2012 முன்மொழிவுகள் இராம.கி.. Date: Wed, 29 Aug 2012 12:44:31 +0530 அன்பிற்குரிய பானுகுமார், உறுதியாக உங்கள் உதவியை நாடுவேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். இப்பொழுது “சமண சமய வரலாறும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்” என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பேரா. கே.என்.இராமச்சந்திரன் வெளியிட்டது. தமிழ்நிலையம், 40, சரோஜினி தெரு. தியாகராய நகர், சென்னை - 17 தொலைபேசி: 24364174, 9445265042. இந்த நூல் பெரும்பாலும் சுவேதாம்பரரை, ஓரளவு திகம்பரரை, குறிப்பிடுகிறது. பல இடங்களில் வேறுபாடுகள் தெளிவுறத் தெரிய மாட்டேம் என்கிறது. முதலில் இது புரிந்து, பின்னால் ஆசீவகம், திகம்பர செயினத்தின் வேறுபாடு புரிய வேண்டும். இன்னும் என் நிலை தேடல் நிலை தான். பேரா. க.நெடுஞ்செழியனின் நிலைபாட்டை நான் அறிவேன். எனக்கென்ற நிலைபாடு இன்னும் தெளிவற்றே இருக்கிறது. என்று தெளியுமோ தெரியாது. தமிழ்கச் செயினரின் மரபுகள் பற்றிய நூல்கள், கட்டுரைகள் மிகவும் குறைந்தேயிருக்கின்றன. உங்களைப் போன்றோர் அதை விவரித்து எழுதவேண்டும். மற்றோர் தெளிவுபட அது வழிவகுக்கும். அருங்கலச் செப்பு பற்றிய குழப்பம் அயோத்தி தாச பண்டிதரைப் படித்தாலும் வரும். அவர் அதைப் புத்தச் சார்பு நூல் என்று சொல்லுவார். அந்த நூலிலும் பல்வேறு பாடவேறுபாடுகள் இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். மேலே குறிப்பிட்ட கே. என். இராமசந்திரன் நூலைப் படித்திருப்பீர்கள் என்று எண்னுகிறேன். அது பற்றிய உங்கள் பார்வை என்ன? மற்ற நண்பர்களும் இந்த நூலை வாங்கிப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். சங்க இலக்கியங்களையும், சிலம்பையும், சீவக சிந்தாமணியையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழகச் செயின மரபுகள் தெரிந்து கொள்வது நலம்பயக்கும் என்றே எண்ணுகிறேன். அன்புடன், இராம.கி.. Date: Wed, 29 Aug 2012 10:53:39 +0530 > ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் > ஊழ்வினை உருவெடுத்து ஊட்டும். It takes flesh > and blood and show it through real physical characters. It is not just an > idea but real person.(ந்த உருத்தல் வேறு; உறுத்தல் வேறு.) ஊழ்வினை என்பதில் > செயினப் பார்வையும், ஆசீவகப் பார்வையும் வேறுபடும். இங்கு எது குறிக்கப் > படுகிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலம்பில் எங்கெல்லாம் ”ஊழ்வினை” > என்ற சொல்லாட்சி வருகிறதோ அங்கு மீண்டும் ஒருமுறை படித்து இந்த வேறுபாட்டை > விளக்க வேண்டும். ஒரு நாள் முயல்வேன். இழைப் பிரிவதற்கு மன்னிக்கவும்! வணக்கம் ஐயா. தங்கள் முயற்சிக்கு என்னால் ஆன உதவிகள் (வேண்டுமானால்) செய்கிறேன். பேரா.க.