எத்தனை எத்தனை மலர்கள்

இலக்குவனார் திருவள்ளுவன் 


செப்டெம்பர் 7, 2012  18:16  இந்தியத் திட்ட நேரம்

பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்தனர். எனவே, இயற்கையைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர். இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட இயலாவண்ணம், மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர். வாழும் முறைமைக்கு அடிப்படையான நானிலப்பாகுபாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர். இவையே பின்னர்த் திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று. (படங்கள் தந்த விக்கி பொதுவிற்கு நன்றி)
File:முல்லைப் பூச்சரம்.jpg 
பூக்களை உவமையாகவும் உருவகமாகவும் கையாளும் வண்ணம் மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து நோய் நீக்கவும் தளர்ச்சி போக்கவும் ஊட்டம் பெறவும் பயன்படுத்தியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கபிலர் தம்முடைய குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கியத்தில் வரிசையாக 99 வகைப் பூக்களைக் குறிப்பிடுகின்றார். இந்நூல் ஆரிய அரசர் பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக இயற்றப் பெற்றது. எனவே, இந்நூலில் பூக்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றுள்ளதால் தமிழர் வாழ்வில் பூக்கள் பெற்றுள்ள முதன்மை இடத்தை எளிதில் அறியலாம்.

கபிலர் பெருமானால் குறிக்கப்பெறும் பூக்கள் வருமாறு : -
 1. அடும்பு
 2. அதிரல்
 3. அவரை
 4. அனிச்சம்
 5. ஆத்தி
 6. ஆம்பல்
 7. ஆரம்
 8. ஆவிரை
 9. இலவம்
 10. ஈங்கை
 11. உந்தூழ்(பெருமூங்கிற்பூ)
 12. எருவை
 13. எறுழம்
 14. கஞ்சங்குல்லை
 15. கரந்தை
 16. கருவிளம்
 17. காஞ்சி 
 18. காயா
 19. காழ்வை(அகிற்பூ)
 20. குடசம் (வெள்ளை நிற ப்பாலைப்பூ)
 21. குரவம்
 22. குருக்கத்தி
 23. குருகிலை(முருக்கிலை)
 24. குருந்தம்
 25. குவளை
 26. குளவி
 27. குறிஞ்சி
 28. குறுநறுங்கண்ணி
 29. கூவிரம்
 30. கூவிளம்
 31. கைதை
 32. கொகுடி
 33. கொன்றை
 34. கோங்கம்
 35. கோடல்
 36. சண்பகம்
 37. சிந்துவாரம்
 38. சிறுசெங்குரலி (கருந்தாமக்கொடிப்பூ)
 39. சிறுபூளை
 40. சிறுமாரோடம்(செங்கருங்காலி)
 41. சுள்ளி
 42. சூரல்
 43. செங்காந்தள்
 44. செங்கொடுவேரி
 45. செம்மல்
 46. செருந்தி
 47. செருவிளை
 48. சேடல்
 49. ஞாழல்
 50. தணக்கம்
 51. தளவம்
 52. தாமரை
 53. தாழை
 54. தில்லை
 55. திலகம்
 56. தும்பை
 57. துழாய்
 58. தேமா (தேமாம்பூ)
 59. தோன்றி
 60. நந்தி
 61. நரந்தம்
 62. நள்ளிருள்நாறி(இருவாட்சிப்பூ)
 63. நறவம்
 64. நாகப்பூ
 65. நெய்தல்
 66. பகன்றை
 67. பசும்பிடி
 68. பயினி
 69. பலாசம்
 70. பாங்கர்
 71. பாதிரி
 72. பாரம்
 73. பாலை
 74. பிடவம்
 75. பிண்டி
 76. பித்திகம்
 77. பீரம்
 78. புழகு(எருக்கம்பூ)
 79. புன்னாகம்
 80. புன்னை
 81. போங்கம்(மஞ்சாடிப்பூ)
 82. மணிக் குலை
 83. மணிச்சிகை(செம்மணிப்பூ)
 84. மராஅம்(மரவம்)
 85. மருதம்
 86. மா
 87. முல்லை
 88. மௌவல்
 89. வகுளம்
 90. வஞ்சி
 91. வடவனம்
 92. வழை
 93. வள்ளி
 94. வாகை
 95. வாழை
 96. வானி
 97. வெட்சி
 98. வேங்கை
 99. வேரல்(சிறுமூங்கிற்பூ)

