறையை அரசிடம் அது விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எப்படியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இணையத்திலோ, அஞ்சலிலோ அல்லது நேரிலோ கொடுத்தே தீரவேண்டும். அது தீர்த்தாலும் தீர்காவிட்டாலும் குறையை ஆதாரத்துடன் நாம் கொடுக்கவேண்டும். அதுவே வாக்களித்தப்பின் உள்ள ஒரே ஆயுதம்! குறைதீர்க்கவில்லையெனில் எத்தனை சோதனை வந்தாலும் அந்த அரசியலாளர்களுக்கு வாழ்நாளில் எந்த தேர்தலிலும் வாக்கு அளிக்கக்கூடாது என தீர்மானிக்க வேண்டும்! இதுவே மக்களாகிய நமது கடமை! இக்கடமையை செய்யாததால் இன்னல் பட்டுக்கொண்டிருப்பது மக்களாகிய நாம் தானே!”

அடுத்த மூன்றாம் வாரத்தில் அவ்விளைஞன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! மீண்டும் மக்கள் அமைதியானார்கள்! குறைகள் கூறப்படவில்லை! தவறுகள் தடுக்கப்படவில்லை! மீண்டும் மக்களாகிய நாம் இன்னல் படத்தொடங்கினோம்! 12ஆம் வாரத்தில் இளைஞன் மக்கள் விரோத இயக்கத்தினால் கொல்லப்பட்டான். தனிநபர் விரோதத்தினால் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.

இனி மக்களாகிய நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தலில் போடவேண்டிய ஓட்டு!