நெடுஞ்செழியனாரின் சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவர் ஆராய்ச்சி நேர்மையான தேடல் போன்றுத் தோன்றவில்லை! தன் ஊகங்களையே சான்றாக எழுதுகிறார். அருங்கலச் செப்பு என்ற ஜைன நூலை, ஆசிவக நூல் என்கிறார். http://banukumar_r.blogspot.in/2006/11/3.html சிலம்பில் கெளந்தியடிகள் கூற்றாகச் சொல்லப்படுபவை ஆசிவகக் கருத்துக்கள் என்கிறார். ஆனால், அதற்கு சான்றுகள் காட்டவில்லை. ஆசிவக இலக்கியங்கள் இல்லாததனால் சான்றுகள் காட்டவில்லை போலும்! மற்றொரு குழுமத்தில் ஆசிவகத்திற்கும், சமணத்திற்கும் வேறுபாட்டை எழுதியிருந்தேன். அவற்றை மேலும், விரித்து என் பிளாக்கில் எழுதுவேன்! இரா.பானுகுமார், சென்னை இராம.கி. Date: Tue, 28 Aug 2012 17:22:24 +0530 ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் > ஊழ்வினை உருவெடுத்து ஊட்டும். It takes flesh and blood and show it through real physical characters. It is not just an idea but real person.(ந்த உருத்தல் வேறு; உறுத்தல் வேறு.) ஊழ்வினை என்பதில் செயினப் பார்வையும், ஆசீவகப் பார்வையும் வேறுபடும். இங்கு எது குறிக்கப் படுகிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலம்பில் எங்கெல்லாம் ”ஊழ்வினை” என்ற சொல்லாட்சி வருகிறதோ அங்கு மீண்டும் ஒருமுறை படித்து இந்த வேறுபாட்டை விளக்க வேண்டும். ஒரு நாள் முயல்வேன். inform பண்ணிட்டேன் = உள்ளுறுத்திட்டேன். உள்ளூறூஉ - உங்களின் புதிய சிந்தனை.ஓர்ந்து பார்த்தாற் சொல்லலாம் என்று தோன்றுகிறது. நம்முடைய பழைய மரபுகளை புதிய பார்வையிற் பார்க்கலாமே? செய்யக் கூடாதா, என்ன? தகவல் தமிழ்ச்சொல் இல்லை. உருது என்று எண்ணுகிறேன். சற்று பலுக்கல் மாறியிருக்கலாம். ஒருகசலத்திற் படித்திருந்தேன். இப்பொழுது மறந்துவிட்டது. அன்புடன், இராம.கி. Date: Tue, 28 Aug 2012 04:31:31 -0700 to inform = உள்ளுறுத்தல் information = உள்ளுறுத்து/உள்ளுறுத்தம் informatics = உள்ளுறுத்தியல் அசை போடுதல் என்பது இதுதானோ அசைக்கு அசை மொழியாக்கம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் எனில் உள்ளுரைதானே? இன்ஃபார்ம் பண்னிட்டேன் என்பதை உள்ளுறுத்தியாச்சு எனலாமா? செவி அறிவுறூஉ எனும் ஒரு துறை இருக்கு.அது போல் உள்ளுறூஉ எனும் புது துறை. தகவல் தமிழ் சொல் இல்லையா?-- வேந்தன் அரசு வள்ளுவம் என் சமயம் Date: Tue, 28 Aug 2012 13:16:40 +0530 அன்பிற்குரிய செல்வா, உள்குதல் என்பதற்கு இரண்டு பொருட்பாடுகள் உண்டு. ஒன்றை மட்டுமே (விதப்பாய் ) இங்கு நான் குறித்தேன். உங்அளிடம் இருக்கக் கூடிய பாவாணரின் வேற்சொற் கட்டுரைகள் - 1 (தமிழ்மண் பதிப்பகம் 2000) என்ற பொத்தகத்தைப் பாருங்கள். அதன் பக்கம் 71 இல் உல் என்னும் உள்ளொடுங்கற் கருத்து வேர்ச் சொற்களும், பக்கம் 78 இல் உள் என்னும் துளைத்தற் கருத்து வேர்ச் சொற்களும் கொடுக்கப் பட்டிருக்கும். துளைத்தற் கருத்து வேர் பற்றிய பாவாணர் குறிப்பு : ---------------------------------------------------- உள் - உள்ளம் -உளம் = உள்ளிருக்கும் மனம் உள்ளுதல் = கருதுதல், நினைத்தல். உள்ளல் = கருத்து