பழந்தமிழர்கள் அறிவியல் துறைகளில் இன்றைக்கும் பிறர் எட்டாத உயரத்தைத் தொட்டு உள்ளனர் என்பதற்கு அவர்கள் உணர்த்திய பயிரறிவியலே சான்றாகும். ஆரம் - சந்தனம், துழாய் - துளசி, நரந்தம்- ஆரஞ்சு, பித்திகம் - பிச்சிப்பூ, பீரம்- பீர்க்கம்பூ, என்பன போன்று சில பூக்கள் வேறு பெயர்களில் இப்போது குறிக்கப்பெற்றாலும் கபிலர் பெருமான் குறிக்கும் பூக்கள் யாவும் இப்போதும் உள்ளன என்பதும் சிறப்பானதாகும். அதற்கு எடுத்துக்காட்டாக மலர்களின் பலவகை நிலைகளை வேறுபடுத்தி உள்ளமையைக் கூறலாம்.
File:தாய்லாந்து செம்பருத்தி.jpg 
பூக்களின் நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என ஐந்து வகையாகப் பகுத்தனர்; பின்னர் மலருக்கு அடுத்து அலர் என்னும் நிலையையும் பகுத்தனர்.

பூ தோன்றும் நிலை அரும்பு எனப்படுகிறது. மேலும் முல்லை அரும்பு அல்லது மல்லிகை அரும்பு போல் சிறியதாயும் கூர்மையாயும் இருப்பது அரும்பு; அடுக்கு மல்லிகை அரும்பு போல் சற்றுப் பெரியதாகவும் மொட்டையாகவும் இருப்பது மொட்டு; தாமரை அரும்பு போல் பெரிதாக இருப்பது முகை; இதுவும் பசு முகை, எதிர்முகை, கொழுமுகை என மூவகையாகும்.

பூக்கள் விரியாத நிலையில் இதழ் பொதிந்து இருக்கும்; அஃதாவது மகரந்தப் பைகள் அவிழாமல் பொதிந்து இருக்கும்; அஃதாவது கருவை ஏற்றுக் கொள்ளும் கருப்பை பொதிந்து கிடக்கும்; இந்நிலை போது எனப் பெறும். பொதிந்து கிடப்பது போது என்றாயிற்று எனக் கூறலாம். (பொதிந்து வைத்தல் என்றால் பொட்டலம் கட்டுவது போல் ஒன்றை உள்ளே வைத்திருத்தல்.)

மல் என்பதற்கு வளம் என்றும் பொருள் உண்டு. எனவே தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையான வளம் உடையதான பூவின் நிலை மலர் எனப்பெறும். (இவ்வாறு வளத்தை உருவாக்காதவை - மல் அற்றவை - மலடு எனப்பெறும்.)

மலர்ந்த பின்பு தேன் நீங்கி, மகரந்தம் கெட்டு வாடிப்போன - அலர்ந்து போன - பூ அலர் எனப் பெறும்.

File:Pink tulips closed.jpg 
பூ வாடிய நிலை செம்மல் ஆகும்.

மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே வீழும் பூ வீ எனக் குறிக்கப் பெறும்.

மகரந்தப்பை, கருப்பை முதலியன பூக்களின் அடிப்படை உறுப்புகளாகும். இவை உரிய பக்குவ நிலைக்கு வரும்வரை, இவற்றைத் தழுவி இருப்பது - புல்லி இருப்பது புல்லி எனக் கூறப்பெறுகிறது. அவ்வாறு புல்லுதல் அல்லாதது (அல்+இ) அல்லி ஆகும். சுருக்கமாகக் கூறுவதாயின் அகஇதழ் அல்லி என்றும் புற இதழ் புல்லி என்றும் சொல்லப்படும்.

பூக்காம்பு - தண்டு சிறியதாக இருப்பது காம்பு எனப்பெறும்.

பருமனாகவும் மென்மையாகவும் இருக்கும் காம்பு தாள் அல்லது தண்டு எனப்பெறும். உள்துளையுள்ள காம்பு நாளம் எனப்பெறும்.

அக்காலத்தில் தமிழ்நாட்டவரிடமே இருந்த இந்நுட்பமான அறிவியல் அறிவு இக்காலத்திலும்கூடப் பிறமொழிகளில் அமையவில்லை.

பூவின் பாகங்கள்

 1. புல்லி வட்டம்
 2. அல்லி வட்டம்
 3. மகரந்த வட்டம்
 4. சூலகம் 

என நான்கு வகைப்படும்.

இவற்றுள் புல்லி வட்டம் பூவின் புற அடுக்காகும். இது பச்சை நிறத்தில் இருக்கும். அல்லி வட்டம் என்பது பூவிதழின் தொகுப்பாகும்.

மகரந்தவட்டமானது

 1. அல்லி
 2. மகரந்தப்பை
 3. மகரந்த இழை
 4. சூல்
 5. புல்லி
 6. பூத்தளம்

எனப் பகுக்கப்படும்.

 1. சூலகத்தில் 
 2. சூல்முனை
 3. சூல்தண்டு
 4. சூல்பை 

ஆகியவை உள்ளன.

இப்பாகுபாட்டை எல்லாம் பண்டைக்காலத்திலேயே பாங்குடன் நம் முன்னைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதுதான் தமிழில் உள்ள அறிவியல் வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.


Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்