மனித உடல்

(Human Body)

(அன்றாட வாழ்விற்கான அறிவியல் தமிழ்)

- இலக்குவனார் திருவள்ளுவன்   

(ஆகத்து 27, 2012 11:41   இந்தியத்திட்ட நேரம்)

பழந்தமிழர்கள் உடலுறுப்புகளுக்கு வைத்துள்ள பெயர்களும் அவர்களது அறிவியல் அறிவை உணர்த்துன்றன. சான்றாகச் சிலவற்றைப் பார்ப்போம். ‘உடு’ என்பதன் அடிப்படையில் உயிருக்கு உடுப்பு போல் அமைந்தது உடல் எனப்பட்டது. பண்டத்தை உள்ளே வைத்துக்கட்டப்பட்டது பொதி. அதுபோல் உறுப்புகளை அடக்கிய உடல் ‘பொதி’ எனப்பட்டது. கட்டப்படுவதை யாக்கை என்பர். தோல், நரம்பு, எலும்பு, தசை, குருதி முதலிய தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பதால் யாக்கை என்றனர். கூடை முடையப் பெற்றிருப்பது போல் ‘தாதுக்களால்’ முடையப்பட்டது முடை என்று சொல்லப்பட்டது. உயிர் புகுவதற்குரியது உடல்; ஆதலின் உடலைப் புகல் என்றனர்;திரண்டு அமைந்ததைப் பிண்டம் என்பர்; உயிர்மிகளால் திரண்டுஅமைந்த உடல் பிண்டம் எனப்படுகிறது. இவை போன்று அறிவியல் உண்மையின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் உடலுக்குக் குறிக்கப்பெற்றுள்ளன.

உடலின் உள் உறுப்புகளுக்கு வாயிலாக அமைந்துள்ள உறுப்பிற்கு வாய் எனப் பெயர் இட்டுள்ளனர். உதடு என்றால் விளிம்பு என்று பொருள். வாயின் விளிம்பாக அமைவதால் உதடு என்றனர். உதடுகள் மலரிதழ்கள் போல் மென்மையாக உள்ளமையால் இதழ்கள் என்று குறிக்கப் பெற்றன. அதர் என்றால் வழி என்றுபொருள். உள்ளுறுப்புகளுடன் தொடர்பு கொள்ளவழியாக அமைவதால் இதழ்கள் அதரங்கள் என்று அழைக்கப் பெற்றன. முகத்தில் ‘தொளை’ போன்ற பகுதியில் அமைந்த உறுப்புகள் அப்பொருளில் கண்கள் எனச் சுட்டப் பெற்றன. கட்டடத்தின் மேனிலை முகப்பிற்கு நெற்றி என்று பெயர். உடலின் மேனிலையில் முன்பகுதியில் அமைந்துள்ள உறுப்பு நெற்றி எனப்பட்டது. துளை அல்லது குழியுடைய பொருள்களைக் கன்னம் என்பர். எனவேதான் சுவரில் திருடர்கள் போடு துளைக்குக் 'கன்னம் வைத்தல்’என்கின்றனர். இதுபோல் முதலில் துளையுள்ள காதிற்குக் கன்னம் என்று பெயர் வைத்திருந்துள்ளனர். பின் அப்பெயர் முகத்தில் குழிவாகத் தோன்றும் கதுப்பிற்குக் கன்னம் எனப் பெயராக மாறியது.

உடலுக்கு முகப்பாக அமைவதால் முகம் என்றும் முகத்தில் முனை போல் உள்ளதால் மூக்கு என்றும் பெயர் வைத்துள்ளனர். வாயின் இறுதிப் பகுதி என்ற பொருளில் வயிறு என்றும் இரை தங்கும் பை என்ற பொருளில் இரைப்பை என்றும் பெயரிட்டனர்.
நுரை போன்ற தோற்றத்தில் பல காற்றறைகள் கொண்ட உறுப்பிற்கு நுரையீரல் என்று பெயரிட்டனர். உடலின் கால் பாகத்தில் அமைவதைக் கால் என்றும் அரைப்பகுதியில் அமையும் உறுப்பிற்கு அரை என்றும் உடலின் நடுவாகிய இடைப்பகுதியில் அமைவதால் இடை என்றும் பெயரிட்டனர். குருதி ஓட்டத்தில் நடுவாக இருந்து செயல்படும் உறுப்பிற்கு நடு என்னும் பொருளின் அடிப்படையிலான நெஞ்சம் என்று பெயரிட்டனர். அகன்ற பரப்புடைய உடல் பகுதி என்பதால் 'அகலம்’ என்றனர்; பின்னர் அகலம் என்னும் பொருளுடைய'மார்பு’ என்னும் பெயரையும் சூட்டினர். உடலின் பக்கவாட்டில் அமைந்த உறுப்புகளுக்குப் பக்கம் என்னும் பொருளும் செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைவதால் செயல் என்னும் பொருளும் வரும் வகையில் கைகள் எனப் பெயரிட்டனர்.
உடலில் தொடுத்தாற்போல் கால்கள் அமைய இணைப்பாக அமையும் உறுப்புகளுக்குத் தொடைகள் எனப் பெயரிட்டனர்.
உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடனிருப்பது உடல் அல்லது உடம்பு எனப்பட்டது. மேலும், முழு உடல் உடம்பு எனவும் தலையற்ற உடம்பு உடல் எனவும் உடலற்ற தலை முண்டம் எனவும் உயிரற்ற உடம்பு உடலம் எனவும் கூறப்பெறும். குஞ்சு பொரித்தபின் அதனுடனான தொடர்பு நீங்கப் பெற்றதே முட்டைக் கூடு. உயிர் நீங்கிய பின் தொடர்பற்றுப் போகும் உடம்பும் குடம்பை அல்லது கூடு எனப் பெற்றது.

உயிர் நீங்கிய உடல், கட்டை போல் கிடப்பதால் ’ கட்டை’ என்றும் கூறினர். கட்டை போல் எரிவது அல்லது மண்ணோடு மண்ணாகப் போவதுதானே உடல்!
இவ்வாறு அனைத்து உறுப்புகளின் பெயர்களும் தோற்றம் அல்லது செயல்முறை அடிப்படையில் அறிவியல் உணர்வுடன் சூட்டப்பட்டுள்ளன.

(புதிதாய் முளைக்கும் மீசைக்கு அருப்பம் என்றும்மெல்லிய அரும்பு மீசையைக் கரிக்கோடு என்றும் வளர்ந்த மீசையை மீசை என்றும் குறித்தனர். தாடி‘அணல்’ எனப்பெறும்.)

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்