கண்களும் தோலும்

- இலக்குவனார் திருவள்ளுவன் 


செப்டெம்பர் 2, 2012  13:41  இந்தியத் திட்ட நேரம்

கண்கள்

கண்களுக்குத் திட்டி, விழி, அம்பகம், நாட்டம், நோக்கு, பார்வை முதலிய பல பெயர்கள் உண்டு. பெரிய கதவிற்குள் அமையும் சிறிய கதவு திட்டிஎனப்படும். கோயில்களிலும் சிறைச்சாலைகளிலும் இவ்வாறு இப்பொழுது காணப்பெறும் இத்தகைய உட்கதவுகள் திட்டிவாசல் என்றே அழைக்கப்பெறும். கண்கள் இத்தகைய அமைப்பைக் கொண்டுள்ளமையால் திட்டி எனப்படுகிறது. (திட்டி என்பதே பிறமொழிகளில் திஃசுட்டி என்றும் திருஃசுடிஎன்றும் மாறியது.) பார்வை, நாட்டம், நோக்கு முதலியவற்றிற்குக் காரணமான உறுப்பு ஆகு பெயர்களாக அவ்வப் பெயர்களிலேயே அழைக்கப்பெறுகிறது. அம்பு போன்ற பார்வையின் அடிப்படையில் அம்பகம் எனப்படுகிறது.

கண்மணிக்குத் தாரை என்றும் கண்ணிமைக்கு விளிம்பு என்றும் புருவத்திற்குப் புதல், புகுடி என்றும் பெயர்கள் உள்ளன.

கண்கள் ஐம்புலன்களில் ஒன்றாகும். பார்வைக்கு மட்டுமன்றி முக அழகிற்கும் இவை துணை செய்கின்றன. கண்கள் ஒளியுடன் தெளிவாக இருப்பதேஉடல் நலத்தின் அடையாளம். உடல் சோர்வினைக் கண்கள் வெளிப்படுத்துகின்றன. மஞ்சள் காமாலை நோய், மூளையில் ஏற்படும் அழுத்த நோய்,குருதி அழுத்த நோய், முதலிய பல நோய்களின் அறிகுறிகளைக் கண்கள் மூலம் காணலாம். கண்கள் முதன்மை அறிந்தே கல்வியைக் கண்களுடன்ஒப்பிடுகின்றனர்.

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
என்பது புலவர் ஔவையார் வாக்கு.

கண்கள் முகத்தில் மூக்கின் இருபுறத்திலும் உள்ள எலும்புக் குழிகளில் அமைந்துள்ளன. இவற்றின் பாதுகாப்பிற்குக் கண்ணிமைகளும் அசைவிற்குத்தசைகளும் இயக்கத்திற்கு நரம்புகளும் (கண்களுடன்) பொருந்தியுள்ளன.

கண் எலும்புக் குழி கூர்நுனிக் கோபுர வடிவம் கொண்டது. நெற்றி எலும்பு, மேல்தாடை எலும்பு, கண்ணீர்ப்பை எலும்பு, மூக்கடி எலும்பு, ஆப்புஎலும்பு, கன்ன எலும்பு, அண்ண எலும்பு முதலிய ஏழு எலும்புகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கண், கோளங்களின் பகுதிகளால் ஆனது. இதன் முன்புறம் ஆறில் ஒரு பங்கான சிறுகோளத்தின் பகுதியாகும்; பின்புறம் ஆறில் ஐந்து பங்கு ஆனபெருங்கோளத்தின் பகுதியாகும். இப்பகுதி கண் கோளஉறை என்னும் மெல்லிய இழை உறையால் மூடப்பட்டுள்ளது. கண்ணின் நீள விட்டமும்படுக்கை விட்டமும் 24 கீழ்க்கோல்(மி.மீ.) ஆகும்; செங்குத்து விட்டம் 23.5 கீழ்க்கோல்(மி.மீ.) ஆகும். குழந்தையின் கண் விட்டம் 17.5கீழ்க்கோல்(மி.மீ.); பன்னிரண்டாம் அகவையில் 20 கீழ்க்கோல்(மி.மீ.); 20 ஆம் அகவையில் முழுவளர்ச்சி அடையும். கிட்டப்பார்வை உள்ளவரின்கண்ணின் நீள விட்டம் 20 கீழ்க்கோல்(மி.மீ.)க்கும் குறைவாக இருக்கும். எட்டப்பார்வை உள்ளவர்களுக்குக் கண்விட்டம் மிகுதியாக 27கீழ்க்கோல்(மி.மீ.) அளவு கூட இருக்கும்.

