சுற்றுசூழலின் நண்பன் பசுமை தொழிற்நுட்பம்

முனைவர் ஆர். சுரேஷ்
Mon Dec 12 2016 10:07:15 GMT-0000 (GMT)

மாசுபாடு' இந்த வார்த்தையை அறியாவதர்களே இல்லை எனலாம். ஆம், சூழ்நிலை மாசுபாட்டின் வகைகளையும் அதன் விளைவுகளையும் ஏறத்தாழ, எல்லோரும் உணர்ந்துள்ளோம். உன்மையில், மாசுபாட்டை அறிந்துக்கொள்வதாலோ, விளைவுகளின் காரண காரியங்களை புரிந்து கொள்வதாலோ, சுற்றுசூழல் மாசினை குறைத்திட முடியுமா? இல்லை!
கோப்புப் படம்: விக்கிப்பீடியா

மாசுபாட்டினை குறைக்கும் வழிமுறைகளை கற்று அதனை கைக்கொண்டு வாழ்வதன் மூலமே, தேவையற்ற மாசுக்களை நீக்கி, சூழ்நிலையின் நண்பனாக முடியும். மாசுபாட்டினை குறைக்கும் பலவகை வழிமுறைகளை வகுத்துள்ளனர் இத்துறை சார்ந்த வல்லுனர்கள். இதில் ஒன்று தான் "பசுமை தொழிற்நுட்பம்". 'பசுமை' என்ற சொல் இயற்கை வளத்தை குறிக்கிறது. இதற்கு 'நன்மை' என்ற பொருளும் உண்டு. 'தொழிற்நுட்பம்' என்பது அறிவியலின் நடைமுறை பயன்பாடே! எனவே, பசுமை தொழிற்நுட்பம் என்பது, சுழ்நிலைக்கும், நமக்கும் நன்மை தரும் தொழிற்நுட்பத்தை குறிப்பதாகும். மாசுபாடுகளை குறைத்து சுற்றுசூழலின் நண்பனாக விளங்கும் இத்தொழிற்நுட்பத்தினை, தூய தொழிற்நுட்பம் அல்லது சுற்றுசூழல் தொழிற்நுட்பம் என்றும் அழைக்கின்றனர்.

பசுமை தொழிற்நுட்பம் என்பது ஏதோ ஒரு புதுவகை தொழிற்நுட்பம் அல்ல. ஏற்கனவே, நடைமுறை பயன்பாட்டில் இருக்கும் தொழிற்நுட்பத்தில் சிறு மாற்றத்தை புகுத்துவதன் மூலமோ அல்லது மாற்று வழியினை கடைபிடிப்பதன் மூலமோ, அத்தொழிற்நுட்பத்தினை இயற்கைக்கு உகந்த தொழிற்நுட்பமாக மாற்றும் உத்தியே!

உதாரணமாக மின்உற்பத்தி முறையை பார்போம். மின்சாரமானது பெருமளவு நிலக்கரியிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறையின் பக்கவிளை பொருட்களாக வெளிப்படும் கார்பன-டை-ஆக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்களாளும், தூசுப்பொருளினாளும் காற்று மண்டலம் மாசுபாட்டினை சந்திக்கின்றது. இதனால் இவ்வகை மின்னுற்பத்தி முறைக்கு மாற்றாக சூரிய ஒளியிலிருந்து மின்னுற்பத்தி செய்யும் தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை தொழிற்நுட்பம் மூலமாக மாசுபாட்டை குறைக்கலாம். எனவே, சூரிய ஒளியிலிருந்து மின்னுற்பத்தி செய்யும் தொழிற்நுட்பமானது பசுமை தொழிற்நுட்பம் ஆகும். இம்முறையின் மின்உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் முயற்ச்சிகளும் ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாசுபாட்டை குறைப்பதே பசுமை தொழிற்நுட்பத்தின் தலையாய குறிக்கோளாக இருப்பினும், அதன் படிப்படியான குறிக்கோள்களை பின்வருமாறு காண்போம்.

1. நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி. அதாவது, இயற்கை வளங்களை சேதப்படுத்தாமலும், முற்றிலும் அழிக்காமலும், மனித சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் முறையினை உருவாக்குதல். இதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு தேவையான இயற்கை மூலப்பொருட்களை விட்டுவைப்பதோடு, மாசுபாடற்ற சுற்றுபுறத்தையும் உருவாக்கிட முடியும். 

2. பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுபயன்பாட்டிற்கோ அல்லது மறுசுழற்ச்சிக்கோ உட்படுத்துதல். 

3. பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு நிலைகளில் மாற்றங்களை புகுத்துவதன் மூலம், கழிவுகளின் உற்பத்தி மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைத்தல். 

4. நமக்கும், சூழ்நிலைக்கும் பாதகத்தினை ஏற்படுத்தும் தொழிற்நுட்பத்தினை மாற்றி அமைத்தல்.

5. பொருளாதாரத்தை பெருக்ககூடிய, நடைமுறை பயன்பாட்டிற்கு எளிமையான, அதே சமயத்தில் சுற்றுசூழலையும் பாதிக்காத, நம்பகத்தன்மை கொண்ட தொழிற்நுட்பத்தினை உருவாக்குதல். 

 பயனுள்ள இத்தொழிற்நுட்பமானது, பின்வரும் பல்வேறு துறைகளிலும் பயன்படுகிறது. 

 1. ஆற்றல் உற்பத்தி துறை. உதாரணமாக, படிம எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை பயன்படுத்துதல். 

 2. கட்டிடத்துறை. அதாவது, மனிதனுக்கும், இயற்கைக்கும் நிலையான வளர்ச்சி தரும் வகையில் கட்டிடங்களை வடிவமைத்தல். 

3. சுற்றுசூழலிற்கு உகந்த நுகர்வு முறை. சூழ்நிலையை பாதிக்காத உற்பத்தி முறையினை கொண்ட பொருட்களை வாங்குதல். உதாரணமாக, நெகிழிகளின் உபயோகத்தினை தவிர்த்து துணிபைகளை வாங்கி பயன்படுத்துதல். 

 4. பசுமை வேதியியல். இயற்கையை பாதிக்காத வகையில் வேதிப்பொருட்களை வடிவமைத்து உபயோகித்தல். 

 5. பசுமை நானோ தொழிற்நுட்பம். எல்லா துறைகளிலும் முத்திரை பதித்துள்ள நானோ தொழிற்நுட்பத்திலும் பசுமை தொழிற்நுட்பத்தினை பயன்படுத்துதல். அதாவது, மாசுபாட்டை ஏற்படுத்தாத நானோ பொருட்களை பசுமை முறையில் தயாரித்தல். 

 எல்லா வகையிலும் வளத்தை கொடுக்கும் தூய தொழிற்நுட்பமாம், பசுமை தொழிற்நுட்பத்தினை அனைத்து துறைகளிலும் புகுத்திட வேண்டும். இதன் மூலம் சுற்றுசூழலை காத்து நாமும் நம்முடைய செயல்களும் இயற்கையின் உற்ற நண்பனாகிட வேண்டும்.