கட்டுவிரியன் விடத்திற்கு மூலிகை விட முறிப்பான்

- இரஞ்சனி

செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 23:12 இதிநே
Tuesday, September 18, 2012 23:12 IST

நமது இந்தியாவில் காணப்படும் விஷப்பாம்புகளில் விரியன் வகையைச் சேர்ந்த கட்டுவிரியனும் ஒன்று. இதில் எண்ணெய் விரியன், பனை விரியன், எட்டடி விரியன் என்று பல வகை உண்டு. இதன் விஷம் மிகவும் கொடியது. இந்தப் பாம்புகள் வயல்களிலும், எலிவளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களிலும், நீர்நிலைகள் அருகிலும் வாழ்கின்றன.
கட்டுவிரியனின் நஞ்சு, நரம்பு மண்டலத்தைத் தாக்கும். இந்த நஞ்சு தசைகளை செயல் இழக்கச் செய்துவிடும். இது கடித்தவுடன் சுமார் 6 அல்லது 8 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படும்.

இந்தியாவில் பாம்புக்கடியால் இறப்பவர்களைப் பற்றிய தரவுகள் இல்லை. ஆனாலும் இந்திய மாநிலங்களில் ஆறு தவிர மற்ற மாநிலங்களில் இருக்கும் மருத்துவ மனைகளில் கிடைக்கும் தரவுகளின் படி 2008 ஆம் ஆண்டு 1,364 விஷக்கடி இறப்புகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.

ஆனால் ஒரு சர்வதேச குழுவின் கணிப்புப்படி இந்த எண்ணிக்கை மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட ஒன்றாகும். கிட்டத்தட்ட 45,900 பேர்கள் ஒவ்வொரு வருடமும் பாம்பு விஷக்கடியினால் இறக்கிறார்கள்.

நமது கிராமங்களில் பாம்புக்கடி என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு. இங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியாக விஞ்ஞானிகள் கட்டுவிரியன் பாம்பின் விஷத்திற்கு மூலிகையினால் ஆன ஒரு விஷ முறிப்பானைக் கண்டறிந்துள்ளார்கள்.

மூன்று மூலிகைகளின் சாறுக் கலவையான இந்த மூலிகை விஷ முறிப்பான் சாதாரண விஷ முறிப்பான் களை விட மிகச்சிறந்தது என்றும், இதை கடைகளில் கிடைக்கும் விஷமுறிப்பான்களுடன் கலந்து பயன்படுத்தினால், கட்டுவிரியனின் விஷம் எளிதில் முறிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

கொல்கத்தா பல்கலைக்கழகம், இந்திய வேதி உயிரியல் கழகம் கொல்கத்தாவிலுள்ள விஞ்ஞானிகள் தாவர இனங்களை ஆராய்ந்து, அவைகளினால் தயாரிக்கப்படும் சேர்மங்களை அடையாளம் கண்டு அவைகளின் குண நலன்களையும் அவற்றின் பயன்களையும் கண்டறிந்து பாம்புக்கடிக்கு ஒரு சிகிச்சை முறையை பரிந்துரைத்து இருக்கிறார்கள்.

“விஷ முறிவு சிகிச்சையில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், விஷ முறிப்பான்கள் கிராமப்புற சுகாதார மையங்களில் தேவைப்படும்போது கையிருப்பு இருப்பதில்லை. கிராமப்புறங்களில்தான் அதிகபட்ச மக்கள் பாம்புக்கடியினால் இறக்கிறார்கள்”, என்று தேஜ்பூர் பல்கலைக்கழக திரு ஆஷிஷ்குமார் முகர்ஜி கூறுகிறார். திரு முகர்ஜி பாம்பு விஷத்தைப் பற்றிய சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்.

“எப்போதுமே விஷக்கடிக்கு மாற்று சிகிச்சை கைவசம் இருப்பது நல்லது. ஏற்கனவே உள்ள விஷ முறிப்பானுடன் இவைகளை கலந்து பயன்படுத்தலாம்” என்று திரு முகர்ஜி கூறுகிறார். இவர் வடக்குக் கொலராடோ பல்கலைக்கழகத்தின் விஜயம் செய்யும் விஞ்ஞானியாகவும் இருக்கிறார்.

தாவரம் சார்ந்த கலவைகள் அறை வெப்பநிலையில் மாறுபடுவதில்லை. அதனால் இவற்றை கிராமப்புற மருத்துவ மையங்களில் சேமித்து வைக்க இயலும்.

கடிபட்டவர்கள் கிராமப்புறத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவர்கள் சொல்படி சிகிச்சை மேற்கொள்ளுகிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப்பேர்கள் அரசாங்க மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் முன்பே இறந்து போகிறார்கள். இதன் காரணமாக பாம்புக்கடியால் இறப்பவர்கள் எண்ணிக்கை சரிவர பதிவு ஆவதில்லை. பாம்புக்கடிக்கு அதிக அளவில் பலியானோர் உத்திரப்பிரதேசத்தில் வருடத்திற்கு 8,700 பேர்களும், ஆந்திராவில் 5,200 பேர்களும், பீகாரில் 4,500 பேர்களும் ஆவர் கட்டுவிரியன் பாம்புகள் இந்தியாவின் கிழக்குப்பகுதியிலும், கிழக்காசியாவிலும் அதிகம் காணப்பட்டாலும், இந்தப் பாம்புக்கடி விஷ முறிப்பான்கள் இவ்விடங்களில் கிடைப்பதில்லை.

கண்ணாடி நாகப்பாம்பு, கட்டுவிரியன், ரஸ்ஸல் விரியன் பாம்பு, செதில்கள் உள்ள விரியன் ஆகிய பாம்புகளின் கடிக்கு பயன்படுத்தும் விஷக்கடி முறிப்பான் மருந்துகளையே பட்டை விரியன் கடிக்கும் பயன்படுத்தப்படுகிறது. கிராமப்புற மக்கள் மூலிகை தயாரிப்புகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதிய மூலிகை விஷக்கடிக்கு எதிரான மருந்தில் இருக்கும் முக்கியமான மூலிகை சரசபாரில்லா என்ற தாவரம். இந்தத் தாவரம் மரணத்தைத் தோற்றுவிக்கும் இரசாயனப்பொருளான பாஸ்போலிபேஸ் A2 வை செயலிழக்க வைக்கிறது. நாகப்பாம்பு, கட்டுவிரியன், ரஸ்ஸல் விரியன் பாம்பு ஆகியவற்றின் விஷத்தில் இருக்கும் முக்கியமான பொருள் இது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய பதிவில் வெளியாகி இருக்கிறது.
இதன் உடலின் நிறம் கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். சராசரியாக 1 மீட்டர் நீளம் வரை வளரும். இதன் முதுகெலும்பு நெடுக அறுகோண வடிவிலான பெரிய செதில்களைக் கொண்டிருக்கும். வால் பகுதியில் வெண்ணிறப்பட்டைகள் பொதுவாகக் காணப்படும்.