கண்விழித்திரையில் முன்பரப்பு தட்டை உயிர்மிகள் முன்பரப்பு இழைமம், இழைம அடுக்கு, பின்பரப்பு இழைமம்,பின்பரப்பு உயிர்மிகள் எனஐந்துஅடுக்குகள் உள்ளன.

கண்ணின் முன்நீர்மிக்கும் பின்நீர்மிக்கும் இடையில் கண்படிகம் உள்ளது. இதனையே கண்வில்லை என்றும் ஒளிவில்லை என்றும் கூறுவர். இஃது ஒளிஊடுருவும் தன்மை உடையது. ஒளி ஊடுருவக்கூடிய உறையினால் இது மூடப்பட்டிருக்கும். இது நீண்டு சுருங்கக் கூடிய இழுவைத்தன்மை கொண்டது.கண்படிகம் ஏறத்தாழ 9-10 கீழ்க்கோல்(மி.மீ.) விட்டம் உடையது; பருமன் 4-5 கீழ்க்கோல்(மி.மீ.) ஆகும்.

இரு திங்கள் கருநிலையில் ஏறக்குறைய உருண்டையாகவும், சிறிது சிவந்த நிறத்துடனும் எளிதில் உடையக்கூடிய நிலையிலும் இருக்கும். குழந்தைபிறக்கும் பொழுது ஏறத்தாழ 6.5 கீழ்க்கோல்(மி.மீ.) விட்டம் உடையதாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் கண்படிகம் வெளிர் மஞ்சள் நிறமாகவும்பின்னர் நிறமற்றதாகவும் உறுதியாகவும் மாறுகிறது. முதுமையில் மரப்பிசின் நிறமாக மாறும். கண்ணிமையானது தோல், தோலடி, இழைம அடுக்கு,தசை அடுக்கு, தசையடி அடுக்கு, கண்ணிமைச் சவ்வு ஆகிய ஆறு அடுக்குகள் உள்ளன.

கண்ணிமைகளின் உராய்வற்ற அசைவுகளுக்கும் கண்ணின் படிகப்படலத்தின் பாதுகாப்பிற்கும் கண்ணீர்ச் சரப்பியில் சுரக்கும் நீரே கண்ணீர் ஆகும்.

ஒளியை உள்ளே விடும் விழி வெளிப்படல முன்பகுதி விழிவெண்படலம் எனப் பெறும்.

தோல் 

உடலுக்கு பாதுகாப்பு அளிப்பது தோலே ஆகும். தொடு உணர்வு, வலி, வெப்பம்,குளிர், அழுத்தம் முதலியவற்றை இஃது உணர வைக்கிறது. வியர்வை மூலம் கழிவு நீக்கம் செய்வதுடன் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவுகிறது.

உடலுக்குப் போர்வை போல் அமைவதால் போர்வை என்றும் தோல் உடலுக்குப் புறப்பகுதியாய் அமைவதால் புறணி என்றும் தோல் உரிகின்ற காரணத்தால் உரிவை என்றும் அதள், ஒளியல், வடகம், பச்சை, ஒளி முதலிய பல பெயர்களால் தோலின் தன்மைக்கேற்பவும் பெயரிட்டுள்ளனர். மனிதர்களின் தோல்களுக்கும் பிற உயிரினங்களின் தோல்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருந்தனர். தோல் வேலை செய்பவர்களைப் பறம்பர் என அழைத்தனர். காலணி வகைகள், கைப் பைகள், கருவிகளின் உறைகள், இசைக்கருவிகளின் உறைகள், ஆயுதங்களின் உறைகள், ஆடைகள், திரைகள், கூடாராம், உருவப் பொம்மைகள் முதலியவற்றைத் தேர்ச்சியாகச் செய்யும் திறமையும் பெற்று இருந்தனர்.தோல் ஒரு புலன் உறுப்பு. இது புறத்தோல், அகத்தோல், அடித்தோல் என மூன்று அடுக்குகள் ஆனது. புறத்தோல்மெய்ம்மி (திசு) அடுக்குகளால் ஆனது. புறத்தோலில் மயிர்க் கால்களும் வியர்வைத் துளைகளும் உள்ளன. அகத்தோல் இணைப்பு மெய்ம்மிகளால் ஆனது. இதில் வியர்வைச் சுரப்பிகள், குருதி நாளங்கள்,எண்ணெய்ச் சுரப்பிகள், மயிர்க்கால் முடிச்சுகள் உள்ளன. அகத்தோலுக்கு அடியில் அமைந்ததே அடித்தோல். இதில் தொகுப்பு உயிர்மிகள் காணப்படுகின்றன. 

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்