உள் - உள்கு. உள்குதல் = நினைத்தல். உள்கு - ஊழ்கு. ஊழ்குதல் - (வ) தியானித்தல் “நின்றனை யுள்கி யுள்ள முருகும்” - (திருவாச. 5:50) “புனிதன் பங்கய மூழ்கி” - (கோயிற்பு. பாயி.7) ----------------------------------------------------- உள்ளொடுங்கற் கருத்து வேர் பற்றிய பாவாணர் குறிப்பு: ----------------------------------------------------- உல் - உள் - உள்கு - உள்குதல் = உள்ளிழிதல், ஒடுங்குதல், மனந்தளர்தல் “சிந்தை யுள்கி” - (இரகு.அயனுதய. 20) உள்கு - உளுக்கு - உளுக்கா உளுக்காத்தல் - 1. சுவர் கீழிறங்குதல் 2. கீழிருத்தல், ஒடுங்கியிருத்தல், இருத்தல். “சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன்” (ஈடு. 6:4:9) உளுக்கா - உளுக்கார். உளுக்கார்தல் என்பது இன்றும் நாட்டுப்புற வழக்காம். உளுக்கார் - உட்கார் - உட்கார்தல் - கீழ் அல்லது இருக்கையில் இருத்தல் எங்ஙனம் அமர்ந்திருப்பினும், நிற்கும் நிலையிலும், உட்கார்ந்திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க. உல்கார் - உட்கார்ந்து (பி.வி.) உட்கார்த்துதல் = உட்கார வைத்தல் உள்கு - உட்கு. உட்குதல் = 1. அஞ்சுதல். K. ugi ‘உல்’ (உ) என்னும் வேர்ச்சொல். “நண்ணாரும் உட்குமென் பீடு” (குறள்.1088). 2 நாணுதல் “சேரன்...............உட்காதே” (தமிழ்நா. ஔவை) உட்கு - உக்கு. ஒ.நோ.: மட்கு - மக்கு உக்குதல் = 1. மெலிதல். துயரத்தால் மெலிதலை உக்கிப் போதல் என்பர். 2. உளுத்தல், உரங்கெடுதல் உக்கின மரம் என்பது உலக வழக்கு. M.ukku உக்கு - உக்கம் - ஒடுங்கிய இடை. M. ukkam “உக்கஞ் சேர்த்திய தொருகை” (திருமுருகு. 108) உக்கல் = 1. உளுத்தது 2. பதனழிவு உக்கம் - உக்கல் - ஒக்கல் - இடுப்பு (எனினுமாம்) உக்கல் - உக்கலை - ஒக்கலை - இடுப்பு (எனினுமாம்.) M.ukkal உக்கி = இரு காதையும் இரு கையால் மாறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெழும் தோப்புக்கரணம் என்னும் தண்டனை வகை உக்கிடு = நாணத்தைக் குறிக்கும் குறிப்புச் சொல் உடுக்கு = இடையெடுங்கு பறை உடுக்கு - உடுக்கை = இடையொடுங்கு பறை “நிலையாய் உடுக்கை வாசிப்பான்” (S.I.I Vol.II 254) உடுக்கை - Skt.Hudukka . உடு - இடு - இடை = ஒடுங்கின அல்லது சிறுத்த உறுப்பு ---------------------------------------------------------- "இடு" என்ற வேர் இன்னும் வெவ்வேறு சொற்களாய் ஒடுங்கற் பொருளைக் குறித்து அந்தப் பொத்தகத்திற் போய்க் கொண்டிருக்கிறது. நான் அவற்றை இங்கு மேலும் குறிக்கவில்லை. உள்>உள்கு>உள்குறு>உள்குறு-தல்>உள்கார்-தல்>உட்கார்தல் என்று மேலே கூறிய சொல் வளரும். மலையாளத்தில் இன்னும் இங்கே உட்கார் என்பதை ‘இவ்விடே உள்ளு’ என்பர். தவிர, உக்கிப் போதல் = 1. உருகிப் போதல் 2. இளைத்துப் போதல் 3. அழுகல் உக்கு விடுதல் = கரைந்து விடுதல் “உப்பியல் பாவையுறையுற்றது போல உக்குவிடு மென்னுயிர்” (கலி. 132.17) (உள்கு = சுருங்குதல், கரைதல் என்ற சொற்களும் உண்டு. உட்குதல் என்ற சொல்லை சிவகங்கை மாவட்டத்திற் கேட்டிருக்கிறேன். