நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது

சி. ஜெயபாரதன்
Mon Dec 12 2016 16:45:40 GMT-0000 (GMT)

2016 டிசம்பர் 6 இல் முதன்முதலாக, நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி திசை திருப்பப்பட்டு சனிக்கோளின் வளையங்களின் இடைவெளிப் புகுந்து விளக்கமாய்ப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளது.  டிசம்பர் 4 ஆம் தேதியன்று விண்ணுளவி சனிக்கோளின் முகிலுக்கு மேல் 57,000 மைல் [91,000 கி.மீ] உயரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.  அவ்விடத்தில்தான் சனிக்கோளின் சிறு துணைக்கோள்கள் “ஜானஸ்”, எபிமேதிஸ்” [Janus & Epimetheus] உருவாகி மிஞ்சிய  மங்கலான தூசி வளையம் ஒன்று சுற்றி வந்தது.  அது சனிக்கோள் வளையம் F இன் மையத்திலிருந்து [Saturn’s F Ring]  சுமார் 6,800 தூரத்தில் உள்ளது.  காஸ்ஸினி விண்ணுளவியின் காமிராக்கள் வளையத்தைக் கடக்கும் முன்பே படமெடுக்கத் தொடங்கின. அடுத்த வளையத்தின் ஆய்வு டிசம்பர் 11 இல் திட்டமிடப் பட்டுள்ளது. மொத்தம் 20 வளையங்கள் ஏப்ரல் 22, 2017 வரை நெருங்கி ஆராயப்படும்.

கோப்புப் படம் : சனிக் கோளைச் ஆராயும் காஸ்ஸினி விண்ணுளவி (பிக்‌ஷாபே)

காஸ்ஸினி விண்ணுளவிப் பாதையைச் சிறிதளவு கட்டுப்பாடு செய்ததும், எங்களுக்குப் புதிய குறிக்கோள் [Radio Science Experiment] நிறைவேற வழி அமைந்தது. நாசா விண்ணுளவி  சனிக்கோள் வளையத்தின் இடைவழி புகுந்து முதன்முதலாய் வளையங்களை ஆழ்ந்து ஆய்வு செய்தது.ஏர்ல் மைஸ் [காஸ்ஸினி திட்ட ஆளுநர், நாசா ஜெட் உந்து ஆய்வகம்] 

பல்லாண்டுகளாய் நாங்கள் திட்டமிட்டது.  இப்போது அது வெற்றி பெற்று வளைய நோக்குச் சுற்றுப் பாதையில் [Ring-Gazing Orbit] புதிய தகவல் இலக்கம் வருகிறது என்பதை அறியும்போது எங்கள் மனம் துள்ளுகிறது. இந்தப் புல்லரிப்புப் பயணத்தில் இதுவே ஓர் உன்னத தருணம்.லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, ஜெட் உந்து ஆய்வகம்]

இறுதியாக விண்ணுளவி சனிக்கோளின் துணைக்கோள் டைடானை [Titan] நெருங்கிச் சுற்றி [Flyby Swing] விரைவாக்கம் பெறும்.  அதன் பிறகு, 1500 மைல் [2400 கி.மீ.] அகலமுள்ள சனிக்கோளின் உட்புற வளையத்தை ஏப்ரல் 26, 2017 இல் 22 முறைகள் கடந்து தகவல் அனுப்பும்.  முடிவாக செப்டம்பர் 15, 2017 இல் விண்ணுளவி சனிக்கோள் சூழ்வெளியில் விழ விடப்பட்டு, சமிக்கை தீரும்வரைத் தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.

காஸ்ஸினி விண்ணுளவி 1997 இல் ஏவப்பட்டு 2004 இல் சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்து. 12 ஆண்டுகள், சனிக்கோள், அதன் துணைக்கோள்கள், வளையங்கள் பற்றித் தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது.  இப்போது வளையத்தை ஆராயும் இறுதிப் பணியோடு காஸ்ஸினியின் பயணம் முடிவடையப் போகிறது.  காஸ்ஸினி விண்ணுளவியின் சிறப்பான கண்டுபிடிப்புகள் துணைக்கோள் என்சிலாடஸில் [Enceladus] உள்ள கடல் நீரூற்றுகள், டைடான் துணைக்கோளில் உள்ள திரவ மீதேன் [Liquid Methane]