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தண்டனை கொடுத்தும், வீட்டில் தந்தையார் தண்டனை கொடுத்தும் பல்வேறு முறை உக்கி போட்டிருக்கிறேன். உள்கு>உட்கு என்பதைப் போலவே வெள்கு>வெட்கு, மள்கு>மட்கு என்பவை உண்டு. வேரை ஒட்டி உகரம் வருவது பல்வேறு சொற்களுக்கு ஆவது தான். நில்>நிற்றல், நிற்குதல் மல்>மல்லல், மல்குதல் செல்>செல்லல், செல்குதல் அன்புடன், இராம.கி.. செல்வா Date: Mon, 27 Aug 2012 11:14:56 -0400 அன்புள்ள இராம.கி ஐயா, இதைப் பற்றி இன்னும் சிந்தித்துப் பார்ப்போம்.... இப்போதைக்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறேன். "உள்குதல் (தானே உள்ளுக்கு சுருங்கி அழிந்து போதல்)" என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படி ஒரு பொருள் இருப்பதை நான் அறியாது இருந்திருக்கின்றேன். உள்குதல் என்றால் சிந்தித்தல் உள்ளு = சிந்து, உள்நின்று எண்ணிப்பார்த்தல் என்னும் பொருளில்தான் நான் பயன்படுத்தியும் வந்திருக்கின்றேன். விரிவாக இதனை விளக்க முடியும் ஆனால் இப்பொழுது என்னால் இயலாது... உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதில் வருவது போல் உள்ளல் என்றால் நினைப்பது உள்நின்று சிந்திப்பது. உள்குவார் உள்ளும் பொருளில் எல்லாவற்றிலும் சிறந்தது எது? என்றெல்லாமும் கேட்க இயலும். உள்ளழியாமை என்பது உள்ளம் அழியாமை, உள்ளுறுதி குலையாமை..... இதை மட்டும் இப்போதைக்குக் குறிப்பிடுகின்றேன்.. பிறவற்றைப் பற்றி பின்னர்.... அன்புடன் செல்வா இராம.கி. Date: Mon, 27 Aug 2012 11:26:46 +0530 ”informatics என்ற சொல்லிற்கு இணையாகத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?” என்று நண்பர் நாக.இளங்கோவன் அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவிற் கேட்டிருந்தார். சில காலத்திற்கு முன்னால் இதற்கிணையாக ”உள்ளுருமம்” என்ற சொல்லைப் பரித்துரைத்திருந்தேன். அது முழு நிறைவு தராதிருந்தது. ”இப்போதைக்குச் சரி; மீண்டும் அசைபோடுவோம், சிந்தனை தெளிந்தால் வேறு பார்ப்போம்” என்று பொறுத்திருந்தேன். இப்பொழுது இளங்கோவன் வினாவிற்குப் பின் பொருத்தங்களை எண்ணிப் பார்த்தேன். உள்ளடக்கம் (content), உள்ளம் (mind), உள்ளமை (reality), உள்ளாப்பு (உட்கருத்து), உள்ளிடம் (inside), உள்ளிருப்பு (internal existence), உள்ளீடு (input, content), உள்குதல் (தானே உள்ளுக்கு சுருங்கி அழிந்து போதல்), உள்ளுறை (internal) போன்ற நெருங்கிய சொற்களையும் இங்கு ஓர்ந்து பார்த்தேன். informatics-ஓடு தொடரும் information-னும் தமிழிற் சரியாகக் கையாளப்படாத, ஆனால் கையாளத் தேவையுள்ள சொல் தான். அதை ”அறிதி, தெரிதி, குறிதி” என்று சொல்வதில் எனக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டு. (நண்பர் செல்வா மன்னிக்க வேண்டும்.) அறிதல், தெரிதல், குறித்தல் போன்றவை to know, to note என்பவற்றிற்கு இணையாயுள்ள தெளிவான தமிழ் வினைச்சொற்கள். இவற்றின் பொருளை நீட்டி to inform என்ற பயனுற் கொணர்வது அவ்வளவு வாகாய் அமையாது. பொதுவாக ஆங்கிலப் பெயர்ச்சொற்களுக்குத் தமிழிணை தேடும் போது, ஒட்டிவரும் வினைகளையும் பார்ப்பது மற்ற தொகுதிச் சொற்களுக்கும் சேர்த்து நலம் பயக்கும். to inform என்பதற்கு இணையைத் தெரிந்தால் வேலை சுளுவாகிவிடும் ”சோ”வென்று மழை பெய்தது - என்ற கூற்றிற்குள் அடங்கியுள்ள information என்ன? “அடர் பெரு மழை” என்பது தானே? எல்லா அலங்காரங்களையும், சோடிப்புகளையும் ஒதுக்கிச் சொல்லியிருக்கும் உரையாட்டின் அடிப்படையைத் தானே நாம் information இல் எதிர்பார்க்கிறோம்? இங்கே மழை என்பது முகன்மையானது. பெரிதென்ற அளவு வேண்டும். பெரிதிற்கு அடையான அடர்த்தியும் வேண்டும். “சோ” என்ற விவரிப்பு வெறும் அலங்காரம். அதை ஒதுக்குவதால் ஒன்றும் குறைந்துவிடாது. பொதுவாக ஒருவரின் உரையில் தெளிந்த பட்டகைகள் (facts) இருக்கும்; கூடவே சில விவரிப்புகள், தற்கருத்துகள், அணிநலன்கள் எனப் பல ஒட்டுக்கள் சேர்த்துச் சொல்லப்பெறும். இந்தத் தற்குறிப்புகளைக் கூடிய அளவு தவிர்த்து வெறும் பட்டகைகளை மட்டும் எடுத்துச் சொல்வதை information என்று சொல்லுகிறோம். சொல்பவருக்கும், கேட்பவருக்கும், மூன்றாமவருக்கும் பொதுப்படையான உள்ளீடாக அது இருக்க வேண்டும். சோ என்ற விவரிப்பு இங்கு இல்லாது போனாலும் மழை என்ற உருவம் நமக்கு விளங்கும். மனத்தில் ஒரு காட்சி விரியும் அடையாளம் காட்டும். காட்சியாய் நமக்கு உறுத்தும்.. உறுத்தல் என்பது உணர்த்தலோடு தொடர்புற்றது. உள்ளுறுத்தல் என்றாலே “inform பண்ணியாயிற்று" என்று புரியும். பண்ணித் தமிழ் இல்லாது நல்ல தமிழிற் சொல்ல வேண்டுமென்றால், நான் உள்ளுறுத்தினேன், நீ உள்ளுறுத்தினாய் அவன்/அவள்/அவர் உள்ளுறுத்தினான்/ள்/ர் நான் உள்ளுறுத்துகிறேன் நீ உள்ளுறுத்துகிறாய் அவன்/அவள்/அவர் உள்ளுறுத்துகிறான்/ள்/ர் நான் உள்ளுறுத்துவேன், நீ உள்ளுறுத்துவாய், அவன்/அவள்.அவர் உள்ளுறுத்துவான்/ள்/ர் என்ற அளவிற் புரிந்துவிடும். இப்பொழுது, to inform = உள்ளுறுத்தல் information = உள்ளுறுத்து/உள்ளுறுத்தம் informatics = உள்ளுறுத்தியல் என்ற சொற்கள் ஆற்றொழுக்குப் போல் அமைந்து விடும். இங்கே “உள்” என்பதைச் சேர்த்தே தீரவேண்டுமா? - என்று கேட்டால், ”ஆம்” என்றே மறுமொழிக்க வேண்டியிருக்கிறது. விதப்பான பொருள் வேண்டுமென்றால் ”உள்” என்ற முன்னொட்டாட்சி முகமையானது. tamil infomatics = தமிழ் உள்ளுறுத்தியல் tamil information technology = தமிழ் உள்ளுறுத்து நுட்பியல் (என்னைக் கேட்டால் தகவற் தொழில் நுட்பத்தைக் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைக்கலாம். தகவல் என்ற பிறமொழிப் பெயர்ச்சொல் துணைவினை போட்டு ஆளவேண்டிய சுற்றிவைத்த நிலைக்கே நம்மை இட்டுச் செல்கிறது.) அன்புடன், இராம.கி. 2012 க்கு முன்புள்ள முன்மொழிவுகள் Information - தகவல் அண்மைப் பேச்சுகள்: ![]() |